அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஓசை

பெருங்காலம்,
காலை பிறந்த காகக்குஞ்சாய்ப்
பிதற்றுவதுபோல என் வெளியோசை.
வடிகட்டல் விழைவுற்றேன்;
பின்,
சிறு கடுகுக்கடுப்புக்கும் வெடிப்புறமுடியாது,
அடி ஆடி அமுங்கி,
சிறுகத் தன்னுட் பொரிந்து
பொறிந்தது உள்ளே நீர்க்குமிழி.
முன்னே,
என்னோசையிற் கேட்காதுபோன
பிறர் உரைப்புகள் செவிவிழுந்து, இன்று.
தொனி, தொடர், மீடிறன்,
அதிர்வு, பரிவு, உரப்பு
எது, எவ்வளவு, எவரால், எதற்காய்,
என்னால் உணர்ந்தறியமுடியவில்லை.
இடிமின்னல் மட்டும் காண்
மாரி மழையாய்த் தெளிவற்று ஓசை;
இவ்வோசைக்குப் பாஷை
இருப்பதாய்த்தெரியவில்லை,
ஆசை மட்டுமே தன் அகம்பேசி;
அவ்வப்போது,
தனிமனிதப்பூசைகளும் ஆங்காங்கே உள்ளடங்கும்;
உண்மை, உருத்திரிபு வெளிக்காட்டாது;
ஆங்காரஞ்சேர் ஆதிக்கம் மட்டுமே
காடோடு கலங்கல் ஓடையாய்க்
கண்மூடி, கரைமேவி ஓடுவதாய்
அறிதியாய் அறியமுடிந்ததென்னால்.
இதுவே என் எக்கத்தாளமாகவும்
எவர்க்கும் எண்ண எடுத்தெறிவாகவும்
இதுவரை இருந்திருக்கலாம் என்னையறியாமலே.
ஓலமிடு இவ்வொலிக்குழம்பு
கை விட்டு எட்டிப்போகையில்,
என்னுட் தனியே எட்டிப்பார்க்கையில்,
மழைகொட்டி வெளித்த முகில் வெளிச்சமாய்
எல்லாமே.....
தொனியின் தாண்டவத் திமிர்த்துளி,
அதிர்வின் அந்தகார ஆவேசப்பொறி,
உரைப்பின் உறைப்பு உரப்புமிழ்வு,
.......எல்லாமே,
தனித்தனியாய்த் தம் செய்தி சாற்றி.
ஆக,
ஓசைகளை உணர வேண்டுமா?
ஓசைப்படாமல் ஓரம் ஒதுங்கி,
உணர்வு உள்வாங்கி,
உற்றுக்கவனியுங்கள்,
உங்கள் உள்வெளிஉற்பத்தியை,கூடப்
பிறர் வெளிவிடு விசித்திர ஓசைகளை.

-'97

0பின்னூடுகை:

Post a Comment

<< Home