அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

மாரித்தவளைகள்

எனது
நிஜமான
நெகிழ்ந்த
நேசத்துக்குட்பட்டவற்றுள்
மரவணில்களைப் போல்,
மாரித்தவளைகளும்
உள்ளடக்கம்.

தன் வாயாற்
தாம் கெட்டுச்
செத்துத் தொலைவதினால்,
மாரித்தவளைகள் மேலெனக்கு
மங்காத
பெருங் காதல்.

மாரிக்காலக்கிணற்று
வாழைத்தாழ்வாரமெங்கும்
தாவும் ஓரமாய்,
ஒளித்திருந்து இலை நறுக்கும்
நத்தைகள் இடையே
ஓரிரு தவளை.

வளிவெளி ஆவி படுதலை மூடிக்காக்க
பாலாடை போல் நீருக்கு மேலாடையாம்
மாரி வாற்பேத்தை வம்சம்.
வாளி, நீர் தட்ட,
வழி விலக்கி
மையம் தள்ளி
விட்டம்,
நிலைக்குத்தே நேரெழுந்து
மேல் விரிந்து
துள்ளுவளையமாய்
எகிறிப்பாயும்,
எதிர்காலத்தவளை;
"இந்தா பார்,
இலவச கண்காட்சி"
என்று சொல்லி...
எனினும்,
எவரும் ஏனோ இரசிப்பதில்லை.
எரிச்சல் மட்டுமே
எச்சிலுடன்
தரை முட்டும்.

இத்தனை
அவமரியாதைக்குத் தவளைகள்
அழுமா?
அறியமாட்டேன்.

ஆனாலும்,
அதனாலும்,
எனது
நிஜமான
நெகிழ்ந்த
நேசத்துக்குட்பட்டவற்றுள்
மரவணில்களைப் போல்,
மாரித்தவளைகளும்
உள்ளடக்கம்.

கல்லடியுண்டு சாதலுக்குச்
சாதனை நுணல்களுக்கே.
அவை சாவு,
-கிட்டத்தட்ட-
வீட்டுக்குட் தூங்கும் அப்பாவி மனிதர்களை
வீதிக்கிழுத்து வந்து துப்பாக்கியாற் சுட்டுவைக்கும்
விபரீத வேதனைக்கு ஒப்பானதாகும்.

செத்த தவளைக்காய்,
மிச்சத் தவளைகள்,
ஒப்பாரி வைத்தழுமா?
அறியமாட்டேன்.

ஆனாலும்,
அதனாலும்,
எனது
நிஜமான
நெகிழ்ந்த
நேசத்துக்குட்பட்டவற்றுள்
மரவணில்களைப் போல்,
மாரித்தவளைகளும்
உள்ளடக்கம்.

விட்டில் வந்து
விளக்குச் சுற்றி
வெந்தெரிந்து வீழாத
விலக்குப்பெற்ற
வெறுமைக்
குளிர்கால இரவுகள் போல்,
மாரிகால இரவுகள்,
தவளைகள் ஒலியின்றேல்
தம் உப்புப் பொலிவற்றுப் போகும்.
மழை இடித்துப் பெய்தும்
மனம் கொள்ளாமல்
காத்திருப்பேன்,
மாரிகாலம்
இனிவரு நாளொன்றிலென்று.

தவளைகளில்
என் காதல்
சாசுவதமானது,
அமைதியான
இரவுகளின்
தூரத்து
அலையோசைகள்மேல்
நான் கொண்டதுபோல்.

ஆதலினால்,
ஆய்கூடங்களில்
கத்தியெடுத்து
கால் விரித்த
தவளைகள்தம்
கண்டம், வயிறு பிளக்கும்
கனத்த நாட்களிலே,
என் வயிறு,
முதல்நாள் உணவாற் கறைப்பட்டுக் கெட்டிருக்கும்
என்பதாய் காட்டிக் கொள்ளக் கற்றிருந்தேன்
நாடக வித்தை நிபுணனென.

வீணாய் விரலழுத்திக் கண்டம்
வெட்டி விரித்துப் பிளக்கையிலே,
தவளைகள்தம் இறுதிப்பிராத்தனை,
"இனியரு பிறவி,
நான் எதிர்க்கும் இயல்பற்ற
ஏமாளித் தவளையாய் இருந்திட வேண்டா"
என்பதுவாய் இருக்குமா,
தனி உலகுமனிதன்,
தான் பேசும் மொழிக்காய்,
பிடித்த கொள்கைக்காய்,
காலறுந்து கழுத்தறுந்து
கொல்லப்படுக்கையிலே
கையெடுத்து இறைஞ்சுதல்போல்?
//ஆண்டவரே,
ஆண்டவரே,
ஏன் என்னைக் கைவிட்டீர்?//
அறியமாட்டேன்.

ஆனாலும்,
அதனாலும்,
எனது
நிஜமான
நெகிழ்ந்த
நேசத்துக்குட்பட்டவற்றுள்
மரவணில்களைப் போல்,
மாரித்தவளைகளும்
உள்ளடக்கம்.

99/03/12 வெள்ளி 04:32 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home