அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

அரியமனம்

"கறுப்பனென்று பெருமை கொள்வேன்"
- அமெரிக்க ஆபிரிக்கமாத்தின்
இடைப்பரப்பில்
என் ஒரு நண்பன்.

அதன்
உள்ளிருந்து உரக்கப் பேசும்
ஓர் உள்ளன்பற்ற மௌனத்தொனி,
"நாணமின்றி நானும் பேணுவேன்
நிறப்பிரிக்கை,
மனத்தரையில்
நிறக்குருடு அமைத்த லென்று
உரத்துச் சொல்லி."


தினசரி,
நிழற்தொலைக்காட்சி
வியாபார விளம்பரங்கள்
விழியிற் படும்..
வேடிக்கை; வெகுவிந்தை;
தவறான தேர்வுகளில்
வெள்ளையர், வெகுவாய்த் தோற்பார்கள்;
கறுப்பர், வில்லங்கமேதுமின்றி வெற்றிகொள்வார்.
விளம்பர ஆக்குநர்கள்
எல்லோரும்,
வெள்ளையராம்...

அதன்
உள்ளிருந்து உரக்கப் பேசும்
ஓர் உள்ளன்பற்ற மௌனத்தொனி,
"நாணமின்றி நாமும் பேணுவோம்
நிறப்பிரிக்கை,
மனத்தரையில்
நிறக்குருடு அமைத்த லென்று
உரத்துச் சொல்லி."


காலைகளில்,
கணினித்திரை விரித்தால்,
கடிதங்கள்...
காகிதமென்றால்,
கசக்கி,
கிழித்துப் போட்டெரிக்கலாம்
என்ற மாதிரிக்கு,
முறையற்ற கடிதங்கள்.
இந்துக்கள்,
ஏசு பிறப்புக்கு முன்னோர்
ஏழாம் நூற்றாண்டில்,
சந்திரனுக்குக் காலெட்ட
குட்டிச் சாரத்தியம்
பண்ணினராம்.
வட்டத்தின் விட்டம் தொட்டு,
அண்டத்தின் அகலம் வரை
மொத்தமாய் அளத்தலை
முதன்முதலாய்க்
குத்தகைக்கெடுத்தவர்
ஆர்யபட்டாதானாம்.
பட்டா இன்றியே
பகிரங்க அறிவிப்பு.
விண்டு கேட்டாலும்,
குத்தகை விட்டவர்,
யார் என்று விபரம்
தரப்படாதாம்

ஆதாரமின்றி,
ஆயிரம் எடுகோள்கள்,
உரு இறுகி,
உண்மையாகத்
தோற்றும்
போற்றும்
மாயப்
பொலிவுப்போலி;
கானல்நீர்க்
கணினிக் கடிதங்கள்;
கோயாபல்ஸின்
கொள்கைபரப்பு
உன்மத்த உத்வேகம்,
"அறிக நீர்.
திரும்பச்
சொல்ல சொல்ல,
பொய்மையும்
மெய்ப்படும்."

அதன்
உள்ளிருந்து உரக்கப் பேசும்
ஓர் உள்ளன்பற்ற மௌனத்தொனி,
"நாணமின்றி நாமும் பேணுவோம்
நிறப்பிரிக்கை,
மனத்தரையில்
நிறக்குருடு அமைத்த லென்று
உரத்துச் சொல்லி."


எள்ளுப்பாட்டனின்
எத்தனையோ தலைமுறைக்கும்
எட்டாத காலத்தே,
சீனப்பட்டும்
யவனச்சிட்டும்
கொற்கை முத்துக்கு
கொள்முதல் பண்ணிவைத்த
எத்தற் கதை பேச,
எத்திக்குத் தமிழனுக்கும்
தலையிரண்டு
கொம்புதிக்கும்;

ஆனைகட்டிப் போரடித்த
சேனைமக்கள் வழிமுறைகள்,
அன்றாட அடுப்புலைக்கு
அரிசி மணி ஒவ்வொன்றாய்
அகிலத்து முடுக்கெல்லாம்
ஆங்காங்கே
தேடிப் பொறுக்கையிலும்
குனியவிடாமல்,
நிலம் குத்தும்,
கொம்பு;
கொழுவிக் கொள்ளும்;
பின்,
குனிந்த தலை
எழ விடாது;
ஆயினும்,
மணல் கீறிச்
சமர் நிகழ்த்தும்.

அந்நேரத்தும்,
அவர் கொம்பிருந்து
கூர்ப்பட்டுக் கீறும் ஒரு கோபத்தொனி,
"நாணமின்றி நாமும் பேணுவோம்
நிறப்பிரிக்கை,
மனதில்
நிறக்குருடு அமைத்த லென்று
உரத்துச் சொல்லி."


காலம் மேகமாய் நீந்தி நகரும்;
பதங்கமான பெருமை-நிரம்பலாவி
நுகர்ந்து
இன்னும்
கிறங்கி
வான்வழியே
மிதந்திருப்போம்;
எம் உளக்கால்கள் பாவாது,
உடல் வாழும்
பூமி நிலம்...
தேவர்கள் நாம்;
தெய்வங்கள் எம் முன்னோர்கள்;
அவர் பற்றி அருங்காதைகள்
ஆயிரம் உண்டு;
நீர் அறிவீர்;
எனது மொழி;
எனது மதம்;
எனது நிறம்;
எனது குப்பை;
எனது கொல்லை;
எனது.... எனது.....
என்னவோ மனம் எழுதலெல்லாம்
'எனது' முன்னிட் டிங்கெழுதி வைக்க...

ஒருமை மனித ஒளி,
நிறப்பிரிக்கும்
அரியமனம்.

இனி வரும்
உயிரியல் விஞ்ஞானிகட்கோர்
உரத்த
வேண்டுகோள்:
"பரம்பரை அலகுகளில்
மனிதர்களை,
நிறக்குருடாய்,
மொழிச்செவிடாய்
படைத்திருக்க
வழி சமைப்பீர்."

99/03/09 செவ்வாய் 20:26 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home