அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தொப்பிகள்

தொப்பிகளைப் பூட்டாதீர்,
தோழர்களே -தலைத்
தொப்பிகளைப் பூட்டாதீர்.

தொப்புட்கொடிகளல்ல
தலைத் தொப்பிகள் -
உறுஞ்சிச் சப்பிமுடிந்தபின்,
உருவி வெட்டியெறிதற்கு
வெளி.

தொப்பிகள்
உள்ளிழுத்து ஒட்டிக் கொள்ளும்
ஆற்றாமைகள் ஆழப்புதைக்கும் தலை.

ஏறினால்,
இரங்காது;
இறங்க மறுக்கும்;
எடுக்க எத்தனித்தால்,
எகிறும்;
ஏளனம் பண்ணும்;
எட்டி உதைக்கும்.

தொப்பிகளைப் பாராதீர்கள்;
தலையில் வைப்பவர்
கைகளைப் பாருங்கள்......
கதை இருக்கும்; கறை தெறிக்கும்.

சிறு தொப்பிகட்குள்ளும் தொங்கி ஒளியலாம்
எரித்தொழிக்கும் பஸ்மாசூரர் கரம்.

பொறுமையாய்ப்
பொறுக்கப் பழகுங்கள்
பொருந்தும் தொப்பிகளை.
பிறராற் போடப்படுதலெல்லாம் பொருந்திப் போகா;
தாமாய்ப் போட்டுக்கொண்டதெல்லாம் பொருத்தமாய் வாரா.
பொருந்துமெனப் பொறுக்கிப் போட்டபின், முகம் மறைக்க,
பொருள் விற்றவனைச் சாடாதீர்,
- பொறுக்கி அவனல்ல,
பொதி கட்டி வழி வந்து தெரு விரித்தது மட்டுமவன் செயல்.

அவரவர்க்கு அதது அல்ல,
தொப்பிகள்;
அவரவர் தலைக்கதது
ஆகுவது மட்டுமல்ல,
தொப்பிகள்;
அவரவர் தகுதிக்கும் பொருந்தட்டும்
அவர் பொறுக்கு தொப்பிகள்.

பொருந்து தொப்பிகளைப் புனைந்தோர்கூட,
பொழுதுக்கும் பூணென்றதைப்
பூட்டிக் கொள்ளாதீர்......
...... பத்திரமற்றுத்
தொலையக்கூடியவை,
மனிதர்
கைச்சிறு சாவிகள்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home