அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

Che, Myself, a(n) S-PLUS Class, and a stormy Evening

"Beyond the stormy Hebrides.'' --Milton .....
......"Forget it, Che. you can's see the Scotish Horizon." -Che



அடைப்புக்குறிகட்குள் அகப்பட்டெங்கோ நான்.

அடிக்கடி மழை அடித்து விரட்டும்
சுவர், கூரை, சன்னல்.

உள்ளறைக்குள்,
சன்ன ஒலியில் சன்னம் சுட்டதென்று
எண்ணுவேன் சுவர்.

மழை முறிந்திருக்காதோ,
அதன் முதுகெலும்பு?!
சூரன் யானென்று
மீள மோதும்
சுவர் மேனி;
கூரை சுடும் சன்னம்
கூர் நீர்மழைக்கு.
என் கன்னத்துக் கை காதும் தொடும்;
எண்ணுவேன்....

....இன்னும்,
நெட்டாங்குகட்குள்ளும் அகலாங்குகட்குள்ளும்
நேரத்தைப் பிழியும் தூரத்துக்கிடப்பினிலே
இலக்கின்றி அலையும் பயணி நான்.

நானும்
S-PLUS வகுப்பொன்றும்
ஒரு மூசுபுயல் மாலையும்.

மழைபட்ட
எண்களுட் தொலைந்த மனிதனாய்,
இவன்.

இடைக்கிடை தென்படும்
தரிப்புக் குறிகளும் அடைப்புக் குறிகளும்....
அவற்றிடை,
வெளி மழை மறைந்து
ஆணைகளிற் தொங்கு
இடைவெளியற்று ஒட்டு
எண்மழைக்குள் நடுங்கும்
மேய்போனற்ற மா ஒன்றாய்
இம்மானுடன்.

தோண்டத் தோண்ட
தோன்றிய கேணி,
ஊறி மறைக்கும்
உள்ளதும் உள்ளே.

கட்டளைகளுக்கு விட்டுக் கொடாத குறிகளுட்
தவறு தேடப்புறப்பட் டிடைத் தாவுவேன்,
கொப்புக் கொப்பாய்,
எண்களின் மீதொரு இள மந்தியாய்...
சிந்திக்கத் தெரியா சிறுகுரங்கு,
ஏதோவொரு கிளையிடைக் கண்டு
தொங்கித் தவழ்ந்தேறும்
மழைகளின் தூறல்களில் கை பற்றி
மேலே மேகத்துள்
மெல்ல மெல்ல....
அங்கிடைக் காணுமொரு சாட்டை மின்னற் சாடலில்,
கட்டளைகள் சுற்றிய குறிகள்,
ஒற்றை ஒற்றையாய், ஒழுங்கமைந்த சமர்ப்படைநகர் வரிகளில்,
{
(
)
}
மழை மறைய மந்தி தனைக் காணும்
எட்டிரண்டின் இடையே,
ஓர் இடம் விலகு வெற்றிடத்தே.
வெற்றிடம் விலகுபுண் ஒட்டி,
அது காய ஒத்தடம் இட்டிட முன்,
மேலிருந்து Thor இன் சம்மட்டி அடித்தெழுப்போர் ஓசையுள்ளே
தூவானத் தூறல்கள் நடுங்கிப் பலமாய்ச் சுவர்ச்சுண்ணத்தே நடக்கும்.
S-PLUS இலிருந்து தொலைவேன்
தொலைதூரம்,
பேரிடிதன் நேர்-மறை மின்வலுச்சண்டைக்குட் கைதட்ட...

....இன்னும்,
நெட்டாங்குகட்குள்ளும் அகலாங்குகட்குள்ளும்
நேரத்தைப் பிழியும் தூரத்துக்கிடப்பினிலே
இலக்கின்றி அலையும் பயணி நான்.

நானும்
S-PLUS வகுப்பொன்றும்
ஒரு வீசுபுயல் மாலையும்.

இயற்கையின் எளிமைக்கு
விலகினால் விரியுமாம் புதிர்வட்டம்
என்பார்,
காலக்கோடுகளின்
நேரச்சொட்டுக்களைப்
புல்வெளிக் கல்லறைக்குக் கல் தேடுவதில்
தூவி நின்றார்.

புதைமணல் இயற்கை;
வெயிலின் வீதியிற் பெருவெளி
காணல் இலகு;
கடத்தலோ,
ஆழப்புதையாமல்
தாவி முடிதலில்லை.

நானும்
S-PLUS வகுப்பொன்றும்
ஒரு புயல் மாலையும்.

தரிக்க இடமற்ற
அடைப்புக்குறிகட்குள் எங்கோ
புயல் மழையுள்
அகப்பட்ட ஆட்டுக்குட்டி
நான்.

மாலைமழையின் சுவைஞனாயும்
மென்பொருள்வகுப்பின் பகுப்பானாயும்
எவனும்
இடையிருத்தல் இயலும் எனல்,
அற்றதெனும் இன்மை;
அ·தின்றேல்,
அது பெரும் பொய்மை.

என் இருபுறம் நோக்கினும்,
தொடுவானத்தூரத்தே
துளி நிலம் இல்லை;
ஓட்டி விட்டுபோன ஓடத்தே
நீச்சல்தெரியாமல்
நீரிடை
இரண்டிலொன்று, மறுபக்கம்
தூக்கியெறியக் காத்திருப்பில்
காதுகளும் கண்ணும் திறந்து
கைகட்டி,
நான்.


'99 ஜூன் 16, புதன் 13:22 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home