அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

".... ஆங்கே அல்குல் அகல..."

கல்முனை கோணேஸ்வரி,
யாழ்ப்பாணம் கிருஷாந்தி,
பரிஸ் சுதர்ஷனி,
மன்னார் ஹேமலதா,
இன்னும்,
பிரி யோனி மட்டும்
தொடையிடைகொண்டதற்காய்
இறந்துபோன இளம், கிழம்
எல்லோருக்கும்
இத்தால் அறியத்தரப்படுதல் எதுவென்றால்,

1.
எனக்குப்
பெண்குழவியில்லை.

2.
மற்றவர்களின் பெண்மகவுகள்
கர்மவினை கொண்டோர்;
அவர்களைக்
கடவுள் கண்டு கொள்வார்.
கவலையில்லை.




கோணேஸ்வரி மட்டக்கிளப்பாள்;
செத்தாற் கவலையில்லை;
நான் தேவாரப்பாடல்பெறு திருகோணமலையான்.

கிருஷாந்தி என் கைக்கெட்டா இளங்கிளி;
சிங்கள ஆமிக்காரன் எண்டாலும்
அவனும் அதுவுள்ள ஆம்பிளைதானே?

சுதர்ஷனி ஆவி அறிக; நான் நெபுயேவின் 'லொலிட்டா'
விசிறி;
என்றும் துன்பியற் காவியங்கள்,
சுவைக்க நிலைப்பதிற் தோற்பதில்லை, பெண்ணே.

ஹேமலதா கூட்டி, பின், குழிபறித்துக் காட்டிக்கொடுத்தவள்;
சூட்டுச்சாவு நியாயம்;
எப்பவோ எரியாத லைட்போஸ்டிலே இழுத்துக் கட்டியிருக்கவேணும்.

உடல்கிழி சிங்களக் கதிர்காமத்தழகி,
பீகார்ப் பெண்பிறவிச் சொக்கப்பானை,
கொசவோ கிழவிக்கருப்பைக்குட் சேர்பிய விந்து.....
நேரமில்லை இன்றைக்கு;
நியாயப்படுத்திப் பேசுவேனாம்
பின்னொரு நாள்,
நான்.




அதுவரையில்.....

நேற்றைக்கு,
பால்ய நண்பி பாசம்
பற்றியொரு பாடல் எழுதினேன்;

இன்றைக்கு,
பால் கொடுக்கும் தாய் வதனச் சந்ரபிம்பம்
பற்றியொரு பந்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்;

நாளைக்கு,
கடல்கடந்த பழந்தமிழ்ப் பாடல், பாரம்பரியம்,
பல்லாங்குழி, பலாக்காய், பகடை, சகடை, பண்பாடு
பற்றி பத்துப்பக்கம் படுக்காமல் எழுதவேண்டும்.........


..........." ............ ஆங்கே,

காம அல்குல் அகல,

ஒல்கு இடைவிரிந்து

ஒசிந்து தான் உருள,

துள்ளித் தெறித்து

எண்துண்டாய் விழுந்தது,

பொறிபடத் தரையில்

பெண் பூண்

பொன் மேகலை.... "



'99/07/15 வியாழன்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home