அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

செம்-மணி-விதை

என்நாட்டில்,
விலங்குக் கொழுப்பு
வீங்கி விளையும்
மரவள்ளிக்கிழங்கு மண்ணுள்.
அணையாச்சோதிமணல்
எரியும்
முன்னைய இரவும்
அன்னையர் மனங்களில்
பின்னைய பொழுதும்.

சேறடுக்கா நிலம்கூட,
எரிகொள்ளியாய்ப்
பகலும் உலாவும்,
பல பல பிசாசுகள்.

உலராப்புழுவுருள்
மண்டையோட்டுக் குண்டுத்துளையூடு
ஊசி வடிந்து ஓங்கி வெளிவரும்
ஒவ்வொரு மண்ணிடைத்துளையூடும்
உயிர்வாயு.
மூச்சிழுக்க,
உட் பரவும்;
இழுத்தவன், இறப்பான்;
இன்னொருவன்,
இனி அவனுட் பிறப்பான்.

வெட்ட வெட்ட
வெளிப்பரவும்,
அச்சந்தரு
விலங்குடல் எச்சம்.

தோண்டத் தோண்டத்
தோன்றும்
தோலிலாத்
தடந்தோள்கள்;
இளம் தேள்கள்.

குரங்குக் கூட்டாய்
கால்-கை-குடம்
நின்றாடும்,
காட்டாமணக்கு
கரகம்.

எலும்பு சதைத்துப்
பூத்துக் குலுங்கும்
எலுமிச்சம்பழத்துள்.

பருகப்
பிழி சாறு
தேக்கிப் பார்க்க
நிணம் நாறும்
கோப்பை.
நெடு நிழலாய் எழுந்தலறும்
தரைப்பெட்டகம்புதை
இறப்பொலிகள்.

விதை பிரித்தெறிய
முளைக்கும் வெட்டிய விரல்கள்
முட்டமுட்ட
மொட்டைத்தரை.
அது சுற்றிச்சுற்றிச்
கூராய்ச் சொட்டும்
குதிகாற்தசை.

ஒண்டியாய்
கிண்டிய இடமெல்லாம்
பேய்க்கூத்து ஆடும்
முறிந்தகால்,
முன் கடவாய்ப்பல்லறு முகம்,
முள்ளந்தண்டுடை முள்விலா.
பிலாக்கணத்துப் பரணி
பிளந்து பரவும்
வான்.

சிகை பரப்பிப் பிதற்றும்
சந்திரமதிகள் தேசம் ஆனது
என்னுடை நிலம்.

அடுக்கித் தட்டி விட்ட
பெட்டிகளில்
முன்னையது
செம்மணி.

தன் மூச்சு ஸ்தம்பிக்க,
தொடராய்க் கொட்டிக் கொண்டே இருக்கிறது
பெட்டிச் சங்கிலி.

மற்றொருமுறை,
தவணை தள்ளிப்போகும்
மனித மரணங்கள் மேலான
விசாரிப்பும்
விலைமதிப்பும்.

மழை காரணமாம்....

தவணைக்காரணங்கள்,
பின்னும் தாவும்
பெரும் தவளை.

ஆண்டுகளாய்,
செல்லும் வழிதவறி,
வம்பு மடம் தூங்கி,
சோழி சுழற்றிச் சொக்கட்டானாடு
சொற்சோற்றுப்பரதேசிக்குடுமி
எனது.

மிச்சமிருக்கும்
இரத்தச்சொட்டும்
ஒருமித்துக் கொட்டும்
அங்கு மழை.

புலம் பெயரென்
முன்னோரைப்போல்
முட்டாள் நானும்,
ஒண்டக்
குடை பிடித்திருந்தேன்
எங்கோ
கொடுங்கூகைகட்கு.

சின்ன இரத்தத்துளி
அப்போதும்
தெறித்தது
என் சட்டையில்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home