அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

சித்தார்த்த 'சே'க்கு என்னிடமிருந்து.....

ஓர் எழுத்துநாடோடிக்கு
ஓர் அரைக்கிழட்டுமாணாக்கன்
எதைக்கொடுக்கமுடியும்,
எண்ணத்தையும்
ஏக்கத்தையும் எழுத்தாணியையும் தவிர.

விரல் இறகுகளைக் கொடுக்கின்றேன்,
வேண்டினால் ஏற்றுக்கொள்.
தடுமாறும் கனவுகளைத் தட்டிக்கொடுக்கக்கூடும்,
தலை தடவாத நேரத்தில்.

நீ எரித்துப்போடும் ஒவ்வொரு எழுத்துக்குமாய்
இழந்த கணங்களை என்னால் ஈடு செய்யலாகாது.
குளிர்காய வேண்டுமென்றால்,
கூடப் பேச்சுத்துணைக் கென் பிறர்
வேண்டாப் பெயரைப் பதிந்துகொள்.

இழப்புகளுக்காய் தன்னிரங்கிக்கொள்ளும் வேளைகளில்
என் இருப்பிருக்கும் இறகுகளை மட்டும் ஏற்றுக்கொள்.

இவர்களை மறந்துவிடு; அவர்களையும்கூடத்தான்.
உன் எழுத்தை மட்டும் கோர்த்துக்கொள்.
உப்பிட்டிச் சுட்டுத்தின்போம்,
உனக்கொன்று, எனக்கொன்று.
இரவல் என்பதை இன்றைக்கு மறந்து
எழுத்தாணியைப் பகிர்ந்துகொள்வோம்.
எண்ணுக்கு எனக்கு; எழுத்துக்கு உனக்கு.
எனது ஏக்கங்கள் உனது இருப்புக்கு;
உனது இழப்புகள் எனது எண்கட்கு.

கையிருப்புக் கனவுகளை மட்டும் கவனமாய்ப்
பொதுப்படுத்திக்கொள்வோம்;
வேண்டுமானால், வெளிநடைகளிலும்
வாங்கிக்கொள்வோம்,
உனக்குப் பாதி, எனக்கு மீதி.
என் விரல் இறகுகளை உன் வித்தைக்காயேனும் ஏற்றுக்கொள்;
இளைப்பாறலாம்; பின் எழுந்திருக்கலாம்;
நான் நடக்க, நீ இருக்க; நீ நடக்க, நான் இருக்க...
நீயும் நானும் முடமும் குருடும்.
உனக்கு நான் மட்டும்; எனக்கு நீ மட்டும்.
கனவுகளில் மட்டும் கைநனைத்து,
காலாற்றிக் குளித்துக் களிப்போம்,
உனது எழுத்தில், எனது எண்களில்.

என் இறகுகளை மட்டும் ஏற்றுக்கொள்.
இறங்குமுகங்களிலே இடைக்கிடை
என்னைப் பார்;
என் இருப்பின் கோணலையும் கூட.
ஒரு மூட்டை பஞ்சு இறகுகளுடன்
உன்பின்னே சுமைநடை வருவேன்.
கனவுகளை மட்டும் உன் கைப்பற்றி
கண்டவிடத்தும் விதைத்து நட;
பூக்கும் வேளைக்கு முன்னால்
பொழுதிலே புள்ளியாய்ப் போய்விடுவோம்.
அவர்கள் பறிக்க வருவார்கள்,
இவர்கள் பொறுக்கும்வேளையிலே.

அதற்கும்முன்னே,
இந்த மண்சாலை கடந்து
நீயும் நானும் நெடும்தொலைவிலே,
வீணுக்கேனும் வினையென்று
விதைத்துக்கொண்டிருப்போம்,
கனவுகளை நீயும்
இறகுகளை நானும்.

ஓர் எழுத்துநாடோடிக்கு
ஓர் அரைக்கிழட்டுமாணாக்கன்
எதைக்கொடுக்கமுடியும்,
எண்ணத்தையும்
ஏக்கத்தையும் எழுத்தாணியையும் தவிர
என்றெணக்கூடும் நீ........
உளப்பலத்தையும் மெல்லிறகையும்
சுமக்கமுடியும் உன் விரற் சொடுக்குக்கு
தூக்கிக் கொடுக்க, அடைப்பக்காரனாய்.

நட,
நாளை உனதும் எனதுமான
ஒரு நாளின் விடியல்.
அவர்கள் தூங்கவில்லை;
அவர்களுக்கும் தெரியும்,
இவர்களைப் போலவே.

நீ நட என்கூடே.

'00/ஜூன்/ 23

0பின்னூடுகை:

Post a Comment

<< Home