அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

குரல்களைப் பகுத்தல்

முடையப்பட்ட குரல்களின் தேசத்தூடே
சுமையில் நகரும் நடையாத்திரைகள்.
பிரிந்தறிய மறுக்கும் நரம்புநாக்களின்
கொத்தல்கள், துப்பல்கள்.
ஒவ்வொருகுரலும் எழுப்பும் ஓலம்,
உள்ளே கொண்டிருக்கும்
தன் குரலைப் பதிவு செய்யும் பயணம்;
சக இரைச்சலுட் தொலையும் சவாரி,
உன்னது என்னதுவாய், என்னது எவருடையதாய்?
சூழற்காற்றை மட்டும் சேதப்படுத்தும்
தொனிகளின் பின்னல்கள்;
தொண்டைப்பிசிறில் குஞ்சம் கட்டித்தொங்கும் குரல்கள்.
"ஏற்றுக்கொள் என்னை" என்று இடைவிடாத் தந்திக்கம்பி.
சேர்த்துக்கூட்டிய கூளத்துள்,
எது உனது? எது எனது?

தமது முறைக்குத் தரித்திராக் குரல்கள்,
தாமும் செத்தன தனித்துவம்,
தம் இருப்பின் இரைச்சலில்.

அதிகம் நீர் விட்டாக்கிய சோறு,
இணைகுரலாய்க் குழைந்ததுட்
தனித்தேடலும் வகைபகுப்பும்.

"ஒரு கணத்தில் ஒன்று மட்டும்"
- என்ற சொல் தேய்ந்தது;
கூவிச் சொல்லச் சொல்ல,
ஒழிந்தது சுரணை.

எமது குரல் தொலைந்தது
இரைச்சலின் உலகத்தில்
இன்னொன்றாய்.

23, ஜூன் '00

# உள்ளத்தூண்டலுக்கு நன்றிகள்:-
கோகுலக்கண்ணனின் 'குரல்களின் உலகம்' & சுஜாதா பட்டின் 'குரல்கள்' [யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்ப்பு].

0பின்னூடுகை:

Post a Comment

<< Home