அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

தனக்குமட்டுமான இருட்டுமூலைச்சருக்கம்

unedited, will not be and there is no will

எவரும்
-குறிப்பாக இவனில்லாத அவன்
அணுகமுடியாத
எனது இருட்டுமூலைகளுட்
சமயங்களிற் தேங்கிக்கொள்வேன்.

நெற்றிப்பொட்டுகளிலோ
காதுப்பறைகளுள்ளோ
வாய் உள்ளண்ணங்களுள்ளோ
வெடிகருவிகளை விரைந்து
விரல்சொடுக்கிச்செத்துப்போன
கவிஞர்களும் கலைஞர்களும்
என்னோடு உலாவிக்கொண்டிருக்கின்றார்கள்;
எம்மைப் பற்றிய உரையாடல் முடிந்தபின்னர்,
தம்மோடு எழுந்து கூட நடக்கச்சொல்கின்றார்கள்.

மலைகளும் அகழிகளும் அழைக்கும்போது,
தனி மணற்பருக்கை, துளிநிணச்சொட்டு
தோலும் சதையும் சோரக்கருகிக் கலைந்த நெய் கலந்து வடிய
உருகிப்போய் உன்னதத்தின் உச்சத்து ஒன்றாகி
அவதிநினைவு அளைந்தழிந்து அலைகின்ற அகதிமுகமாறி
அத்தனை பேரான அக்கினிச்சுவாலைக்குள்ளே
தனித்துவம் தொலைந்த வெப்பமாய் வெளிச்சமாய்
வீழ்ந்துபோகலாம் என்றோடிக்கொண்டிருக்கிறது.

சேற்றுவீதிகளிலே சாணம் பொறுக்கித்திரிவதிலும்
கூடிப் பேசிப்போகலாமே போகலாமே
என்று பிடித்துத்தள்ளிக்கொண்டிருக்கிறது
உள்ளேயே பூட்டிக்கொண்ட அங்குசத்துக்கூர்.

இருந்தும் ஏதோ இந்தப்பக்கம்
இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கின்றது;
என்னிலும் வலிதாய் என்னை மீறியதாய்.....
"போகாதே, புரிந்துகொள், போகாதே"
என்று இழுத்துக்கொண்டே இருக்கிறது
இந்தப்பக்கம் ஏதோவோர் ஈர்ப்பு.

ஏதென்று தெரியாத இந்தப்புற ஈர்ப்புக்கும்
வா என்றழைக்கும் அவர்களின் அழைப்புக்கும்
இடைப்பட்ட் பிரதேசத்தின் மேலே இடி கீழே மின்னல்.

எனக்குள்ளே ஏதோ எரிந்து கொண்டிருக்கின்றது,
என்னையும் எரித்து என்னைச் சார்ந்ததையும் அரித்துக்கொண்டு.
உட்சுவாசத்துக்கும் இரத்தோட்டத்துக்குமிடையோடி அலைகிறன
முறிகின்ற சிறகுகளை எரிக்கின்ற வேளையிலே ஓலமிட்டபடி
ஓய்வில்லாத ஓராயிரம் மண்ணிற விட்டிற்பூச்சிகள்;
உள்மார்புச்சுவரில் ஒட்டிக்கொண்டும்
குரல்நரம்புகளில் சுற்றிக்கொண்டும்
படபடக்கின்றன பாதி பிய்ந்த இறக்கைகள்...
குரல் கமறிக் கனைக்கும்போதெல்லாம்
சளிக்குவளைகளாய்ச் சொட்டுற குருதி,
எனதா, இல்லை இந்த விட்டிற்பூச்சிகளினதா?
எதுவும் தெரியவில்லை;
என் இருட்டு ஆழத்துள்ளே இறங்கிகொண்டிருக்கின்றேன்,
கறி வெட்டும் கத்திச்சரபங்களூர.

பாலத்தின் மத்தியிலே செவிப்பறை பொத்தி
ஓலமிடும் ஓவியத்து உருவம்
ஒரு கணம் விட்டு கணம் தாவி
உருக்காட்டிப்போகிறது.......
ரூபம அரூபமாகமுன்னர்,
வாய்விட்டுக்கூவ எனக்கு விருப்பமாகிறது;
அழைக்க வேண்டியவர்கள் பட்டியலில்
அதிகமில்லைத்தான்;
அம்மா, அன்ரா, அவள்.....
அப்படியான அகரவரிசைப்பட்ட
சின்னதொரு சரிக்குறிகள்.

நான் துரத்திக்கொண்டிருக்கும் இவர்களல்லாத மற்றவர்களை
எனக்காக எவராவது ஒரு கொஞ்சப்பொழுது
ஒளித்து வைக்கமுடியுமா?
ஓர் ஓலைக்கடகத்துக்குள் ஒருமித்து
எல்லா நண்டுகளையும் அடைத்து
பாழ்கிணறுக்குள் போட்டு......
அரபுக்கடற்சீசாக்குள் ஜின்னிகளை
சிறிதும் பெரிதுமாய் சேர அடைத்து.....
எப்போதுக்குமில்லாவிட்டாலும்கூட,
என் காற்பெருவிரலிலால் ஒரு சுடுபூச்சியை
நான் நசுக்கும் சின்னப்பலம் விளையத்தேவைப்படும்
ஒரு கொஞ்சப்போது.......

நான் தூங்கவேண்டும்;
கைகளை விரித்துப் பரப்பி, கால்களை அகட்டியெறிந்து
ஆழ மூச்செறிந்து மார்பு சீராய் ஏறியிறங்கி
ஆழமாக, தீயதும் நல்லதும் என்றேதும் பொட்டுக்கனவுகூட
என் நித்திரையைப் பின் தொடராமற் தூங்கவேண்டும்....
தயவு செய்து
நான் துரத்தும் இந்த நாக்கிளிப்புழுக்களை,
என்னைத் துரத்தும் புழுக்களின் ஊரெண்ணங்களை
எங்கேயாவது அள்ளி முடிந்து ஒளித்து வையுங்கள்.

நான் தூங்கவேண்டும்.
எனது மற்றவனைப் பிரிந்து
இந்த இருட்டுமூலைக்குள்ளே அடைகின்ற காலங்களை,
இறப்பின் ஜோதியைக் காட்டுகிறோம் வா என்றழைக்கும்
கரைந்த கவிஞர்களை, அழிந்த கலைஞர்களை விலகிக்கொண்டு
இரு என்று பிடித்திழுத்துக்கொள்ளும் அடர்த்திமிகு அண்டத்தீர்ப்பினுள்ளே
அமுங்கிப்போக வேண்டும் நான்,
துரத்தும் புழுக்களையும் புழுக்களின் புழுக்கங்களையும்
விட்டொரு புது உலகத்தே அறைவாய் திறந்து.

எனக்கு
நான் தூங்கவேண்டும்.
எழும்போது,
அந்த மற்றவன் ஒருவனாக மட்டுமே
எழுவேனென்று நிச்சயமான
ஓர் அகழியரணுக்குள்
நான் தூங்கியாக வேண்டும்.

புழுக்கள்
வேண்டுமானால்,
வேறெங்காவது சேற்றைத்துழாவி
புழுத்துப்புழுத்து பாசிக்குளத்தில்
த்மக்கென்றான போக்கில்
அலைந்து கொண்டிருக்கட்டும்.

விழைய,
முற்றுமா
உள்ளே
முழுமோனம்?

முற்று
.

'01, sep. 28 Fri. 02:10 CST

1பின்னூடுகை:

  • //நெற்றிப்பொட்டுகளிலோ
    காதுப்பறைகளுள்ளோ
    வாய் உள்ளண்ணங்களுள்ளோ
    வெடிகருவிகளை விரைந்து
    விரல்சொடுக்கிச்செத்துப்போன
    கவிஞர்களும் கலைஞர்களும்
    என்னோடு உலாவிக்கொண்டிருக்கின்றார்கள்;//
    பிடித்திருந்தன இந்த வரிகள். இறந்தவர்கள் அல்ல, இவர்களை இறக்கச்செய்வதவர்க்ளும் நமது கனவில் நனவில் நடமாடிக்கொண்டுதானேயிருக்கின்றனர்.UnEdit என்றபடியால் ஒரு சின்ன கருத்து, கொஞ்சம் சுருக்கினால் இன்னும் நன்றாகவிருக்கும்போலத்தோன்றியது.

    By Blogger இளங்கோ-டிசே, at Friday, December 17, 2004 6:38:00 PM  

Post a Comment

<< Home