அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

குரங்குப்பொம்மைக்கொலு

நவராத்திரி முடிய
குரங்குப்பொம்மைகளின்
குழுக்கொலு.

புதிதாகச் சேர்ந்தவை
இரு மந்தி.

தீயதைக் கேளாதே
தீயதைக் காணாதே
தீயதைப் பேசாதே;
சட்டம் சொன்னது
- பெருந்தீட்டு.

தீயதைத் தொடாதே
தீயதை முகராதே;
மருத்துவம் சொன்னது
- பெருந்தீங்கு.

மந்திக்கொன்றாய் தன் புலனடக்கல்.

"குறியின்றிக் குதிக்கப்பிறந்தவையா
குந்திக்கொலுவிருக்கப் பிறந்தவையா
கொப்புக்குரங்குகள்?"
- கேட்கமுன் காண்க,
எங்கும் ஐம்பொறியும் ஒன்றாய் அடக்கிய ஆறறிமாக்கள்


27 Oct., '01

2பின்னூடுகை:

  • அன்பிற்குரிய இரமணி,

    பொதுவாக இன்னொருவர் ஆக்கத்தில் அவர் அனுமதி இல்லாமல் தொடுவதில்லை. இந்த ஆக்கம் என் மனத்தைத் தொட்டது. படித்தவுடனே இன்னும் கொஞ்சம் இறுக்கத்தைக் கூட்டலாமே என்ற நட்புரிமையில் கொஞ்சம் நுணுகிய எடுவிப்புச் (minute editing) செய்தேன். சரியென்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்; அதிகம் என்று பட்டால் மன்னியுங்கள்.

    அன்புடன்,
    இராம.கி.

    நவராத்திரி முடிய
    குரங்குப் பொம்மைகளின்
    குழுக்கொலு.

    புதிதாய்ச் சேர்ந்தவை
    இரண்டே மந்திகள்.

    தீயதைக் கேளாதே
    தீயதைக் காணாதே
    தீயதைப் பேசாதே;

    சட்டம் சொன்னது
    - பெருந்தீட்டு.

    தீயதைத் தொடாதே
    தீயதை முகராதே;

    மருத்துவம் சொன்னது
    - பெருந்தீங்கு.

    மந்திக்கு ஒன்றாய் தன்புலன் அடக்கல்.

    "குறியின்றிக் குதிக்கப் பிறந்தவையா
    கொலுவேற விதித்துப் பிறந்தவையா
    - இந்தக் கொப்புக்குரங்குகள்?"

    கேட்குமுன் காண்க,
    ஐம்பொறி ஒன்றிய ஆறறி மாக்கள்

    By Blogger இராம.கி, at Friday, December 17, 2004 4:15:00 AM  

  • அன்பின் இராம. கி., உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. இவையனைத்திலுமிருந்து புத்தகத்துக்காகத் தேரும்தேவைக்காக மீளச் சீர்திருத்தும் நோக்கிலேயே இங்கே அள்ளிப்போட்டேன். உங்கள் திருத்தம் பயனுள்ளதாக இருக்கும். (இது நான்கு ஆண்டுகளின் முன்னர் தமிழிணையத்திலே வந்தது.)

    By Blogger -/பெயரிலி., at Friday, December 17, 2004 4:25:00 AM  

Post a Comment

<< Home