அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

வழுப்படு தலைப்பிலி -II

அவரவர் வாசலிலே சுடுமரணம் நிற்கிறது.

விரல்களைப் பற்றி விபரித்துக்கொண்டிருக்கிறேன்.
நகக்கண்ணிலே முளைக்கக்கூடிய பருப்புத்தாவரத்தைப் பற்றிய
நொண்டிப்பாட்டாக இருக்கிறது எனது மொழி.

கவரப்பட்டவை பற்றியும் பேசுகிறோம்;
கவர்ந்தவை பற்றியும் கலந்தாலோசிக்கிறோம்.
கொடுமரணம் மெல்ல நிழலுக்குள் முகம் புதைத்து நிற்கிறது.

எல்லாருடைய பெயருக்கும் எழுமூலம் குறித்துக்கொண்டிருக்கிறேன்;
என்னிடம் ஏனென்று கேட்கக்கூடாது -
ஆனால்,ஏற்கனவே இன்னார் இன்னாரென எல்லாம் எழுதியாகிவிட்டது.
மரணம், மதியத்துப்பள்ளிக்கூடப்பிள்ளைகள்போல,
தெருமதிலுக்குப் முன்னாலும் பின்னாலும் முகத்தையும் முதுகையும்
ஆட்டிக்கொண்டிருக்கிறது.

இன்னும் கரைந்து கொண்டிருக்கிறது நேரம்,
சீனி திகட்டத்திகட்ட தேநீர் புகட்டிக்கொண்டு
பேசிக்கொண்டிருக்கின்றோம்
பெருமிதம் பிடுங்கியடுத்த பெரும் பழங்கதை.
மடக்கமுடியாமல் மரணம் தன் மனத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது.

"எல்லா அத்தியாயங்களும் எப்போதோ எழுதிமுடித்தாகிவிட்டது"
என்று நகர்கின்ற தெருவிலே படரும் யாரோ சொல்லிக்கேட்கிறது.
நாமோ விடுவதாயில்லை விரல்களின் வீரப்பிரதாபங்களின் விபரிப்பை.
செவிக்குள் ஊதுகிறது வெண்சங்கு; சேமக்கலம் சாபம்போட்டதுபோல் சத்தம்.
தருணம் பார்த்து மரணம் தட்டும் முன்வாயில்.....

..... நீ திறக்கிறாயா,
இல்லை,
நான்தான் போகவேண்டுமா?

'01 ஒக்ரோபர், 30 22:32 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home