அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, January 01, 2022

நடு என்பது கல்

 மையம், விட்டம், பரிதி கட்டமைந்த வட்டமொன்றை 

எங்கிருந்து வரையறுக்கத்தொடங்குவதாம்?


நடு என்பது கல்;

விளிம்பெல்லை,

உளவிரிவு; இடை

கூவுவது ஏதொரு 

அதிர்நாண்.


இருக்கட்டுமே! ஆனால்,

நட்ட மையத்துக்கும் சுற்று பரிதிக்குமிடை 

ஒரு தட்டைவட்டத்தை ஒட்ட

வரையறுக்கமுடியாப்போதில், உருள்

முப்பரிமாண முட்டையை

எப்படி முடிச்சவிழ்ப்பதாம்?


வரைவான் வரையறுக்க 

வல்லமையற்ற வட்டமொன்று

தன்னைத்தானே அமைய 

மீள்வரையும்.


முட்டை! ஓமோம்!

வெண்முட்டை, 

செம்மஞ்சட்பரிதிக்

கருவை சிதற உடைத்துக்கொள்ளட்டும்

சளி கோது சொட்டச்சொட்ட!


வரையறுப்புக்கு மேலான

வழி,

வரையழிப்பு!


அழிப்பும் 

ஆகவொரு

வெட்டவெளி வானுக்கான 

விடுதலைதான்!


12/17/21 வெ 21:!2 கிநிநே


0பின்னூடுகை:

Post a Comment

<< Home