அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

வேதாளங்களும் அவைதம் விரல்களும்

வேதாளங்கள் விரல்களை வைத்துக் கொண்டு என்ன செய்யும்?
குழந்தைகள் குரல்வளை கீறிக் குருதி உறுஞ்சுமா, இல்லை,
முள்முருக்கைமரம் முறியாமற் தாவி, நீள்வாற்காதலி வேதாளம் நாமம்
மரம் எழுதி,
கீழே எழுது காலமும் இதயமும் இட்டுக் கையப்பம் போட்டுக்
களித்திடுமா?
பல்போனகாலத்தே பிள்ளைச்சதை எலும்பிருந்து சுரண்டிச் சாப்பிடுமா?
சடையிருந்து வல்லிய கடிப் பேனெடுத்துக் குத்திக் கொலை பண்ணிக்
குதூகலிக்குமா?
அல்லது, அப்பாவித்தனமாக, அம்மாக்கள் எறியும் துண்டுக்கவளத்திற்காக
அவர் குட்டிகளுக்குக் கைதூக்கி 'ஹா!' என்று
பெயருக்குக் கத்திக் குருட்டுக் கண் விழித்து,
அவை பயம்செத்துச் சிரித்தல் காணததுபோலப்
பேசாமல் பிடி கவளத்திற்குக் கை நீட்டி வாய் பொத்தி
நின்றிடவா?
எல்லாம் அலுத்துப்போக,
அம்புலிமாமாப்புத்தகத்தே பதினான்காம் பக்கத்தில்,
பறக்கிறேன் என்று படம்போட்டுக் காட்டலுக்கா?

இத்தனையில் ஏது ஒன்றேனும் இயலில் இட்டிடல் இல்லை எனில்,
புரியாமற்றான் கேட்கிறேன், பதில் சொல் வேதாளமே:
++வேதாளத்துக்கு விரல்கள் இருந்தென்ன இலாபம்?
சும்மா இராப்பொழுது பிடித்த பெண்டாட்டிகள் தொல்லைபோதாதென்று
பிறகும் புதிது பிடிக்கக் கதைகேட்க வரும் உஜ்ஜயனி
விக்கிரமாதித்தன்
பின் முதுகு அழுக்குச் சுரண்டிப்பிழை பிச்சைக் கதாகாலேட்சபப்பதவிக்குத்
தகிங்கிணத்தோம் தாளமிடவா பிறந்திருக்கும்
இப்பெரிய மூட்டுச்சேர் எலும்பு விரல்கள்?++

0பின்னூடுகை:

Post a Comment

<< Home