அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஓர் இறந்த மனிதனின் நேற்றைய கடிதம்

அன்புள்ள
அம்மாக்கு,

திகதியிட்டுத் தொடங்கா
இன்னொரு
குறுங் கடிதத்தினாற்
துயர்படுவாய்
என அறிவேன்.

ஆனால்,
திகதிகள் ஒருபோதும்
ஓர்
இள
(பொருளாதார)
அகதியின் கதிக்கோணங்களை,
கோலங்களைக்
திசை திருப்பிவைப்பதில்லை
என்பதனை
நன்கறிவாய்
என்றேனும் நம்புகிறேன்.

முன்னைய கடிதங்கள் போலவே
இந்தக்கடிதமும்,
இரண்டுவாரம் முன் தொடங்கி
இன்னமும் நடக்கிறது,
நாட்காலக்கல்லால்
அடிபட்ட நொண்டிநாய்
நோவுடனும்,
கதியுடனும்.
இந்நிலையில்,
எந்தத்திகதியினை
இந்தக் கடிதத்துக்கு,
காதோரப்பூவாக
மேலொற்றைக்
கரையோரம்,
இட்டு வைக்க?

வழக்கம்போல்,
வட்டத்துள் வாழ்க்கை.

சிறைச்சட்டச்
சதுரத்துள்
எகிறி மனம்.

ஒட்டிவரா,
எட்டியிரு
சமபக்க முக்கோண உச்சிகளாய்,
உடல்
உணர்வு உலகம்


இவை விட்டால்,
வெட்டவெளியில்
காக்கை பறப்பதையும்
கழுகு கொடியில் இருப்பதையும்
சுட்டிக்காட்டி ஓரிரு
இரட்டைவரி எழுதலாம்.
அத்தனைதான் ஆகக்கூடியது....
.......................ஆனாலும், அதற்கெனக்கு,
போக மறுத்துப் போக்காட்டிய
இரட்டைக்கிழமைகளும்
இன்னமும் முற்றாகப் போதவில்லை.

இப்போதெல்லாம்,
எண்ணச்சுமைகளை இழுத்தெடுத்து
வண்ண எழுத்துச் சட்டை மாட்டலென்பது
ஏனோ இயலாத காரியம் என்றாகிப் போச்செனக்கு...

உன்னிடத்தில்,
"உவ்விடம் என்னவிடயம் ?" என்று கேட்டால்,
பக்கத்து வீட்டில் பாத்திரம் விழுந்தது மட்டும்
பத்திரமாய் பத்துப்பக்கம் எழுதி
கத்தி மேல் நடக்கும் காரியம் மட்டும் பண்ணிவைப்பாய்.
மிச்சப்படிக்கு,
எனக்குள்
உவ்விடம் உள்ளதெல்லாம்
சொர்க்கத்து சொகுசு சுகம்
என்ற கற்பனை தானாய் வளரும் என்று
சுத்தமான
கற்பனை செத்த
வளம் காய்ந்த எதிர்பார்ப்பு.

எதிர்பார்ப்புகள்,
உன்னைப் போலவே,
எனக்கும் வரும்,
தரும்
-உன்னை
இவ்விடக் கற்பனைச்சொர்க்கத்திலே
என் வாசம் என்று
எண்ணவைக்கக்கூடுமென்று-
எழுதி வைக்கும்
மின்மினிப்பூச்சிப் பின்னல் கட்டிவிட்ட
இருட்டு
எழுத்துப்பட்டங்கள்...

"இங்கே வெட்டவெளியிற் காகங்கள் பறக்கின்றன;
கழுகு தேசியக்கொடியில் சீவியம் செய்கிறது.
மிச்சப்படி, வழக்கம்போல நானும் நலம்."

கையெழுத்து தளர்ந்திருப்பதற்குக் கவலைப்படாதே.
மையிட்ட மலிவுவிலைப் பேனாக்கள்
இங்கே கையப்பம் இடுவது மோசம்;
மோசமென்றால் படுமோசம்.
அவ்வளவுதான்.

"மிச்சப்படி, வழக்கம்போல உன் அன்புமகன் மிக்க நலம்.
இங்கே வெட்டவெளியில் என்னைச் சுற்றிக் காகங்கள்
பறக்கின்றன;
கழுகு தேசியக்கொடியில் சீவியம் செய்வது விட்டு
கீழ் இறங்கி வருகிறது."

-'98 Nov 22 ~ '98 Dec 04

0பின்னூடுகை:

Post a Comment

<< Home