அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

டெக்காடூர் வீதி பழைய புத்தகக்கடை 5, பெப்ரவரி, '00

நுழைதலின் முன்னாலான
கணங்களைப் போலுமாம்,
அதன் பின்னாலும் உடனடியே
உடன்வந்த சில பொழுதுகள்.

என்னாலாகா தேதுமில்லை
என்றதாய்த் திட எண்ணம்;
அறிவுமுலை,
இனி உண்ணான் நான்
எந்நாளும் என்பதுவாய்த்
தலை பிற(ழ்)ந்த இரு கொம்பு.

~~~~~~~~~~~~~~
நகர்நேரத்துடன்
நுனி நன்னித் தின்ற
நூல் மஞ்சள் மணம்
செரியாக் குணம்.

தாவித் தின்னத் தின்ன,
மருங்குபற்றி மடிந்து
சுருங்கும் தடித்தோல்.

மூசிமூசி,
அறை மூலைத்தூசுள்ளும்
தேடினேன் முலைக்காம்பு.
~~~~~~~~~~~~~~

நுனிவிளக்கிற் தடித்தது,
திசை தத்தித் துடித்தது;
சரிந்தது திரித்தலைநுனி;
மங்கி மடிந்தது,
என்னுடைச் சா ரொளி.

முறுகி முறிந்தது தலைச்சுமை;
முள்ளூடைத்துத் திறந்தது,
மூலைத் தாழ்.

கனகு வெளித்தது பாலை;
கண் விரிந்தது உள்வனம்.

கத வகட்டி,
விலக்கிக் கால் கடந்திட,
கனத்ததொரு
நடைப்படு வெளித்தெரு.

இறந்தவரும் நெடுத்தார்;
இருந்தவரும் உயர்ந்தார்;
இனிவரப்போவாரும்
என் தலை மேலே
எழுக எழுகவென எட்டினார்,
விண்முட்டம்.

வித்துடைத் தாலெனத் தாமெழ,
வானிடைத் தொலைந்தார்,
வேதிய வாமனர்.
பாதநுனிப் பெருவிரல் ஊன்ற,
நோவு தலைதாழ்ந்து பலி
யானானேன்.

பின்,
பள்ளிப்புத்தகம் தொட்டகல்
சிறுபையன் நிழல் முன்னும்
சட்டெனச் சுருங்கினேன்;
பதுங்கினேன் சிற்றுடல்....
......... சுருள்மரவட்டைச்
சிறியனாய்
............ - நான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home