அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

வெண்ணெயை வெட்டி வெட்டி வீணாப்போச்சு எந்தன் கத்தி

வெண்ணெயை வெட்டி வெட்டி வீணாப்போச்சு எந்தன் கத்தி.

வட்டக்கிணத்துக்குள்ளே குதிரை சுற்றிச்சுற்றி நொண்டி நடம்;
சுற்றி வந்து எட்டிப்பாத்தேன், சுண்டிப்போட்டார் நாலு பணம்.

நாலு வெள்ளி நான் தின்னுமுடிச்சேன்;
நாளை தின்ன ஆட வேணும் நானும் இங்க பொய்க்கா குதிர.

ஆடி ஆடி அசந்துபோனேன்; அய்யோ காலு நொந்துபோனேன்.
ஓடி ஓடி ஒடிஞ்சுபோனேன்; அய்யா உருவமெல்லாந் தேஞ்சுபோனேன்.

கத்திக்கத்தி வத்திப்போச்சு ராசா தேசிங்கு தொண்டத்தண்ணி.
மொளை சுத்திச்சுத்தி சுத்தமாயே சுத்துதம்மா எந்தன் தலை.

முட்டைல மயிர்பிடுங்குற சிப்பாய்ங்க தேசத்துக்கப்பால
முட்டாக்கு இல்லாம முழிச்சுக் கெடக்கு போகாப் பெருந்தேசம்.

எட்டிக்குதிச்சா இழுக்கு தாறு.
எகுத்து நீஞ்ச அக்கரையாம்.

அக்கரைல ஏறிப்புட்டேன்;
ஆழமூச்சு வாங்கிக்கிட்டேன்.
அங்கே நானு கன்னுக்குட்டி.
அங்குமிங்கும் பச்சைப்புல்லு.
அப்போதே வந்திருந்தா,
அம்மா நானு காளைமாடு.

அண்ணாந்து பாத்தாக்க அம்மாம்பெர்ய ஆகாசம்....
ஆகாசம் மேவியெல்லாம் அழகழகாம் கல்லுமலை.

அம்மாடி, அந்தப்புறம் பாத்தாக்க,
மண்குதிரையில பாதி சனம்;
மரக்குதிரையில மீதிசனம்....
வெண்ணெயை வெட்டி வெட்டி,
வெறுங்கூச்சல் வீணாக் கத்திக்கத்தி
ஆத்தில போட்டாக அவுக எல்லாம் சலிக்காம.....
அத்தனையும் குனிஞ்சு பாத்தேன்...
அல்லாம் மொள்ளைத்தமிழ் வார்த்தைகளாம்.

முட்டாள்க தேசத்தில வெண்ணை முட்டாய்தான் விக்க ஆகும்.
தட்டோட தின்னுங்கையா; அதுக்கொரு தனித்தத்துவமும் சொல்லுங்கையா.

ஆலைதுப்பும் கரும்புச்சக்கை திங்கவாய்யா தெனமும் போட்டி?
அக்கரேல நானுமய்யா; ஆளைவுடுங்க அடிமுழுக்கரும்பு திங்க.

சுத்திச்சுத்திக் கெணத்துக்குள்ள சும்மா கொம்பைச் சீவுக்குங்க;
முட்டி முட்டி அலுத்துப்போனா மோனத்தபசு பண்ணிக்குங்க.

வீச்சரிவாளை வான்வெளில சுத்துங்கையா;
வெண்ணைய இன்னும் நீங்க வேகமாயே வெட்டுங்கையா.
ஆனாப்பட்ட அவனித்தேசம் அய்யாமாரே எங்கதுன்னு,
ஆளுக்காளு மார் வீரமாத்தான் மூச்சுப்போகத் தட்டிக்குங்க.
வெண்ணை வெட்ட வத்திப்போனா,
வெறும் வெரலை மட்டும் சூப்பிக்குங்க.
சூப்பிச் சூம்பின வெரலையெல்லாம்
வெண்ணைக்கட்டின்னு சொல்லிக்குங்க.

பொட்டைக் கண்ணும் பொதுவிலதான் பொத்திமூடி
முட்டையல மயிர்பிச்சுக்கிற சிப்பாய்ங்க தேசத்துக்
கப்பாலும் ஆகிக்கூட மூச்சுவிட்டு காத்துவிட்டு
முழுசாக் கெடக்கு முன்னெவரும்போகா
வலி பொருந்து பெருந்தேசம்.

ஆறு எப்போ நீங்க தாண்டுவீங்க?
அதை எப்படித்தான் தாண்டுவீங்க?

எப்பாச்சும் தாண்டீனாக்க,அண்ணாசி,
எனக்கும் போடுங்க ஒத்தக் கடுதாசி.

வெண்ணை வெட்டுற கத்தியெல்லாம் வீட்டுக்குள்ளாறத்தான்
போட்டுக்கிட்டுவந்தேன்;
ஆனாப்பட்ட அந்தக்கத்திய யாராச்சும் கண்ணாக்க, அதையும் எடுத்துச்
சுத்திக்குங்க.
ஆளுக்காளு தலை அங்குமிங்கும் வெட்டிக்குங்க......

...சும்மா கெடந்தாக்க சொரம் வந்து செத்துகிட்டல்ல போகும்
எங்கப்பன் கத்தி??

0பின்னூடுகை:

Post a Comment

<< Home