அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஒரு விற்பனைப் பொறிக்கவியின் உருமாற்றம்

A venting machine-poet's^ metamorphosis~

பாவங்கள் போர்த்திக் கொண்ட பல
பாடல்களின் சொந்தக்காரன்
நான்.

ஒரு விற்பனைப்பொறியின்
விலை பெற்றுக்கொண்டதற்கான
உற்பத்திக்கவிகள் என்னது.

பத்துக் கைதட்டுக்கு
பழம் மூன்று;
கொட்டைப்பாக் கிரண்டு
பச்சை வெத்திலைமேல்.
மேலுயரும் ஒவ்வொரு ஒற்றைத்தட்டுக்கும்,
மேலும் ஒரு கவி
புவி வேந்தர் மேல் இனாம்.

"இராஜ ராஜ சேரசோழ
சீ£ர்ச் சிங்காசனக் கொற்றவன் மேல்
ஏழைப் புலவன் இவன் பாடும்..."

- என்று விரிவதென் யாப்பிலங்கு காப்பியம்.

திரித் தீபங்கள் மூலம் தெருத்தீவட்டி
ஏந்திப் பிடிக்க ஆகும் என் கவித்துவம்.

~~~~~~~~~~~~~~~

பூச்சிகளைப் பூவென்றபோது
போற்றிக்கொண்டது உலகம்;
நீ£யும் போர்த்திக்கொள்ளென்றது
புதுப் பட்டுப்போர்வை.

இழுத்துப் போர்த்திக்கொண்டபின்,
பூச்சிகளின் உலகத்தே
பொற்கிரீடம் வைத்து
நகரக் காண்பாய்
உன் நா.

வாசலிலே விட்டுவந்த
மிதிகாலடியாய் வீழ்ந்திருக்கும்
எழுத்து நேர்மையும்
கவிச் செருக்கும்
கற்பனைதன்
கள் ளூற்றுக்கண்ணும்

~~~~~~~~~~~~~~~~~

முதுகுப் போர்வை பூத்த
மறு காலையிலே
விழித்தபோது,
ஒட்டிய போர்வை உற்ற கல்லோடாக
வட்டக்குதத்து எட்டுக்காற்பூச்சி ஒன்றாய்
ஒரு சிறு வட்டத் தொழுக்கில்
உருளக் கண்டேன்,
நான்,
குடல்பிதுங் கென துடல்
- எங்கெனாதில்லாது,
இடைநேரம் தப்பாது,
ஒரு விற்பனைப்பொறியில்
விலையிட்டு விரல் அழுத்த,
வாயு நுரை சத்தக் கவி
துப்பு -ஒப்பில்லா-
சந்தகக்கவி நான்;
இனி,
கவி என்ப தெனதே.

~~~~~~~~~~~~~~~~~~~~~

'பெரு மன்னவனும் நீயே!
இவ் வள நாடும் உனதே!
நின்னை யறிந்தே
நான் ஓதினேன்
என் தமிழ்'

~~~~~~~~~~~~~~~~~~~~~~


^ thanks for the word, 'venting machine journalist'
that I have come across in CIRCLE.

~ dedicated to Kafka's life style and death.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home