அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

என் குரு

பின்னு,
கருஞ்சிலந்தி,
நீ பின்னு...

முன்னும் பின்னும்
ஊறுநீர் அள்ளி உமிழ்ந்து
எண்ணத்தில் வலையன்று
இழுத்திழுத் தியைந் தின்னும்
பின்னு
பெருஞ்சிலந்தி
பின்னும் பின்னு
நீ.

உன்னை இருத்திக்கொள்
உள்மையத்துடிப்பென்று.

உன் செயல்,
கசியப யோகம்;
உன் திரள் வலை,
எழு கறையான் புற்று.
பொறி உணர் வட்டம்,
முழு வலையினுள் ஒடுக்கம்.

வெளிப்புவிச் செயல் விடுத்து,
பற்றுக நீ,
உன்னைப் பற்றிக்கொண்டதை;
மெல்லத்தின்னு
நின்னைச் சேர்ந்ததை;
மேலும் மோனத்திரு,
முட்கால் முனிவ,
முக்காலத்தும்,
நாடித்துடிப்பனைய
பின்னொரு பூச்சிப்பொருள்
உன்முன்னே அசைவெண்ணி,
பேசாமலே உன்னிடத்தே.

ஊற்றுக்குழியின் உட்சூடும் குமிழும்
உன் தேக்கமற்ற தெளிசிந்தை;
பார்த்துக்கொண்டிருக்க,
மொட்டு முகிழ்த்துப் பூக்கும்,
புன்னகைக்கும்;
வியர்க்கும் உடல், வெடிக்கும்.
தன்னுட்
புதையப் புதைய,
மனம்,
தேகமற்றுக் குமிழ்க்கும்
தேர்ந்த வண்ண நீர்க்
குழம் போவியன் தன்
ஊற்றுக்குழிச் சித்தம்
- உனது.

கொல்லாமை கொள்தல் மட்டும் நோன்பல்ல;
உண்ணு புலால் உயிர் கொல்ல எண்ணி,
தானொடுங்கிக் காத்துத் தரிப்பது மாகுமாம்,
- சடத் தவயோகம்.

வீட்டுச் சுவர் மூலை,
ஓட்டை எச்சில் வலையுள்
ஒடுங்கும்
என் ஒப்பற்ற குருவின்
முழுச்சீவியம்.

மெய்யறிந்துரைப்போன்,
எந்நிலையும் எக்கணமும்
மிக்க எளியன்; மிக அருகன்.

அவன் இவன்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home