அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

அண்டப்புணர்வு

அவரச அரிதாரப்பூச்சு
முகிற்பொதி கடந்து
அம்புலித்தரையில்,
அதற்கற்பால்,
என்ன நிகழும்?

பால்
வெளி பின்னும்,
இருள் வீச்சுத்தாரையில்,
சரச ஜதி உற்பவித்து
அண்டவெளி நாட்டியம்
ஆடும்
ஒளித்தாசி உடுக்கள்.
காற்றின் தாளங்களுக்
கவை யடங்கா;
அலை அவை ஆர்ப்பரிப்பும்
அவை யடக்கா.
எதிர்ப்பாலைக் கவர் நோக்கு
மயில் ஆட்ட மழை நடனம்.
ஒயில் துள்ளித் தெறிக்கும்,
அண்டக்குடத் துமியாய்,
அம்புலிமேல், இரை
அலைகடல்மேல்.


ஒளிக்கோலம் உள்வாங்கி,
விழுங்கி விழுங்கித்
தணிக்க எண்ண
வேள்வித் தீ
ஆகுதிநெய்யாய்
ஓங்கி எரிக்கும்
உடுக் காமம்,
வறள் நா தடவி
என்
உதட்டு எச்சில்.

மனவிம்பத் தெறிப்பு,
வான் காணும்
பொருளெல்லாம்
ஒளிக் கதி மேவி
ஓடி,
ஊடி,
கூடிப் பரவும்;

ஆகாயப்
பால்வீதி
கறங்கி
கறுப்புப் பெரு வட்ட
முலை பிதுக்கி
காமத்துப்பால்
சொரியும்,
விண் கதிர்கள்.

கதிர் நீளும்;
விண்கற்கள்,
என்
விழிபார்த்து
அம்பெ றிவளைவில்
நிலம் நோக்கி
நெடுங்குறியாகி
தாவி..
... ஒளிரும்;
... ஒளியும்;
... ஒழியும்.
... ஒலியாய்
கை கொண்டு
அணைத்திருக்கும்
இது காணும்
கடற் காற்று.

வெளியோடு
கூடி முயங்குவேன்.
பெரு வெடிப்பில்
வெளிப் பரந்த
அண்டமும் காலமும்
கடிதெனச் சுருங்கி
ஒரு கையடங்கு
குன்றுமணியாகி,
குண்டூசி முனையாகி,
இன்னமும் பரிதி,
குறுகி, தன்னாலே
அதுவும் தொலையும்.

மூளை
மூலைக்குள்ளெல்லாம்
முளைக்கும்
பிசிறு மகரந்த
முளைகளாய்
உடுக்காமம்.

ஊதிப் பெருத்து
ஒப்பற்ற
அண்ட உடலாவேன்
நான் இரவில்.

காலம்,
கைகட்டி நிற்கும்
காலடியில்.
காற்றருகே,
வாய் பொத்தி..
கடல்
ஓயாமல்
உரத்து
ஓலமிடும்,
"இன்று,
உன்னை உடுக்களுக்கு
இழந்தேனோ நானென்று!"

கையகட்டி,
காலகட்டி,
யோனி பிரி
வெளியோடு
கூடிப் புணர்வேன்.
கணம் ஒன்று,
மெய்த் தாகம் மேலேறி
நான் இயங்கு ஆணாவேன்;
சரீரம்
சலங்கையாகும்;
சபலம் தாளாது
சப்திக்கும்.
தாபம் தாளா உடுப்பெண்ணின்
வேகம் விரைந்தேற
முயங்கு கதி சோர்ந்து
கீழ் வீழ்ந்து
புணர்விற்
பெண்ணாவேன்,
என் நிலையில்.

சூழ்ந்திருந்து
இயங்கு நிலை
காண் இரவின்
சாட்சிகளோ,
அதிர்ந்து நிற்பார்.
காற்று,
மனம் கனத்து
மரங்களிலே
விழுந்துப்போகும்.
கடலோ,
அலை நிறுத்தி,
அழுதிருக்கும்.
மீன்கள்
உறைந்து
தூங்கியிருக்கலாம்,
மிகுதி உலகைப்போலவே.
மணல்,
தன் மடியிற்
தானே
மல்லாக்கக் கிடக்கும்.
விதிர்விதிர்த்து,
விழி விறைத்து.

கூடிப்புணர்வேன்,
இருளில்,
சந்திர ஒளியை,
உடுக்களின் ஜதியை,
அண்டத்தின் ஆட்டத்தை
அவற்றின் ஆக்க மூலத்தை,
அனைத்தினையும்
அதனுள் இழுத்தணைக்கும்
இருட்கனத்தை...

கதி உச்சக் கனப்பினிலே,
உடல் கணத்து
நெருப்பாகும்;
மொழி குழறி,
கற்பனை
துண்டம் துண்டமாய்,
பிதற்றும்
இன்பித்து,
ஏதேதோ.

நாட்டிய ஜதி
உடலேறி,
உன்மத்தப்
புணர் வோயக்
கக்கிப் பிரசவிக்கும்
கடற்கரையில்.
காலவெளி,
-ஒரு
கவிதை.

நான்
மீளச்
சுருங்கிப்
போவேன்,
கடலோரக்
காற்றாடு
சிறு
மனிதனென.


'99/03/09 செவ்வாய் 23:57 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home