அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சொற்களுக்குத் தீக்குளிப்பு

சொற்கள் தீக்குளித்தாகவேண்டுமென்று
பட்டிருக்கிறது என் நெஞ்சுக்குள்.
தமக்கெனச் சொல்லச் சொல்லிவைத்த கருத்தெல்லாம்
காலத்தே சோரம் போக்கி முனை மழுங்கிச் சிதைந்/த்த
பொய்ச்
சொற்களெல்லாம் இன்றைக்கே
தம் கற்புக்காட்ட தீக்குளித்தாகவேண்டுமென்று
தீவிரமாய்ப் பட்டிருக்கிறது என் நெஞ்சுக்குள்.
பத்தினிக்குப் பாஞ்சாலி,
கற்பினுக்குக் கன்னி மேரி,
வெட்டிவிட மூன்று "தலாக்",
என்று செயற்படுவோர் இஷ்டப்படி சோரம்போன சொற்களெல்லாம்
மனைவி மனம் பத்திரமா தன் வசத்தே என்று தேடத்
தீயிட்ட
இரகு வம்சக் கோசலைபுத்திரனை,
உத்தமனாம் என்று சொல்லு வெட்கமற்ற விடச்சொற்களுடன்
உடனடியே, இட்டுப் பார்க்கவேண்டும்,
ஓங்கியெரி ஓமப்புகை யாகக்குண்டத்துள்,
தாமும் காய்ந்த பனையோலையாய்ப் பற்றியெரிகிறதா
பசுநெய்பற்றிப் படரத் தீ என்று
பார்த்துவைக்க.

இத்தனைக்கும் தப்பினால்,
பின்னும் இட்டுப்பார்க்கவேண்டும்
இன்னொரு தடவை, இவை எல்லாம்
இழுத்தோடும் குளிர்புனலில் சேருமா தாம் குறியாய்க்
கரையென்று.

இங்கும் இவை தப்பிவைத்தால்,
உங்களுக்கு ஒரு விண்ணப்பம்,
~அனலுக்கும் புனலுக்கும் நெறிவழுவாக் கற்பு
இருத்தலோ எனக் காண எனக்காரும் ஆக்கித் தரவேண்டும் ஒரு
சிறு கருவி~.

-'98 ஏப்ரல் 07, செவ்வாய் 15:43 (EST)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home