அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

98 ஆனி 25 அதிகாலை வடக்கு 16ம் தெரு, மில்(§)வாக்கி

ஆனி
வெப்பகாலத்தில்
குளிர்காற்று சிநேகம் பேசும்;
அதற்கு பனிக்காலத்தின்
என்மீதான பெரும்காய்ச்சல் விட்டுப்போய்
இன்றைக்கு இப்படி ஒரு மூழ்கடிக்கும்மோகம்
என் மேனியில், முடியில்,
முகத்தில், மூக்குத்துவாரங்களில்.

பத்திரிகைவாகனங்கள்,
சந்திப்பெட்டிகளில்
'மில்வாக்கி சென்ரினென்ரல்',
'சிக்காகோ ரிபியூன்',
'யூஎஸ்ஏ ருடே'
இட்டு பூட்டிழுத்து மூடிப்போக,
அதிலொரு பத்திரிகை சொல்லும்,
அமெரிக்கத் திருட்டுக்குற்றங்கள் குறைந்திருப்பதாய்.

எட்டி அடியிட்டுப் போவார்கள்,
இரு கன்னியர்கள் உடலொட்டு
கட்டைக்காற்சட்டையுடன்
துளிர்வேர்வை மின்ன;
நெஞ்சங்கள் துள்ளும்,
காரணம் அவர்களினதில் எனில்,
காரியம் எனதில் விளைவாய்.
பிறகு சட்டென்று,
கிட்டத்திலிருந்து எட்டி யாரோ குட்டியது போலொரு வரி வலி
இதயத்தே;
"பெண்ணை இன்பப்பொருளாய் எண்ணாதே"
வெளிவிட்ட ஆமை ஆணுணர்வு சட்டென்று தலை உள்ளிழுக்கும்
ஏதோ வெட்டி வீழ்த்த வந்ததுபோல்.
கொள்கைக்கும் உணர்வுக்கும் கொடும் துவந்தயுத்தம்
நிகழ்ந்திருக்கும்.
யாரைச் சுட்டுத்தள்ள?
சிக்மண்ட் ப்ரயட்டினையா, இல்லை, சிமொன் டி பூலரையா?
முன்னைப்போல் அந்நேரத்துக்கும்,
பின்னொரு (முறை வராப் பொய்) நேரத்துக்கு
விட்டுவைப்பேன் அக்கேள்விதனை.

இத்தனைக்குள் என் கையில் யாரோ,
"இயேசு ஜீவிக்கிறார்" என்று சொல்லி
ஒரு கத்தைக் நீலக்காகிதம்
சிலுவையாய்ச் சுமக்கத் தந்துபோனார்.
இருக்கலாம் என்று மனதிற் பட்டது,
நேற்றைக்குத்தான்,
"அவர் நிச்சயமாய் வர இருக்கிறார்" என்று இன்னொருவர்
வேறொரு மஞ்சட்காகிதம் இரண்டாகத் தந்துபோனார்;
என் நம்பிக்கை இரட்டைப்படுத்துமென எண்ணியிருக்கலாம்.
என் நம்பிக்கையல்ல
இந்நேரம் எனக்கு முக்கியம்.
தந்தவர் இவன் வாசிப்பான் என்று வைத்த நம்பிக்கை ஆனந்தம்
வாழ்ந்திருக்க,
தொலைப்பார்வைக்காரர் காட்சித்தூரம்வரை அது மேய்வதாய்ப்
பொருள்பண்ணுவேன்.

இடையில், வெட்கமின்றி என் வேதனை அறியாது
வீதி கழுவும் வாகனம் தெறித்துப்போகும்
சில அழுக்குச் சொட்டும் நீர்த்துளிகள்.
இன்றைக்கு எனக்குப் பெரும் திருப்தி;
நேற்றிட்டதற்கு இந்நேரம் இரண்டு பொட்டுக்கறை குறைவு.

யாரோ "காலைவணக்கம் இளைஞ" என்றார்
என்றைக்கும்போல் காலை எழுந்து
கடன் முடித்து உடை அணிந்து
வராத மகனுக்கோ மகளுக்கோ
விஸ்கொன்ஸின் வீதி முடிவின்
வாகனத்தில், சூரியனில், தேவாலயத்தில்
(ஏதென்று இத்தனைக்கும் நானறியேன்)
முனைப்பிற் கண் வைத்து வைத்து
முதியோரில்லக்கிழவி.
பதில்வணக்கம் தன்னிச்சையின்றிச் சுரந்து
சுரத்தின்றி காற்றில் மிதக்கும்;
தூரத்துத்தாயின் தொலைபேசி வேண்டுகோள்கள்
மனம், பூச்சிகள் ஏறிவிளையாடும்
களமாக்கிக் குறுகுறுக்கும், சுவர் அரிக்கும்.

பிறகு எவரோ பேரூந்திற் போகப் பணம் கேட்டார்கள்;
"போப்பா, நானே நடக்கிறேன், நீ கேட்பது நியாயமா?"
-என்றொரு நியாயம் அநியாயமாய் முன்வைத்து
மறுவாதம் எழமுன் பிடிவாதமாய்ச் செவி
தன்னைச் சில சொற்களுக்குக் கட்டுப்படுத்தும்.

வீதிச்சமிக்ஞையின் பச்சைக்கு பார்வைவைத்த
முப்பதாம் இலக்கப் பேரூந்தின் பின்னிருக்கை
இலத்தீன் குழந்தையன்று அஞ்சாமற் கைகாட்ட,
என் பதில் வெளிநீட்டுக் நாக்காட்டலுக்கு
அதன் அன்னை முறைத்து, அதை அதட்டி
மறு திசையில் காலத்தே பட்ட ஒரு மொட்டைமரம் காட்டுவாள்.

அத்தனையும் விரைந்து
நடந்தது உணரமுன் கரைந்துபோகும்
காலத்தில் வெடித்த வெற்றுவளிக்குமிழாய்
வியாழன் காலை வடக்கு 16ம் வீதியிலே.

மீள நாளை விடிபொழுதுக்கும்
தொடர்ந்து பின்வரு நாளைக்கும்
வளிக்குமிழ்கள் சேற்று நிலமிருந்து
மேலெழுந்து ஆற்றுநீர் மேற்பரப்பில்
வளிவெளியில் தம் வடிவம் கரைத்துப்போகும்.

வெறும் காற்று மட்டும்
அடர்த்திமிகு அண்ட இருட்டுளையாய்
எழும் அனைத்தும் உறுஞ்சி தானாய் மாற்றி வைக்கும்.

இன்னொரு காலத்திற்கு
என்நிலையில் இன்னொருவன் நடப்பான்;
மீதிப்பாத்திரங்கள் வடிவம் மாறும்;
அவைதம் செயல்களும் அதுபோலவே.
பின் கரைந்து காலத்தே ஆவியாக,
காலியாய்ப் போகும் பாத்திரக்கொள்பொருட்கள்.
ஆயினும் என்றும் காலை காலையாய் விடிந்திருக்கும்,
கண்கொண்டு பார்த்திருக்கும் அத்தனை கண விளையாட்டும்.

நான் நடப்பேன் குளிர்காற்றின்
நட்புக்கு மன நன்றி சொல்லி.

-98 ஆனி 25, வியாழன், 07:13 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home