அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மனச்சிறைப்பட்ட நண்பனுக்கு

உனது வீட்டுக்குள்
என்னால் நுழையமுடியவில்லை.
வினாக்களே வேலிக்கதியால்களாய்,
நண்ப.
கதவுகளின் பூட்டுக்கள்
முழுப்பெரியமுற்றுப்புள்ளிகளால்
மெழுகிட்டு முத்திரை குத்தப்பட்டு.
ஆயினும்,
வீட்டுக்குள் உனக்கே விலங்கிட்டு
விரக்தியில் நீயிருப்பது நானறிவேன்.
கேள்விக்காவலூடேயும்,
மனவீட்டு ஒளிக்கீற்று
மின்னலிட்டுச் சொரிவதை
நான் பார்க்கவில்லை என்று மட்டும்
உனக்குள்ளே ஒரு வீண் ஒப்பனையை
உருவகித்து வைக்காதே.
மனம் வண்ணத்திற் பூத்துக் குலுங்குவதை
பார்க்கமுடியாப் பூட்டுக்களில் வாயிற் காப்பெனிலும்,
"என் மூக்குக்குள் எங்கே உரசவந்தது இந்தப் பூமகரந்தம்?"
என்று என்னைக் கேட்டுக் கிடப்பதையேனும் அறிந்து கொள்.
காற்றுக்கு காத்திருக்க வேலியில்லை.
மனவீட்டுக்கும் மூடக் கூரையில்லை.
சங்கிலி பூட்டிப்பூட்டி வேயினும்,
ஓட்டைவிழுந்து என் எழுப்பு ஒலி பரப்ப
வான் வெளிக்கு வாய் திறக்கும் உன் மனக்கூட்டுக்கூரை.
கடலளவு மனவெளியை கை அழுத்தி
உன் காற்சட்டைப்பை அடக்கி இருத்த எண்ணுவதை
என்ன சொல்ல?
கேள்விக்குறிகள் வளரலாம்;
விதைபோட்டு மேலும் சிறு கேள்விக்குழவிகள்
நிலம் முளைத்துத் தவழ்ந்து
கூரை அற்ற வீட்டின் மேல் விஷ நிழல் பரப்பலாம்.
ஆயினும்,
வீட்டுக்குள் இல்லாவிடினும், வெளிக்கேனும்
உன் தோட்ட சிறு மகிழ்ச்சிப்பூக்களின் நாற்றம் பரவும்;
வெறுமைவெளிப்பூட்டுக்கள் இற்று உடையும்;
கூரையின் பிணைப்புச்சங்கிலிகள்
தம்சுமை வேதனை தாளாது தாமே ஒடிந்து
உன் தலைவிழுந்து தாக்கும்.
வேண்டாம் இந்த வேண்டாத விபரீதம்...
இருள் தேட்டத்தைக் கூட்டுதல் விட்டு வெளியே வா.
இப்போதே சிறு குரல் செருமி ஒற்றை வாக்குக்கொடு.
வேண்டுமானால்,
கதவுப்பூட்டுக்களை நானே உடைத்துவைக்கிறேன்,
காற்றோட்டம் வந்திருக்க;
கேள்விப்பாம்புவேலியைப் பிரித்துவைக்கிறேன்,
பெரும் பாராங்கல் கொண்டு தாக்கி.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home