அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நிழல்கள்

நிழல்கள் கூட நிஜங்களைப் போல
நேர்மை செத்தவை என்றே பட்டிருக்காதோ உனக்கு?
எனக்கு, அவை குரூரம் என்று கூடத்
தோன்றும் அவற்றின் வெளிச்சொல்லா
இருட்பகட்டு, போலிக் காருண்யத்திற்கு.
சார்ந்ததன் வண்ணமாய், நிழல்கள் நீண்டே கிடக்கிறன.
குழல் விளக்குக்கு படிந்தேன் படியேன்
என்ற இருப்பும் இல்லாமையும் சொல்லவொண்ணா வடிவாய்;
பின், சிறு குமிழ் விளக்குக்கு,
முன் சொன்னதெல்லாம் வெறும் பொய்மை,
இங்கே பார் எம் இறுக்கம்படி கூர் விளிம்புச் சீர்மை என்கிறன.
உன்னது மட்டும் என்றில்லை;
நேற்றிரவு,
இரு விளக்குக் கம்பம் தாண்டு இடைவெளியில்
ஒளியிற்கு என் துணை தேடி,
நான் நகர் இரு புறமும் நிலம் படிந்து
கூடி வந்து இடைவெட்டில் இருட்டுக் கூட்டி,
நீண்டு விலகி, விலக நீண்டு,
பின் போவேன் என்று சொல்லொரு பொய்ப்புன்னகைகூடிக்
கையசைக்காமல் விட்டுத் தேய்ந்து
தனிமையிலே என்னை இருள் விட்டுத் தான்
தொலைந்து போன கருமைப்பொய்மை யாருடையது?
என்னுடைய பிறவிதொட்டுக் கூடப் பொய் பேசிவருவதுதானே?
விளக்கடி போக தன் விபரம் தெளிதல் என் கண் பட அஞ்சி
விலகி என்னுள்ளோ, என் பாதம் கீழாயோ
எங்கோ மறைந்து மடிந்து
ஒளிக்கு ஒளித்துப் போன, நடை வழிக்கு ஒழித்துப் போன
விபரம் சொல்லாமல் ஒலியாது போனதும் என் நேற்றைய
அந்நிழலே.
இப்போதுதான் ஒத்துப் பார்க்க நிஜம், நிழல்,
நீ, நான் எல்லாமே ஒன்று என்று பட்டிருக்குதே வெற்றுப்பார்வைக்கே!
பெண்ணே,
இப்படியாய்,
நிழல்களே நிர்வாணமாய்
இதுதான் நிஜம் ஏற்றுக்கொள் என்று எட்டி உலாவுகையில்,
நிலைக்கண்ணாடி முன்படு முழுப்பிம்பம் எனப் பேசுகையில்,
இனியும் எதற்கு உன் நிஜத்திற்கு முகமூடி,
பேசுகையில், விசுறுகையில்,
பின்னுகையில், தூங்குகையில்,
பேரீச்சம்பழத்திற்கு, ஒரு காசுக்குக்கூடப் பேரம் பேசுகையில்?
வெளியே அது விட்டெறிந்து கிட்டவா, சிறு உதடு,
இரவு தூங்கமுன் ஒரு ஈர நீள் முத்தம் தருதற்கு.
வேண்டியவர்கள் தூக்கிப்போட்டுக் கொள்ளட்டும்
முற்றத்தே முழுவாழ்க்கைக்கும் விசிறியெறிந்ததை
இரவுக்காட்சி முடிந்து வீதி சீட்டியடித்துப்போகையில்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home