அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஞ் இன் குட்டிகளும் ங வின் உடன்பிறப்புகளும்

மனதுக்குட் பொத்திப் பொத்திப்
பல நாளாய்ப் பயந்திருந்து, இன்று
வெளித் தெரிந்த கள்ளக் கர்ப்பம் என்றாகி,
உயிரோடு மெய்புணர்ந்து பிறந்துற்ற
பழம் தமிழ்க் குட்டிகள்தம் வேட்டைக்கு
விடப்பட்ட வேல் குத்தி மனம் கிழியும்.

நடைமுறையா வழிமுறையா என்றாகிப்போனதிலே
இன்றைய இளைஞரென என் நிகழ் காலம் எண்ணி
இதுவரை கூடி வந்த நியாயம் கொன்று போவோமாம்.
இனி வரும் என் பல நாட்களில்,
முன்னோக்கிப் பாயும் துடிப்பு,
எம் பின் போன தடத் தடயத்தை
அழித்துப்போகச் சொல்லக் காண்பேன்
என்றே மனம் ஏனோ பட்டிருக்கும்.

பன்னெடுங்காலம்,
ராக்ஷ்தர் ஹதம் பண்ண வரு ராஜாக்கள், அவர் புத்ரர்கள்
ஸிம்ஹாஸனம் ஸ்ரீயோடு தேஜஸ் வெளியோங்க,
சாமரம் வீசிச் சாக்ஷாங்டமாய்த் தண்டனிட்டு,
பின்னைப் பயனுக்கு என்று பெற்ற
முன்னைத் தமிழ்க் குட்டியெல்லாம்,
சோம்பச் செய்து தூங்கச் செய்து
வாயிலே வருவோரை, வதைப்போரை
வீணே காலம் வாய் பார்த்திருக்க
விட்டிருந்தோம் நாமெல்லாம்.
இற்றை நாள் சொல்லிப்போகும்
இத்தனையும் கண்ணுக்குள் எம்
கைவிரலே கொண்டு குத்து குற்றமென.
குந்தி ஐந்து கணவர் கனவிற் கொண்டிருந்து,
பாண்டுவின் பெயர் சொல்லித் தள்ளிய பிள்ளையர்
பெருங்கதையூடே வந்திருந்தவையெல்லாம் காளவாய் திறந்து
மொழி வளம் தின்று மென்று வாள் கொண்டு இங்கு அரசோச்ச,
இயல்பாய், முன்னைய ஞ் உம் ங் உம்
உயிரோடு தம் மெய் புணர்ந்து பெற்ற சொந்தப் புத்திரர்கள்
தம் தாய் மொழி வாய் நின்றதுவும் தள்ளிச்
சாவாயில் செலுத்தல் எம் சரித்திரமாய்ப் போயிற்று.

வந்தவரை வரவேற்று
தளம் கொடுத்து வளம் கண்ட
கன்னிக் குந்தி பெறு கர்ணன் மனத்
தமிழ்த்தாயே, கேளாயோ
உன் ஓர் அநாதைப் புதல்வன் மனச்சொல்;
இனி வரும் மொழிப் பொழுது, புழுதி, போரிலெல்லாம்
வந்திருப்பர் புதியவர்கள், முன்னையர்
மூக்குள்ளிட்டுப் புகுந்ததுபோல், புண் கொள்
பொய் முகம் ஏதும் பொருத்திக் கொண்டு.
அந்நிலையில்,
இற்றைய இராஜாக்களும் இறங்கிக்
கொற்றவன் கோல் கொடுத்துச் சாமரம் சாய்த்து
ஆலவட்டம், வந்த அந்நியர்க்கும் பிடித்தலாகும்.

உன் ஒரு முதுமகன் -என் மூதாதை- சொன்ன
பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பதுதான்,
அம்மா; ஆனால்,
புதியன புகுதலுக்காயே பழையன உயிர்மெய்
பரிதாபமாய் பறித்தெடுக்கலாமோ;
சொல் எனக்கொரு சொல்,
இல்லையென மனம் குளிர!
இன்றிரவுத் தூக்கத்திற்கெனினும்
ஒரு துயர் குறைந்து நான் கிடப்பேன்.

மெய் உயிர்கள், அவை கொன்று உனை வளர்ப்போம்,
உள் நுழை, உன் உடல் ஓம்பு பொய் ஊசி மருந்திட்டு
என்றால்,
அன்னையே, உன் இற்றைய தத்துப் பெற்றோருடன்
செத்தது சம்மதம் எனக்கு; உன்னோடும் இனிக் கூடிவரப்பொறுமையில்லை.
இருந்துபார்,
என்றாவது முன்னைய உன்னை அவர் உன் பின்னைய உருவிற்கே,
'நீ யார்?' என்று கேட்டிருக்க ஆக்கிப் போவார் கிலேசமேதும்
மனமின்றி.

கூடிவரு பயணவழி இத்திருப்பச் சந்திலே என்னை விடு;
கணிப்பொறி விசைத்தறி உடைத்திருந்து, அ·து
இற்றைக்காலைக் கஞ்சி கொதிக்க அடுப்பெறிந்து,
ஒற்றைக் காய்ந்தோலை தேடிக் கண்டெடுத்து,
அதன் உடலம் நோகக் குற்றிடாமல்,
இரவலற்ற எழுத்தாணி கொண்டேதோ
உன் இறப்புப் பற்றி எழுதி அழுதியிருக்க;
பின், அங்கிருந்தென் வழியேதும் கண்டு போக.

இனி வரும் என் காலமெல்லாம்
ஓர் எண்ணத்தே இயைந்தோடியிருக்கும்;
இதற்காய் ஒரு விதி செய்வேன்;
அதை எந்நாளும் காத்திருப்பேன்.
எனக்கோர் அழகுப் பிள்ளை பிறக்க,
எழிலன் என்று பெயரிட்டு உன் வடிவு
காத்துக் கண்டிருந்தார்போல்,
'ஞிழிšன்' என்றிட்டுச் சரியாய் எழுதி
உனை நாளெல்லாம் நான் அழைத்திருக்க;
என்றோ ஏதோ இயந்திரம்
எவரோ எங்கோ கண்டு உலகளிக்க,
உன் உளத்தில் அதன் பெயர், 'ஙியš'
பொருந்திவர போட்டுவைத்துப் பார்த்திருக்க.
பாவனை அற்றதால் செத்துப்போகும்,
ஞ், ங் குட்டிகளெனில், பாவனை காண்பதை
நான் என் புண்ணியமாய்ச் சேர்த்திருப்பேன்.
நீ போ பெற்றபிள்ளை கொல் பாவம்
தனைச் சேர்த்துப் பிறன் மனைக்கு சோரம்போய்.

வெற்று விளக்கப் பெயரில் என்ன மெய் வாழ்ந்திருக்கும்?
அ·து உள்ளே ஊடுருவிக்கொண்டுபோம்
உயிரல்லவா உனக்கோ வேறு மொழிநங்கைக்கோ உயிராகும்?
உனக்கு விருப்பமெனில், உன்னை அன்று வாழ வைத்த
வள்ளுவன்தன் பெற்றோராய், உன் நோஞ்சான் குட்டிகளை
பெற்றெடுத்த அக்கறை செத்து, பின் வரும் புத்திசீவிகட்கு
பிரேதப் பரிசோதனைக்கு, பழம் புத்தகத்தில் விட்டு விட்டு,
வீரியம்கொள்
வெளியூர்க்கோமான்களுடன் கூடிப்போ கொண்டாடி.

உன் பெயர் பேசிப் பிறந்ததற்காய் நானுமொரு
நாடு செத்த நாடோடி அநாதைதான்;
ஆனால், கணிகையெனக் கண்டதுடன் கூடிப்
போகும்முன் கேட்டுக்கொள் என் மொழித்தாயே,
மனப்பலமிருந்தால்,
தாய் செத்த அநாதைகூடத் தன் வலிசெத்த சகோதரர்கள்
போஷித்துப் பார்த்திருப்பான்; புரிந்துகொள் நேரம் கண்டால்.

இற்றைவரை எனைக் காத்திருந்ததற்கு நன்றி;
போய் வா கடாரம் கொண்ட
வைகை பெறு குமரிப்பெண்ணே
மின்னோடு கணினி முகச்சாயமிட்டாட.
வளமாகட்டும் வாழ்த்துக்கள்,
கணம் கடந்த காலம் எண்ணி
உன் மகன் ஒருவன், அவன் கூடக்
கிட ஞ ங தம் சோதரர்கள்
மனமிருந்து உனக்காக.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home