அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நிழல் வெளி மாந்தர்கள்

நிஜவாழ்விற்
சுத்த வளியைச்
சுவாசிக்க மறுக்கும்
சமூகம்
நிழல்வெளியில்
மரபு உடைக்கட்டும்.

முள்வேலி மூட நெறிகளும்
காட்டாமணக்கு புரோகிதங்களும்
நாசமாய்ப்போகட்டும்
மின்துகட் காற்றோடு காற்றாகி
கருஞ் சாம்பல் பறக்க.

இவ்வெளித் தேனீர்க்கடைகளிலே
பருகு கிண்ணங்கள்
வண்ணப்படி வரிசைப்படுத்தவேண்டா.

எழுதுவோன் சிந்தனை மட்டும்
இட ஒதுக்கீடு பண்ணியிருக்கட்டும்
இந்நிழலில்.

கூரைக்குத் தீவைப்போன்
கேலிக்கூக்குரல்கள்,
கேளாது போகும் செவிடர்களாகட்டும்
இம் மின்நிலத்துப் புதுமாந்தர்.

ஆத்திரங்கள்,
தார்மீகத்தளமிருந்து
மட்டும்
ஏகட்டும்,
பொடிபடட்டும்,
பொய்யான புரட்டுவாதங்கள்,
இடிபட்ட கண்ணாடி வீடென்று.

சீண்டுவார் கைவிரல்கள்,
சோர்ந்து போகட்டும்,
தூண்டுண்டு துள்ளும்
மூடர்கள் சேராமல்.

போற்றுவார் போற்ற,
புழுதி அள்ளித் தூற்றுவார்
தள்ளி வைத்துப் புறப்படட்டும்
இங்கு
இனி ஒரு புதிய சமுதாயம்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home