அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நானும் கூடவே என் தபாற்பெட்டியும்

ஒலிக்க மறுத்திருக்கும்
அறைத் தொலைபேசியில்
உன் குரலை
எதிர்பார்த்துக் காத்திரா
என் மீதி அவப்பொழுதுகளில்,
இனி வராது என்றறிந்தும்
உன் கடிதங்களைத்
தேடிக் கிடப்பேன்
என் வாயிற் தபாற்பெட்டியிலே.

என்றோ
ஓர் இலவம்பஞ்சு
பிய்ந்து பறக்காப்
பிஞ்சாய்க் கிடந்த காலத்தே
கைக்கெட்டிய ஒற்றைக்கடிதத்தின்
மீதமாய் விட்டுக் கிடந்த
ஒரு துறவித் தனிச்சொல்லும்
இன்னொரு துளி நீர் வெம்மை
வழுகிச் சொட்டி உருண்டோட,
சொக்கிப்போய் உருகலினால்,
நாளை,
வெறும் கரு மைக்குப்பி குதப்பித் துப்பிய
நெகிழ் காகிதக்கற்றையாய் மட்டும்
மிஞ்சிக் கிடக்கலாம்
என் கைகளிலே.

ஆயினும்,
இத்தனை நாள்,
இடையறாது மீள மீளக் கற்ற மோகவித்தையினால்,
அத்தனை சொற்களுமே,
என் சித்தக்கலங்களிலே
ஒட்டிப்போய், ஒன்றிப்போய்,
அத்துப்படியாகி,
வற்றிய மைக் குழம்புக் குட்டையூடேயும்
கண் பற்றித் தெரிந்திருக்கும்,
இறுதியாய்க் கண்ட இள(கு) முகமும்
இறுகிப்போன நினைவுகளும் இழைந்தோட.

நேற்றையப் பொழுதினைப்போல்,
நாளை மாலைக்கும்
நானொரு புது அஞ்சல்
பெற்றிருக்கும் புது வெறியில்,
தேடிக் கிடப்பேன்,
உன் நாளைய சேதி,
நாட்பட்டுப் போனதொரு
ஈரக்கடிதத்தின்
இடைத் துடிக்கும்
இரு இதயம் அடியே.

சூரியன் நாளைக்கும் நலமே
பூமிக்குப் புன்னகித்துப் பிரசவிக்கும்
இன்னொரு கா(¨)லத்துளி,
இன்று சொட்டி விழுந்ததுபோல்.

இங்கு மட்டும்,
உயிர்ச் சுடர் செத்த நானும்
என் பொலிவு தொலை அஞ்சற்பெட்டியும்
சிலைப்பட்டு,
வாழ்நிலை பிறழ, நிஜம் நடுக்கி,
தவித்து வெறித்துத்
தனித்திருப்போம்.
ஒரு நாள்,
உன் மனதுள் இனி மை தோய்த்து
வார்த்தை,
கரம் தத்தெத்து தானிட்டு அனுப்பிவைக்கா
ஓர் ஒற்றைத்தாள் ஓலையுடன் ஒன்று கூடி
உன் உலகமும் உருண்டிங்கு வந்து சேரும்
எம் உலகம் ஒளி நிரப்பி வைக்கவென்று,
எண்ணும்
உணர்ந்த பெரும் பொய்யில் உறையுண்டு
இனிதாய்ச் சிறைப்பட்டு,
இந்நாள் நகரும்,
இனி வரும் நாட்களைப் போலவே,
இனி வரா நாட்கள் நினைவு பற்ற.

98/09/22

0பின்னூடுகை:

Post a Comment

<< Home