அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நினைவொழுங்கையில்

நினைவு ஒழுங்கைகளுள்
ஓடிக் கொண்டிருப்பேன்..
பின்புறமாக கால் பாவும்.
பிடரிமட்டும் காலத்தே
முன்னவைக்கு
முகம் கொடுக்கும்.

குறுக்காக வந்துபோகும்
பல மன ஓடைகள்
பள்ளம் திட்டு கல் முள்
எல்லாம் கலந்திருக்க.
ஒவ்வொரு சந்திலும்
கணம் தாமதிக்கும்
என் கால்கள்...
எதில் திரும்புதல் என
என் பிடரியைக் கேட்டு..
தன்னிச்சைப்படி ஓடுதலுக்கும்
ஒரு கண என்னிச்சைச் சிந்தனை
தேவைப்பட்டிருக்கும்
பிடித்தவற்றில் மட்டும்
முற்காலவுலாச் சென்றிருக்க.

ஓடைகளின் வேலியோரங்களில்
பல முகங்கள்,
தெளிவாயும் திரை படிந்துற்றதாயும்.
காலத்தே செத்துப் போன
சில முகங்களின் மனங்கள்கூட
கணநேரம் மீள
என் மூளையிற் பொறிமூட்டி
வாழ்ந்து போகும்.

போகும் திசையறியா
என் முகம்
பாதை கடக்கையிலே
சிறு சிரிப்புதிர்க்கும்,
பிரித்து உதடுகளில்,
மூடிய விழிகளில்,
உள்ளாக
உள்ளத்தில்.

ஓர் ஓடை கடந்து
ஓடி, முடிவுச்சந்திற்
திரும்பும் சலனத்தில்
கீற்றாய்ச் சிந்திக்க,
மீளக் கடந்தமுகங்கள்
இனியும் கூட வாரா என்று
கசியும் மனது;
பின் கடினப்படும்.

புதிய ஒழுங்கைப்பாட்டையிலே
மேலும் சில இற்ற முகங்கள்,
இன்றைக்கு அடையாளமற்ற
என்றோ தோலுரித்த இளமுகங்கள்,
"நலமா?" என வெகுளியாய்
வாஞ்சையிற் புன்னகிக்கும்.


ஆயினும் பின்னோடும்
நினைவுப்பயணம்
எவர் முகப்புன்னகைக்கும் நிற்காது;
எல்லையிடு இலக்கும் இல்லாதது;
கட்டுடைத்த காதலென
தான் பாயும் எல்லாம் மேவிமூடி.

காலவெளியில் தூரம் கடந்த
யாத்திரையின் இடையினிலே,
இருள் சொல்லாமல் முள் வேலியாய்
முன் கிளை பரப்பி கைவிரித்து எழும்;
கணங்களிற் கலந்து கடந்த
கற்பகோடிக்காலங்கள், மனங்கள்,
முன்னைப்பிறவிகள், ஓடைச்சந்துகள்
எல்லாமே முகம் தொலைத்து தாம் மடியும்.

மேலும் ஏதோ வேதனைக்கு,
மீள எழும்
முள்வேலிக்கப்பால்
மூர்க்கத்துடன்
இன்றை நாட்பொழுது.

-'98 ஆனி 23 செவ்வாய் 06:10 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home