அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஒரு நேசிப்பு மறுக்கப்பட்ட புத்திரனுக்கு

பெருந்
தேசமே நேசித்த முது பிதாவின்
நேசிப்புக்கேங்கிய முதற் புத்திரனே,
ஹரிலால்,
அமைதியாய் உறங்கியிருப்பாய்.

உனது தார்மீக கோபங்கள், குரோதங்கள் புரியக்கூடியவையே;
-கோடி மக்களுக்கு அள்ளி இறைத்த அன்பு, தன் வீட்டின் ஒரு
கோடிக்கு ஒரு சொட்டு விட மட்டும் ஊற்று அடைபட்டுப்
போனதேன்-
என்ற
உனது தார்மீக கோபங்கள், குரோதங்கள் புரியக்கூடியவையே.

கறுப்பு ஆடாகிப்போனாயோ என்று ஆதங்கத்தே
ஆண்டு ஐம்பது பின்னும் நின் ஆத்மா அல்லலில் அலைந்திருப்பின்,
கவலை விட்டு அமைதியாய் உறங்கியிரு;
என்னைப் போல் தேசமெல்லாம் உணரக்கூடிய உயிரெல்லாம் அறியும்,
கொடிப்பாவல் போடச் பேய்ச்சுரை முளைக்காது;
வெளிச் செய்கை வெறுத்தலானாலும்,
-நான் என் ஆழத்தே எங்கே திட்டமாய் உணர்கிறேன்-
உன் ஆத்மாவின் கோபம்,
தேசத்தந்தையின் ஒத்துழையாமையின் உள்வீட்டின் ஒரு வடிவமே;
காட்டும் வண்ணத்தே மட்டும் உன்னை வேறாய்க் காட்ட வேண்டி
விரைந்து வேண்டாததில் விழுந்துவிட்டாய்; வெகு சீக்கிரம்
அழிந்துவிட்டாய்.
சத்தியசோதனை பெற்றாருக்கு மட்டுமில்லை, பிள்ளைகட்கும் உண்டென்பதறிவேன்.

பிதா, பேராத்மா என ஏற்றப்படும் காலத்தே, அவர்
அன்பு அற்று அலைந்து அடையாளம் அழிந்துபோன
போக்கற்ற புத்திரர்களை போற்ற,
பேசாமல் பின்தொடர்ந்த முக்காட்டுப் பெண்டிரைப் பாராட்ட,
இவை எதுவும் வேண்டாம்,
விரலுக்கு நல் வாக்கு மையிட்டுப் பெட்டியிடுகையிற்கூட
நினைக்க நேரம் இல்லை நின் தேச மக்களுக்கு.
தேர்தல் அருகில். காலம்வேறு காந்தீயத்திற்கு கற்பழிப்புச்
செய்திருக்கிறது.
போகட்டும் விடு அந்த போக்கற்ற பெரு மக்களை,
நீ போய்த் தூங்கு நிம்மதிக்கு என்றென்றைக்கும்.
முகம் அடையாளம் அற்றுச் செத்த தேசத்தியாகிகளின் முன்வரிசைக்கு
உன்னையும் உன் அன்னையுடன் இன்றைக்கு நான் இருத்திக்
காண்பேன்.
சுதந்திரத்தின் அருமை,
சுதந்திர நாட்டு அடிமைகளுக்குத் தெரியாதுபோயினும்,
அடிமை நாட்டுச் சுதந்திரம் வேண்டுவோருக்குப் புரியாதோ?
அவர்கட்கும் பெண்டிருண்டு, பிள்ளையுண்டு.
அப்பெண்டிருக்கும் பிள்ளைகட்கும் அன்பு வேண்டு மனம் உண்டு
என்று அறிந்திருக்கும்
அடிமை நாட்டுச் சுதந்திரம் வேண்டுவோருக்குப் புரியும்,
உன் அன்னையுடன் நீயும் அடையாளம் தெரியாதழிந்துபோன
பெரும்தியாகியென.
போ, நெஞ்சு நிமிர்ந்தி நேர் நிமிர்நடை கொண்டு
நீ போய்த் தூங்கு
நிம்மதிக்கு என்றென்றைக்கும்.

-'98 பெப்ருவரி

0பின்னூடுகை:

Post a Comment

<< Home