அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மீளப் பிறந்தேன் மனிதனென...

இயற்கைத்
துயர் கொண்ட நிகழ்வுகளை
நான் நேசிக்கின்றேன்;
அவை என் கண்முன்னே நகரட்டும்;
காதுவழி விழு சங்கதியாய் அமையட்டும்..
.... நான் அறியாப்
பிறருக்கு
நேரும்
துயர் கொண்ட நிகழ்வுகளை
நான் நேசிக்கின்றேன்;


அறியாதோர் துயர்கள் என்னை
அழ வைக்கிறது;
ஆட்கள் முகம் அறியாமல்
வேதனையில்
விம்ம முடிகிறது;
உயிர்கள் படும் அவலம் மட்டுமே
என் உள்ளே விழுகிறது;

அங்கே
மதங்கள் தேயக் காண்கிறேன்!
நிறங்கள் தொலையக் காண்கிறேன்!
மொழிகள் மழுங்கக் காண்கிறேன்!
இனங்கள் இல்லாமற் காண்கிறேன்!

புயல்களில் அழியும் உயிர்களுக்காய்
மனிதப் பிரதிநிதியாய் அழ முடிகிறது.
பூகம்பத்தினால் ஒழியும் உடமைக்காரருக்காய்
உரிமையுடன் உருகி எரிய உள்ளம் விழைகிறது.
இயற்கைத்
துயர்கொண்டோர் அவலம் முன்னே,
எனக்கு முகமில்லை!
நிறமில்லை!
இனமில்லை!
மொழியில்லை!
மதமில்லை!
எவ் வகைப்படுத்தும்
இல்லவே இல்லை! இல்லை!!

எல்லோர் காதும் இடித்துரைத்தும்
மேலாய் எழுந்து எவ்வுலகும்
இந்த
ஒப்பற்ற
ஒரு சில
என் உருவமற்ற கணங்களிலே,
கைவிரிந்து
பொறிபட்டு
விண்ணதிரக் கூவவிடுங்கள்,
"நான்
இச்சகத்தின்
எல்லோருக்குமான
ஓர் எளிய பிரதிநிதி"
என்று என்னை.

இத்தகைய
இயற்கைத்
துயர் நிகழும் நேரங்களில்,
மானுடம் என்னுள்ளே
தான் வெல்லும்;
போலிவேலிகள் பொடியுண்டு
தாம் இறக்கும்;
'நான்' இறுக்கிய சங்கிலிகள்
நடுங்கிப் பிளந்து நகரும்;
கால வெளியிலே
என் உயிர்க்கால்கள்
மேவிப் பரவிக்
கசியும்,
முன்னைப்
பனிஆண்டைக் குளிரில்
விறைப்புண்ட
முகமறியா என்
ஒரு மூதாதை
இறுதிச் சோகத்துக்காய்.

என்னுளே
கருணைத்துயர்
உருகிக்கொட்டும்
இவ்வேளைகளில்
உரத்துக் கத்துவேன்:
" நான் ஒரு எளிமையான மனிதன்;
எனக்கென்றொரு உருவமில்லை;
தனியே ஒரு உள்ளமில்லை.
எதையும்
சார்ந்திரா எண்ணத்திலே,
எதையும்
சார்ந்திருக்கும் வண்ணத்திலே,
இவ் வுலகின் எல்லா மனிதரைப்போலும்
நான் இன்று இறைவனாகின்றேன்."


இயற்கைத்
துயர்கொண்டோர் அவலம் முன்னே,
எனக்கு முகமில்லை!
நிறமில்லை!
இனமில்லை!
மொழியில்லை!
மதமில்லை!
எவ் வகைப்படுத்தும்
இல்லவே இல்லை! இல்லை!!


மானிடம் வெல்க;
அதன்முன்னே,
மண் வடிவாய்,
உருக்குலைந்துடைக
இந்நாள்
மனித மத நிறங்களெல்லாம்;
தேங்கிய சிந்தனைகள்
தேய்ந்தழிந்து இறந்து போக;
திரள்க நம் மனதுகளில்
யாவரும் மனிதரென்று
ஓங்கியதோர்
உரத்த சிந்தனை.

இனியென்றும்,
இயற்கைத்
துயர்கொண்டோர்
இழிநிலை அவலம் முன்னே,
எனக்கு முகமில்லை!
நிறமில்லை!
இனமில்லை!
மொழியில்லை!
மதமில்லை!
எவ் வகைப்படுத்தும்
இல்லவே இல்லை! இல்லை!!

இன்று பிறந்தேன்
இன்னொருமுறை
என்றைக்குமாய்
நான்
மனிதனென்று.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home