அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

உனக்கொரு கடிதம்

அந்தக்காகிதத்தை நான் நேசிக்கிறேன்;
நான் அறிந்தேயிருக்கிறேன்,
இந்தக்குளிரூறும் மாரியிலுமங்கு
என்வீட்டுத் தென்கிழக்குப்புளி
காய்த்துக்குலுங்குவதால் மட்டுமிங்கு
என் வாழ்க்கை ஒன்றும் மாறிவிடப்போவதில்லையென்று.
அக்காவின் குழந்தைக்கு ஆறாவது பல்
முளைத்தது காரணங்காட்டி
ஒன்றும் என் அகதி அந்தஸ்து,
இங்கு உயர்ந்துவிடப்போவதில்லை
என்று தெரிந்தவனாகவும் தான்.
என்றாலும்,
அகதிச் சோமாலிக் குழந்தைகளின் குச்சுக்கைகால்கள்
சடைத்ததென,
உண்மைமனிதர்களின் எண்ணிக்கைத் துளிர் தாங்கி,
இஇலையாடை அவிழ்த்தெறிந்து நாணம் தொலைத்த
மரச்சாலையூடே,
சந்திக்கடை ' பணிஸ்'ன்
வட்டம்+ நிறம்+ பொங்குவளம்
நினைவுக்குக் கொணரும் இமங்கோலிய முகங்களிடையே,
என் தனிமை சுவாசப்படுத்த,
நான் நேசிக்கும் என்னை நேசிப்பவற்றின்
நினைவுகள்/ நிழல்கள் தாங்கி வரும்
நீல, சிவப்பு ஓரவரையிட்ட வெள்ளுறைவசிக்கும்
அந்தக் கடல்கடந்த ஆஞ்சநேயப் பழுப்புக்காகிதத்தை
நான் நேசிக்கிறேன்,
நேசித்தே ஆகவேண்டும்,
என் காதலி,
அ·து ஒட்டிய உன் சிவப்பு உதடுகளை
நான் உள்ளன்பாய்
நேசிப்பது போலவே.

-93

0பின்னூடுகை:

Post a Comment

<< Home