அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

என் வார இறுதிகள்...

தனித்துப்போன
வெள்ளி மாலைகள்
என் கழுத்து
தவிப்பதற்கான
மரணக்கயிறுகள்.

மரங்களின் பின்னே
மாலைச்சூரியனை
மலையுடன் மகிழ்ந்து
முயங்க அனுப்பியபின்,
நேற்றையச்
சூனியத்தில் நிலைக்கும்
என் இன்றைய
ஒருமை நினைவு.

நிழல்வெளியில்
தனியாக
கணினி அறைக்குள்
இன்னொரு இயந்திரமாய்
அரைபட்டுக் கிடப்பேன்
நான்.

விழிகளில் இருந்து
விரகமும் வேதனையும்
சுடு
சில
சிறு
துளி நீராய்
ஒருமித்து உருகி
வழியும்.

மூளைக்கலங்களுள்
மத யானைகள்
மூர்க்க நர்த்தனமாடும்.

இரட்டைக்
காற்றுப்பைகள்
நெஞ்சோரம்
கனத்துத் தொங்க,
இதயம்
அழுந்தி
இறுகிச்
சோரும்.

சாரளத்தின் வெளி-
காற்றுத் திசையில்
கறுத்துப் பறக்கும்
ஓர்
இளைத்த
விடலைத்
தனியன் பறவை.

துடிக்காச்
சிறகுகளின் சோர்வு,
அதன்
இதயத்துச் சுமையை
எடுத்துக் கூவும்.


அமுக்கும்
ஆற்றாமை ஆற்றாமல்
வாய் பொத்தி
அமர்கையிலே
வெந்துயர்,
கைவிரல்தட்டு
கணினித் தமிழ் எழுத்து நாற்றாய்
முளைக்கும்.

வேர் விட்டு அது தழைத்து
விழுதுகள் தூங்கி வைக்கையிலே
விழி கனத்து
துக்கங்கள் தூங்கப்போய்
தூக்கத்தின்
இரவு யாத்திரைகள்
முகமேற்திசையில்
பனிப்பஞ்சுப் பாதங்கள்
கொஞ்ச

தி
த்
து
ந ட க் கு ம்..........

98 November 20 Friday 20:14 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home