எனது விமானப்பயணங்கள்
என் விமானப்பயணங்கள்
பறக்கமுன்,
பின் ஏறி இருக்கையில்,
பெரும் பயத்துக்கும்
இயக்கம் நிறுத்தி
இறக்கை,
நிலம் இறக்கியபின்
பிறர் பகடிக்குமுரியன.
பயணச்சீட்டுக் கொடுத்து,
மூடாமற் பல்லிளிக்கும்
நங்கை அது கிழித்துக் கை கொடுக்க,
காற்சட்டைப்பை உள் வைத்து,
கதவு திறக்கக் காத்திருக்கையிலே,
கண்ணிற் படும்,
அன்றைய பத்திரிகை முன் பந்தி:-
'பரந்த பசிபிக்கில்
பாதி இடது இறக்கை,
மழை நனைந்த பிஸ்கட்டாய்ப் பிசுபித்து
பாய்ந்து மறைந்து போனது,
பறந்து கொண்டிருந்த
போயிங் பயணிகள் விமானம்.'
படபடக்கும் நெஞ்சு,
பல வருடம் முன்னாலே,
பிறந்த ஊர் வீதிவழி
விழிபூத்துப் பார்த்திருந்த
வேல்விழியாள்,
-இந்நாள் தன் நா,
கூராய்க் குத்தி வைக்கும்
என் மனையாள்- வரக்கண்டு
அடித்ததுபோல்;
துடிதுடிக்கும் தொடை யிரண்டு,
குளிர் பிடித்த குருவியுடலெனவே.
இந்நேரம் கதவு திறந்து,
இருத்தலுக்கு அழைப்பு வரும்;
முன்படித்த பெரும்பாரதம்,
மூளை முகம் முன்னெழும்:-
'எடுக்கவோ
(ஓட்டம்?, ஏறமாட்டேன்
விமானம் என்று சொல்லி;
இல்லை, இன்று மனம் துணிந்து,)
கோர்க்கவோ (என்னையும்,
வளைந்து கைப்பை
தூக்கி நிற்கும்
காரிகை பின்னாலே
வரிசையிலே).'
மனக்குகையிருட்டு
எங்கிருந்தோ
கண்டசாலா குரல்,
மங்கலாய்க் காதிலே விழும்,
'துணிந்தபின் மனமே...'
என்றிழுத்து என்னுள்.
உள்ளே நுழைகையிலே,
பெண்ணொருத்தி மீண்டும்
சொல்லிவைத்து
பற்பசைப் பளீர்
வெண்மைப்பல்
இளிப்பாள்.
கைப்பை சிலநேரம்,
மனமடங்காக் காமம்போல்,
இருக்கை மேற் பெட்டிக்குள்
அடங்கேன் என்று
அடம் பிடித்துக் குதிக்கும்.
பின் இறுகிய அது இழுத்து,
கைவலி பெற்று
(அருகிருப்போருக்கு,
ஆறேழு தடங்கலுக்கு வருந்தி,)
என் காற்குதி கீழழுத்தி,
சாளரக்கண்ணாடி ஊடாக
வெளிப்பார்த்து மூச்சு விட,
முன்னால்,
நிற்கும் ஒரு முழு மாமிச மலை;
"முப்பது என் இலக்கம்;
உன் இருக்கை பின்னே"
என்று சொல்லும்;
இன்னொரு தடங்கலுக்கு முனகலாய் வருந்தி,
எழுந்து,
பின்னிருந்து பிசாசுப்பை அமுக்க,
இருக்கைப்பட்டியினைக்
கட்டென்று
பாவனை பண்ணுவாள்,
பரதம் பயில்வாள்,
பணிப்பெண்ணொருத்தி.
தில்லானா இதுதானா,
தெருக்கூத்து இனித்தானா
என்றறியா ஊமைப்பாவத்தே,
பரத பாலசரஸ்வதியும்
பரிகாசச் சப்ளினும்
சரிசமமாய்ச் செறிந்திருப்பார்
சிருங்காரி செயல்தன்னில்.
பட்டிக்கொக்கி தேடி, இடுப்புச் சுற்றி,
இரு கைபற்றிக் கொழுவிக் கட்டையிலே,
ஊர் கொம்புமாட்டுக் கொட்டில் நினைவு வரும்;
கூடவே,
கார்லா தக்கர் குந்திய
உயிர் கொல்லு மின்சாரக்கதிரையும்
மிகுவாய் எண்ணத்தே.
விமானம் எழும்;
கண்மூட,
நம்பாத கடவுள் எல்லாம்
நம்மைக் காக்க வந்திருப்பார்.
அடி வயிற்றில் நெளி
ஒரு சிறுபாம்பு
அண்ணாக்கு வரை
அந்தரத்தே
எம்பி எம்பிக் குதித்திருக்கும்,
"இந்தா பார் என்னை; வெளி வருகிறேன்"
என்று சொல்லி.
பின் "பட்டி அவிழ்" சொல்ல,
கண் திறக்க,
பக்கத்தில் இம்முறையும்
பல்லுக்கும் செவ்வண்ணம் தீட்டிய
பாட்டிவகைக் கிழம்.
"தம்பிக்கு எந்த ஊரு?"
எல்லோருக்கும் வணக்கம்!
இன்றைய என் தலைவலி
இனிதே இப்போது ஆரம்பம்.
.....
........
..........
...இப்படியாய், (சிறு?)
பேட்டி முடிந்து,
பத்துவருடம் முன் செத்த
என் பாட்டியின் பூட்டனுக்கும்,
எத்தனை பரப்புக் காணிநிலம்
எம் ஊரில் பரவி இருந்தது என்பதெல்லாம்
வாயாற் கொட்டி முடித்து,
உயிர்தப்ப,
ஓடி ஒளிவேன்,
விமான மத்தி
ஒரு சிறு பெட்டிக் கழிப்பறை.
[விட்டு விடுக இங்கு வேண்டாம் அக்க(வ்வ)தை]
மீள வந்து,
மேலொரு கேள்வி எழும்பமுன்னே,
அடியேன்
அடியறியா, முடியறியா,
பங்குச்சந்தைச் சஞ்சிகை ஒன்று,
படிப்பதாய்ப் பாவனை
பண்ணித் தொலைப்பேன்.
தலை பக்கங்களுட் பற்றிக்கிடக்கும்,
பக்கத்துப்பாட்டி பற்றிக் கிழிக்காமல்.
முதுமாது,
கை உதிக்கும்,
ஒரு சிறுவட்டக்கண்ணாடி.
மேலும்,
மேலும் கீழுமாய்,
சுருங்கிய உதடுகளுக்கு,
ஓரத்தில் உறைகுருதிச்சிவப்பில்
சாயம் இடுவாள்,
முகம் பெரும் விபத்துக்
காயம் பெற்றெதென பயமுறுத்தும்;
மலைமோதிய விமானங்கள்,
குதறுண்ட மனிதர்கள் உடல், ஊன்
என் உள்ளம் ஓடும்.
உதறத் தவிப்பேன் ஊறும் அவ எண்ணங்கள்.
சாப்பாடுப்பட்டியல் வரும்;
புகழ்பெற்ற சமையற்காரர் தேர்வென்று
ஒரு மூன்று,
வாய்நுழையாப் பெயர்ச் சங்கதிகள்
காய், கறி வண்ணப்படத்துடன்
தாளில் ஒட்டி இருக்க,
அது, சுற்றிக்கிடக்கும் காப்பு அட்டை.
சரிதான்,
"உண்டி சுருங்கல் பெண்டிற்கழகு;
உனக்கென்ன சிக்கல்? ஒரு பிடி
பிடித்துப் பின்,
கண் ஒருங்கி,
செயல் ஒடுங்கி,
ஒரு ஒழுங்கான தூக்கம்"
என்று மனம் துள்ளும்.
இருக்கைமுன் தட்டில்,
சரியாகச் சாப்பாட்டுப்பெட்டி
இருத்தி வைத்திருக்க,
எனக்கெடுத்த நேரம்,
எண்ணி எட்டு நிமிடம்,
ஏற்கனவே,
முட்டையிட்ட கடலாமைக் காலெடுத்துத்
சோம்பலிலே தூங்கி ஓடும்
என் கறுப்புப்பட்டிக் கைக்கடிகாரத்தேகூட.
வெண் சாப்பாட்டுப்பெட்டி வாய்திறக்க,
என் திறந்த காள வாய்மூடும்.
இலவுகாத்தகிளிகூட,
ஏதும் இல்லாமற்
மழை நீர் தோய்த்துப்
பஞ்சு தின்றிருந்தாற்கூட
இப்படி (வயிற்றில்) அடி மட்டமாய்
முழு மோசம் போயிருக்காது.
உருளையா, கரணையா?
- உரு பேதம் அறியாமல் ஒரு கிழங்கு;
அதன்கீழே, பெட்டிக் கிடங்கிலே,
அரிசியா, சோறா
பிரித்தறியாப் பக்குவம்கொள்
அர்த்தநாரீஸ்வர அவியல்.
சோகத்தில், மனம் வெம்பி,
மேலும் அரைமறதி முட்டாள், நான்,
ஒரு பொடி உப்புக்குப் பதிலாய்,
உறையிட்ட காகிதப்பை உள்ளிரு சீனி
சோற்றில், கிழங்கிற் கொட்டிக் கெடுப்பேன்.
உள்ள சுவையும் சுவறிப் போனது, சொத்தைவாயா,
உ(ன்)ண் உணவில்.
பிறகென்ன,
முன் சொன்னதுபோல்,
ஒரு பிடி பிடிப்புத்தான்;
அந்த முதற்பிடியோடு மோசம் போனது,
என் முதலும் வயிற்றுக்கு;
பின் கொஞ்சம் புளி தோடை இரசம் குடித்துவைக்க,
இன்னமும் எரியும் இரைப்பையும் இதயமும்.
என்ன செய்ய?
"எல்லாமே எப்போதோ முடிந்த காரியம்;
இனி இதில் நான் செய்தலுக்கேதும் இல்லை"
புத்தனுக்குப் போதிமரம், இந்தப்
பித்தனுக்கு போயிங் 747.
பின், போடுவார்கள்
ஒரு புத்தம்புதியபடம்.
எனக்கோ, அதன்முன்னாள்தான்
பொழுதுபோகாமல்,
போன ஊர்த் திரையரங்கிற் பார்க்கையிலும்
துயர் கொடுத்த கொடுஞ்சவரம்.
போதாக்குறைக்கு,
முன்னிருந்து ஒரு பெண் மேழெழு
குந்தவை நாச்சியார் முடியழகு மறைக்கும்,
கதாநாயகி மார்பகம், நீச்சலுடை.
காதிலே, போட்டுக் பாட்டுக் கேட்க எண்ண,
'கடார் புடார்' என்று கன கச்சிதம்,
என் ஒலி இறக்கி.
இது ஏதும் புதுப்பாட்டா, இல்லை ஒலிப்பதிவுக்கோளாறா?
- புரியமுன்னர் டெஸிபல் ஒலிப்பறை நசுக்கித் தின்னும்.
"ஆண்டவரே ஆண்டவரே ஏன் என்னைக் கைவிட்டீர்?"
-பேசாமல், இன்றடங்கி,
பின் இறங்கும் ஒரு நல் நேரம்
உயிர்த்தெழச் சித்தம் பிறக்கும்.
இன்னொரு முறை, கழிப்பறை வாயிற் காத்திருப்பு;
உள் விஜயம்; நாலைந்து தடங்கல் + வருந்தல்.
திரும்பி வந்து தூங்க முயல,
காற்று அழுத்தி,
விமானம் ஆடும் ஒரு ஊழி நர்த்தனம்.
பட்டி அணியப் படாத பாடுகள் தொடரும்; மீள,
எல்லா ஆண்டவரும் என் வசம் வருவார்;
என்றும்போல் அருகே இல்லா என்னூர் முருகனுக்கு
இன்னொரு நாணயம் மானசீக காணிக்கை என்று விழும்.
(அவர் அறிவார்,
என் நா நயம், நாணயம் என்பதெல்லாம் வேறு கதை;
அது எதற்கு, ஆடும் விமானத்தில்
ஆடை அவிழ்த்திருக்க உங்களுக்கு?)
ஐம்புலனடக்கி,
நவவாசலொடுக்கி,
நான் தூங்கி எழுந்திருக்க,
விமானம் இறங்குமென்பாள்
பணிப்பெண்ணொருத்தி.
"அடடா, இவள் இவ்வளவு அழகா?
ஏன் பேசும் சந்தர்ப்பம் நானிழந்தேன் இன்று?"
என்று எண்ணும் என் மனது;
இப்போதும் இதயம் அடிக்கும்;
தொடையிரண்டு துடிக்கும்.
செயல் ஒன்று, ஆயினும் சிந்தை வேறு காணீர்.
கீழிறங்கி,
வெளி வாசல் விரைந்து வர,
"இற்றைநாள் இனிது காண்க;
இன்னொருநாளும் எம்மோடு வான் எழுக"
என்பாள் அவ்வழகுப் பெண்பால்,
வாயில் நின்று
வார்த்தை ஜதியாய்
ஜனனிக்க இச்சகத்தே.
என் வாயிலும் புன்னகை பிறக்கும்,
என் விமானப் பயணம் முடிந்த கணம் சுற்றியா,
இல்லை,
முன் நின்ற பெண் முக நேர்த்தி கண் பற்றியா?
....
......
.......
சொன்னால் வெட்கக்கேடு என்றாலும்,
இரண்டுமே இடையறாச் சுகம்தான் எப்போதும் எண்ணுகையில்.
98/09/19
பறக்கமுன்,
பின் ஏறி இருக்கையில்,
பெரும் பயத்துக்கும்
இயக்கம் நிறுத்தி
இறக்கை,
நிலம் இறக்கியபின்
பிறர் பகடிக்குமுரியன.
பயணச்சீட்டுக் கொடுத்து,
மூடாமற் பல்லிளிக்கும்
நங்கை அது கிழித்துக் கை கொடுக்க,
காற்சட்டைப்பை உள் வைத்து,
கதவு திறக்கக் காத்திருக்கையிலே,
கண்ணிற் படும்,
அன்றைய பத்திரிகை முன் பந்தி:-
'பரந்த பசிபிக்கில்
பாதி இடது இறக்கை,
மழை நனைந்த பிஸ்கட்டாய்ப் பிசுபித்து
பாய்ந்து மறைந்து போனது,
பறந்து கொண்டிருந்த
போயிங் பயணிகள் விமானம்.'
படபடக்கும் நெஞ்சு,
பல வருடம் முன்னாலே,
பிறந்த ஊர் வீதிவழி
விழிபூத்துப் பார்த்திருந்த
வேல்விழியாள்,
-இந்நாள் தன் நா,
கூராய்க் குத்தி வைக்கும்
என் மனையாள்- வரக்கண்டு
அடித்ததுபோல்;
துடிதுடிக்கும் தொடை யிரண்டு,
குளிர் பிடித்த குருவியுடலெனவே.
இந்நேரம் கதவு திறந்து,
இருத்தலுக்கு அழைப்பு வரும்;
முன்படித்த பெரும்பாரதம்,
மூளை முகம் முன்னெழும்:-
'எடுக்கவோ
(ஓட்டம்?, ஏறமாட்டேன்
விமானம் என்று சொல்லி;
இல்லை, இன்று மனம் துணிந்து,)
கோர்க்கவோ (என்னையும்,
வளைந்து கைப்பை
தூக்கி நிற்கும்
காரிகை பின்னாலே
வரிசையிலே).'
மனக்குகையிருட்டு
எங்கிருந்தோ
கண்டசாலா குரல்,
மங்கலாய்க் காதிலே விழும்,
'துணிந்தபின் மனமே...'
என்றிழுத்து என்னுள்.
உள்ளே நுழைகையிலே,
பெண்ணொருத்தி மீண்டும்
சொல்லிவைத்து
பற்பசைப் பளீர்
வெண்மைப்பல்
இளிப்பாள்.
கைப்பை சிலநேரம்,
மனமடங்காக் காமம்போல்,
இருக்கை மேற் பெட்டிக்குள்
அடங்கேன் என்று
அடம் பிடித்துக் குதிக்கும்.
பின் இறுகிய அது இழுத்து,
கைவலி பெற்று
(அருகிருப்போருக்கு,
ஆறேழு தடங்கலுக்கு வருந்தி,)
என் காற்குதி கீழழுத்தி,
சாளரக்கண்ணாடி ஊடாக
வெளிப்பார்த்து மூச்சு விட,
முன்னால்,
நிற்கும் ஒரு முழு மாமிச மலை;
"முப்பது என் இலக்கம்;
உன் இருக்கை பின்னே"
என்று சொல்லும்;
இன்னொரு தடங்கலுக்கு முனகலாய் வருந்தி,
எழுந்து,
பின்னிருந்து பிசாசுப்பை அமுக்க,
இருக்கைப்பட்டியினைக்
கட்டென்று
பாவனை பண்ணுவாள்,
பரதம் பயில்வாள்,
பணிப்பெண்ணொருத்தி.
தில்லானா இதுதானா,
தெருக்கூத்து இனித்தானா
என்றறியா ஊமைப்பாவத்தே,
பரத பாலசரஸ்வதியும்
பரிகாசச் சப்ளினும்
சரிசமமாய்ச் செறிந்திருப்பார்
சிருங்காரி செயல்தன்னில்.
பட்டிக்கொக்கி தேடி, இடுப்புச் சுற்றி,
இரு கைபற்றிக் கொழுவிக் கட்டையிலே,
ஊர் கொம்புமாட்டுக் கொட்டில் நினைவு வரும்;
கூடவே,
கார்லா தக்கர் குந்திய
உயிர் கொல்லு மின்சாரக்கதிரையும்
மிகுவாய் எண்ணத்தே.
விமானம் எழும்;
கண்மூட,
நம்பாத கடவுள் எல்லாம்
நம்மைக் காக்க வந்திருப்பார்.
அடி வயிற்றில் நெளி
ஒரு சிறுபாம்பு
அண்ணாக்கு வரை
அந்தரத்தே
எம்பி எம்பிக் குதித்திருக்கும்,
"இந்தா பார் என்னை; வெளி வருகிறேன்"
என்று சொல்லி.
பின் "பட்டி அவிழ்" சொல்ல,
கண் திறக்க,
பக்கத்தில் இம்முறையும்
பல்லுக்கும் செவ்வண்ணம் தீட்டிய
பாட்டிவகைக் கிழம்.
"தம்பிக்கு எந்த ஊரு?"
எல்லோருக்கும் வணக்கம்!
இன்றைய என் தலைவலி
இனிதே இப்போது ஆரம்பம்.
.....
........
..........
...இப்படியாய், (சிறு?)
பேட்டி முடிந்து,
பத்துவருடம் முன் செத்த
என் பாட்டியின் பூட்டனுக்கும்,
எத்தனை பரப்புக் காணிநிலம்
எம் ஊரில் பரவி இருந்தது என்பதெல்லாம்
வாயாற் கொட்டி முடித்து,
உயிர்தப்ப,
ஓடி ஒளிவேன்,
விமான மத்தி
ஒரு சிறு பெட்டிக் கழிப்பறை.
[விட்டு விடுக இங்கு வேண்டாம் அக்க(வ்வ)தை]
மீள வந்து,
மேலொரு கேள்வி எழும்பமுன்னே,
அடியேன்
அடியறியா, முடியறியா,
பங்குச்சந்தைச் சஞ்சிகை ஒன்று,
படிப்பதாய்ப் பாவனை
பண்ணித் தொலைப்பேன்.
தலை பக்கங்களுட் பற்றிக்கிடக்கும்,
பக்கத்துப்பாட்டி பற்றிக் கிழிக்காமல்.
முதுமாது,
கை உதிக்கும்,
ஒரு சிறுவட்டக்கண்ணாடி.
மேலும்,
மேலும் கீழுமாய்,
சுருங்கிய உதடுகளுக்கு,
ஓரத்தில் உறைகுருதிச்சிவப்பில்
சாயம் இடுவாள்,
முகம் பெரும் விபத்துக்
காயம் பெற்றெதென பயமுறுத்தும்;
மலைமோதிய விமானங்கள்,
குதறுண்ட மனிதர்கள் உடல், ஊன்
என் உள்ளம் ஓடும்.
உதறத் தவிப்பேன் ஊறும் அவ எண்ணங்கள்.
சாப்பாடுப்பட்டியல் வரும்;
புகழ்பெற்ற சமையற்காரர் தேர்வென்று
ஒரு மூன்று,
வாய்நுழையாப் பெயர்ச் சங்கதிகள்
காய், கறி வண்ணப்படத்துடன்
தாளில் ஒட்டி இருக்க,
அது, சுற்றிக்கிடக்கும் காப்பு அட்டை.
சரிதான்,
"உண்டி சுருங்கல் பெண்டிற்கழகு;
உனக்கென்ன சிக்கல்? ஒரு பிடி
பிடித்துப் பின்,
கண் ஒருங்கி,
செயல் ஒடுங்கி,
ஒரு ஒழுங்கான தூக்கம்"
என்று மனம் துள்ளும்.
இருக்கைமுன் தட்டில்,
சரியாகச் சாப்பாட்டுப்பெட்டி
இருத்தி வைத்திருக்க,
எனக்கெடுத்த நேரம்,
எண்ணி எட்டு நிமிடம்,
ஏற்கனவே,
முட்டையிட்ட கடலாமைக் காலெடுத்துத்
சோம்பலிலே தூங்கி ஓடும்
என் கறுப்புப்பட்டிக் கைக்கடிகாரத்தேகூட.
வெண் சாப்பாட்டுப்பெட்டி வாய்திறக்க,
என் திறந்த காள வாய்மூடும்.
இலவுகாத்தகிளிகூட,
ஏதும் இல்லாமற்
மழை நீர் தோய்த்துப்
பஞ்சு தின்றிருந்தாற்கூட
இப்படி (வயிற்றில்) அடி மட்டமாய்
முழு மோசம் போயிருக்காது.
உருளையா, கரணையா?
- உரு பேதம் அறியாமல் ஒரு கிழங்கு;
அதன்கீழே, பெட்டிக் கிடங்கிலே,
அரிசியா, சோறா
பிரித்தறியாப் பக்குவம்கொள்
அர்த்தநாரீஸ்வர அவியல்.
சோகத்தில், மனம் வெம்பி,
மேலும் அரைமறதி முட்டாள், நான்,
ஒரு பொடி உப்புக்குப் பதிலாய்,
உறையிட்ட காகிதப்பை உள்ளிரு சீனி
சோற்றில், கிழங்கிற் கொட்டிக் கெடுப்பேன்.
உள்ள சுவையும் சுவறிப் போனது, சொத்தைவாயா,
உ(ன்)ண் உணவில்.
பிறகென்ன,
முன் சொன்னதுபோல்,
ஒரு பிடி பிடிப்புத்தான்;
அந்த முதற்பிடியோடு மோசம் போனது,
என் முதலும் வயிற்றுக்கு;
பின் கொஞ்சம் புளி தோடை இரசம் குடித்துவைக்க,
இன்னமும் எரியும் இரைப்பையும் இதயமும்.
என்ன செய்ய?
"எல்லாமே எப்போதோ முடிந்த காரியம்;
இனி இதில் நான் செய்தலுக்கேதும் இல்லை"
புத்தனுக்குப் போதிமரம், இந்தப்
பித்தனுக்கு போயிங் 747.
பின், போடுவார்கள்
ஒரு புத்தம்புதியபடம்.
எனக்கோ, அதன்முன்னாள்தான்
பொழுதுபோகாமல்,
போன ஊர்த் திரையரங்கிற் பார்க்கையிலும்
துயர் கொடுத்த கொடுஞ்சவரம்.
போதாக்குறைக்கு,
முன்னிருந்து ஒரு பெண் மேழெழு
குந்தவை நாச்சியார் முடியழகு மறைக்கும்,
கதாநாயகி மார்பகம், நீச்சலுடை.
காதிலே, போட்டுக் பாட்டுக் கேட்க எண்ண,
'கடார் புடார்' என்று கன கச்சிதம்,
என் ஒலி இறக்கி.
இது ஏதும் புதுப்பாட்டா, இல்லை ஒலிப்பதிவுக்கோளாறா?
- புரியமுன்னர் டெஸிபல் ஒலிப்பறை நசுக்கித் தின்னும்.
"ஆண்டவரே ஆண்டவரே ஏன் என்னைக் கைவிட்டீர்?"
-பேசாமல், இன்றடங்கி,
பின் இறங்கும் ஒரு நல் நேரம்
உயிர்த்தெழச் சித்தம் பிறக்கும்.
இன்னொரு முறை, கழிப்பறை வாயிற் காத்திருப்பு;
உள் விஜயம்; நாலைந்து தடங்கல் + வருந்தல்.
திரும்பி வந்து தூங்க முயல,
காற்று அழுத்தி,
விமானம் ஆடும் ஒரு ஊழி நர்த்தனம்.
பட்டி அணியப் படாத பாடுகள் தொடரும்; மீள,
எல்லா ஆண்டவரும் என் வசம் வருவார்;
என்றும்போல் அருகே இல்லா என்னூர் முருகனுக்கு
இன்னொரு நாணயம் மானசீக காணிக்கை என்று விழும்.
(அவர் அறிவார்,
என் நா நயம், நாணயம் என்பதெல்லாம் வேறு கதை;
அது எதற்கு, ஆடும் விமானத்தில்
ஆடை அவிழ்த்திருக்க உங்களுக்கு?)
ஐம்புலனடக்கி,
நவவாசலொடுக்கி,
நான் தூங்கி எழுந்திருக்க,
விமானம் இறங்குமென்பாள்
பணிப்பெண்ணொருத்தி.
"அடடா, இவள் இவ்வளவு அழகா?
ஏன் பேசும் சந்தர்ப்பம் நானிழந்தேன் இன்று?"
என்று எண்ணும் என் மனது;
இப்போதும் இதயம் அடிக்கும்;
தொடையிரண்டு துடிக்கும்.
செயல் ஒன்று, ஆயினும் சிந்தை வேறு காணீர்.
கீழிறங்கி,
வெளி வாசல் விரைந்து வர,
"இற்றைநாள் இனிது காண்க;
இன்னொருநாளும் எம்மோடு வான் எழுக"
என்பாள் அவ்வழகுப் பெண்பால்,
வாயில் நின்று
வார்த்தை ஜதியாய்
ஜனனிக்க இச்சகத்தே.
என் வாயிலும் புன்னகை பிறக்கும்,
என் விமானப் பயணம் முடிந்த கணம் சுற்றியா,
இல்லை,
முன் நின்ற பெண் முக நேர்த்தி கண் பற்றியா?
....
......
.......
சொன்னால் வெட்கக்கேடு என்றாலும்,
இரண்டுமே இடையறாச் சுகம்தான் எப்போதும் எண்ணுகையில்.
98/09/19
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home