அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கைத்துரு

கை துருப்பிடித்துப் போனதோ என்று ஒரு கவலை,
மூளை துரு துரு என்று துருத்தி இருப்பினும்.
எண்ணம்வரை வந்ததெல்லாம் எழுத்துவரை
வர ஏனோ இயலாது எட்டிப்போனது.
எழுதி ஏடிட்டு என்னவாகிப்போனது இயல்
என்பதால் வந்ததொரு ஏமாற்ற இயலாமையோ?
ஏடிட ஓரிரு இலக்கிய நண்பர் வார இறுதிக்
கண்படும்; மனம் தொடும்; மூளை மலர்த்தும்;
மீள ஒரு நாழி வீட்டு மண்டிக்கடைக்குப் போய்வர
மண்ணெண்ணைக்கணக்கோடு
மசாலாப்பொடி மடித்து மணக்கும்;
கோழி பொரித்ததுடன், போகும் கரிதுடைக்க.
பின் போனது குப்பைத்தொட்டி.
அப்புறம் எப்புறம் அக்கவி அப்புறப்பட்டது ஆரரிவார்?
ஆயினும் என்ன?
அடுத்த சனிக்கு சில ஏடிட்டு அஞ்சலிலே வந்துபோகாதோ
மற்றை ஒரு நாளுக்கு சந்தை மீன் சுற்றி நாறடிக்க.
இத்தனைக்குள், இத்தனையால்,
கை துருப்பிடித்துப் போனதோ என்று ஒரு கவலை,
மூளை துரு துரு என்று துருத்தி இருப்பினும்.
எண்ணம்வரை வந்ததெல்லாம் எழுத்துவரை
வர ஏனோ இயலாது எட்டிப்போனது.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home