அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

கணணியறு க(¡)ண்டம்

கண்ணொடு கண்கலந்து
கை தொட்டுக் காமுற்றிருக்குங் காலை
பின்வந்த பெண் பெற்றோன் என்றே,
என் இடையும் வண்ணமெல்
கம்பி இடை இணை கணணிப்பெண்
(கணணி, கணிணி, கணினி, கணனி,
எதுசரியென்பதெனக்கெதற்கு, இந்நேரம்?
கண்ணிமைக்காமற் கண்ணிவைத்த காதலி,
பெயர் காதகி, கடலை எதுவென்றாயினும்,
கசக்குமோ? சொல்க கற்றோர் நீர்!
முன்நிற்கும் பெண் முகம் பெரிதோ,
பின்வந்த அவள் பெயர் பெரிதோ?
சும்மா, கன்னிமுகம், கண்ணிரண்டு
கண்டிரா முகப்புண்ணுடையார்போல்,
உச்சிமண்டைச்சுழி எத்தனையென மட்டும்
எண்ணி எதிர்வாதமிடு
எத்தனோ, ஏமாளியோ நானும்?
கனியிருப்ப, காய்கவர்ந்தற்றன்றோ?
நன்று, நன்று. அதுவிட்டு இவ்வடைப்புக்குறி
முடித்து, இனி, இடை விட்ட கதைக்கு வாரும்.)
இடையும் தான் வந்து நின்றனன்
கொன்ஸ¤லாஸ்
(கொலைவெறிக் கொட்ஸிலாவுக்கோ
கொங்கோகானகக் கொரில்லாவிற்கோ,
அங்கவன், அங்கதன் செய்கைகளில்
அணுவளவும் குறைந்தனன் அல்லன்;
ஆமி வரும் முன்னே, அடிவிழுந்து
அகதி வரும் பின்னே ஆதலின்மேலாய்,
இவன் வரும்போதே, கூட இடையது
கைகோர்த்து, இளித்துப் பல்
இடையூறும் இடையூரும்).
தன் கண்ணது என் கணணி
கண்ணு(¡று)ற்றான், கச்சிதமாய்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்; ஆயினும்,
கவினுறு கணணிதனைக்
கத்தியின்றிக் காசு கவர்
கள்வர்தொட்டு, கடவுள்தம்பிரதிநிதி,
கலஞ் சென்றுசெவ்வாயிறங்கு
சான்றோர்வரை காமுறுவர்- இதற்கென்ன,
இக்காதகன் மட்டுமொரு விதிவிலக்கோ?

"ஓலா!
(ஐயோ! கிளீன் போல்டா நான், போ!போ!)
ஆ! இதுவென்ன இன்ரெல் பிளென்ரியமோ?"

(தொல்லை தரு தொடர்
கணணிக் கற்பழிப்பாளா! இ·து,
இன்ரெல் பிளென்ரியம் என்றிருந்தாலென்ன, இல்லை
அவுட்டெல் பிளற்றினம் என்றாற்றான் உனக்கென்ன?
வந்ததேன் சொல்லிப் பின்னால், வம்பு தருதலின்றி
வந்தவழி திரும்பி வாபஸ் வாங்கு கண்ணா.
ஆயினும், அன்னானோடு எனக்கு ஆவேசம் ஆகாது, அறிக.
ஆக, அ·து என் பிழை; ஆறுகிழமை முன்னான,
அரைவேக்காட்டுத்தனப் பெரும்பிழை.
'`துபக்` மக்கள் துயரம் தொலைக; புழுதியுழல்
தொழில்மக்கள் புரட்சி பூரிப்படைக; பிசாசுமனப்
பியூஜி மோரி பிளந்துபோகுக'-
என்று நாபத்து நாட்கள் முன்,
மார்க்ஸ் தொட்டு மாவோசேதுங் வரையிட்டு
மண்கண்ட மார்க்ஸீயப் பெயரெல்லாந்தோட்டு
கூட்டு.கலாச்சாரம்.பேரு இற்குக்
காட்டுவெள்ளமாய் மொட்டையஞ்சல் யான்
இட்டதெல்லாம்- பேரு பிறந்த இச்
சேட்டன் அறியும். பின் அறிஞ்சார்க்கும் பறையும்.
முட்டாள் நான்! மார்க்ஸ¤ம் மாவோவும்
`மார்க்கட்'டில் (காய்கறிச் சந்தையில்லை, ஐயா,
இ·து என் கல்விக்கூட நாமம்) எங்கு கற்றார்?
அத்தனையும் ஆள்மாறாட்டம் அழகாகச் செய்தும்
அடியே தம் உண்மைக் கையப்ப ஏடுதனையும்
மறவாமற் தாமிணைப்பாரோ, அடி(தி)முட்டாள்?
இல்லை இல்லவே இல்லை, ஆனால், அதைவிடுமேல்முட்டாள்
நான் சரமாய்த் தொடுத்துவிட்டேன் அவ்வேடும் அத்துடனே.
இக்காரணத்தே, இவ்வாண்டவ(டி)னிடத்தே
ஓர் இறக்கம், சிறு மதிப்பு, மிகு எளிமை,
உள்ளன்போடு ஊறு பக்தி; இல்லையெனில்,
வையவிரிவுவலை எனக்கிணைத்த, கல்கூட-
உள்ளூர் இயக்கியிடம் ஊறு தரு வத்தி
வைப்பான், என் அப்பன் எதுகை மோனையுடன்.
ஏதுசந்தேகமும் இருக்காது ஆள் அறிந்தார் எவர்க்கும்.)

"காண் திரை, பதினாலோ, பதினேழோ?"

(இல்லை, எழுபதடி சினிமாஸ்கோப், என் இனிய நண்ப!
'தொலைந்த உலகம்' ஆய்கூட அறை
நிறைந்த ஆறு காட்சிகள் நாளைக்கு,
டைனாஸொர், ரிரைஸொராஸ் அங்குமிங்கும்
டைவ்வடித்து சாக்கடைநீர்ச் சாம்பிள் எல்லாம் சரிந்தூற்ற
மேலாய் ஓடவிட்டு; அட, மனத்தின்கண் மாசுளா!
எரிச்சலைப் பொதிகட்டி எனக்கென எடுத்து வந்தனையோ?
அது பிரித்து வைத்துக்கொள் என்றுந் தூக்கித்தந்தனையோ?
குத்து காட்டெருமை நானோ? வெறியேற்று செந்துணி நீயோ?
செப்புவதைச் செவ்வனே துப்பிப், பின் செல்க
சீக்கிரமென் சீராளா, நான் கொம்புசீவிக் குதறமுன்)

"Windows 95 உம் உளதோ? Intel எனில் அ·தில்லாமலோ?
matlabஉம் Simulinkஉம் சேர்த்துண்டோ? எனக்கு,
signal processingஇல் ஒரு சிறு வேலை; அது செய்ய,
வசதியாய் வாய்த்துப் போனது இதுவும்."

(ஆ, பாவி! அநியாயத்திற்கங்கேன், உன் வசதிக்காய்
ஒரு 'வ' சேர்த்தாய், சதிகாரா?
நண்பனாய், நாள்முழுக்கச் சுட்டிமின்னும் நல்நாயகியாய்,
நிற்காமல் நிலைக்காமல் நானுள்ளிடா
எண்களெல்லாம் ஓ(ட்)டியெனைத் தாலாட்டுந்தாயாய்,
'அதை அழுத்து, இதை அழி' என்றேவல்
இட மட்டுமேயறி என் மனை நாயகியாய், நேரம் எண்ணித்
தயங்காத் தந்திச்சேவகனாய், கன்னிக்காதற்கடிதமே கடிதெனக்
கன்னி சகோதரன்கை கச்சிதமாய்க் கொடுக்கா நானறிந்த
முதற் தபாலூழியனாய், எதற்குச் சத்தமிடுகை என்றெனக்குச்
சொல்லாமலே என்னில் எரிந்து விழும் என் குருவாய்,
எத்தனை வண்ணம், வடிவம் எடுத்திருப்பாள் நவக்கிரக
செவாலியர் சிவாஜியென என் இந்நூல்வயர்நேரிழை.
இத்தனையுள், எமனேறு இளம் வாகனமே, சொல்!!
என் அருமைக் கணணியென்று நினைத்தனையோ, இல்லை
வைசாலி வாழ்ந்து(த)ற்ற
எழில் அம்பபாலிக் கணிகையென்று அணைப்பினையோ, இதை?
மில்வோக்கிச் சாக்கடையோடு அழுக்குத்தண்ணீரெல்லாம்-
மிகைவேகம் மின்னு மங்கை இவள் இணை கிடைப்பின்,
வாசனைப் பன்னீர்ச் channel என மாற்றுவதாய்ச் சபதம்
குருவினை, போன புதன் வெள்ளியிடை அமர்த்தி, ஆறாண்டு
அழுக்குத்தண்ணீர்த்தரவுப்பதிவி சாட்சியாய் கன்னிகாதனம்
தந்தை ஸ்தானம் அமர்த்தித் தரச்செய்யப்பட்ட,
என் இள மங்கை இவள் மேல், உன் தங்கையென ஆனவள்மேல்,
சபலம் கொள்ளலாமாடா, தொடு
சரசம் எண்ணலாமாடா, சொல் இளைஞ!
நீ ஏதும் புரியா மாடா? அறியா ஆடா?)

ஆயினும், செய்தல், சொல்தல்
ஏதுமில்லை என்வசத்தே.
அமர்ந்தவன் ஆற்றுஞ்செயல் கண்டரண்டு,
அ·து அந்தரத்தொனி அரற்றுவது
காணச் சகிக்கித்திலது அழுஅன்புமனம்.
தென்தீவொன்றினில், பெண்டிரைப் பிரித்த
மிலேச்சரில் மிஞ்சியிரு வஞ்சஞ்செய் நஞ்சனொருவனென
நிச்சயித்து, கை கிடைத்த கனப்புத்தகமெடுத்து
கடி(த்)து பல் துறைநூலகம் நடை பயில்கையிலும்
பின்னது பேதையெனத் தடுத்தழுதது,
"போகாதே, போகாதே என் கணவா!
பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேனென."
(காலை கேட்டிருந்த கட்டப்பொம்மன் செறிதகட்டுக்கு வேறு
காலன்வந்துற்றான் போலும் இக்கம்பனிப்பரங்கித் துரைமகனால்;
கண்ணே, கணணியே! மின்னிணைத்த என் சகியே!
கல்நெஞ்சன் அல்லன் நான், கண்மணியே!
கனல்கொண்டெரி கண்ணகிப்பரம்பரைவழிப்பெண்ணவள்
உன்னைத்தொட்ட என்னைப்பெற்ற அன்னை;
முன்னொருகாலை போர்க்களத்தே மார்வெட்டியெறிந்த மாதா,
மாதாகோவிலடிச்சூசைக்குப்
பின்னொருதலைமுறையில் முடிவிலித்தூரத்தே மாமிமுறையாக்கும்;
கயவர் கொடுமை கொல்லக் காடுறை
காரிகைகள் என் குலக் கன்னியர்கள்;
அண்டைநாடு ஜான்ஸிராணி என்றன்புசெறிந்து
அழைக்கும் அணங்கு, எமை ஆள் ராணி, அம்மணி;
இத்தனை சேர் எனைச்சேர் பெண்ணே,
உனைக்காக்க நானோ உரைக்க
வேண்டுமென்பாய் ஓர் உபாயம்?)

மூமணிநேரம்,
வாசிகசாலை வாசனை பிடிக்காமலே உறைந்து
(என் செய்ய? அத்தனை ஐஸ்லாந்து குளிரேற்றி அங்கு),
மீள, பாவி உள்ளானா இன்னுமெனப்
பதுங்கிப் பதுங்கி, வெட்டச் சேவல் பிடிவீரனென,
ஆய்வறை வர, என் தமிழ்மொழி போல உறைந்து,
மேசையிற் கனதியாய்க் கணணி.
காதலன் கனி(ணி)முகம் காலை
கண்டுகளி காரிகை நல்லாள், கண்சிமிட்டுத்
திரைசேமிப்பி கண்மூடியதேன்?
"Netscape தொடர்புப்பரிமாற்றிக் கீழிறக்கமும்
Apple விரைநேர மேம்படுத்தலும், பண்ணிவைத்தற்காய்
நன்றிக்குரியவனாக, நல்நாயாக, நான் இருப்பேன்
என நம்புவதாய்", நகைச்சு வையென்றெண்ணி,
மேசைமேற் குறிப்புவேறு விட்டுச்
சென்றானாம் விக்கிரமாதித்தனும் வெறுத்து
லீமா முருங்கை ஒன்று விட்டு ஓடிய வேதாளம்;
நல்லது நண்ப, நாயாய் இருப்பதில்
நமக்கும் நற் சம்மதமே;
ஆயின், நச்சுநரனே, இவ்விடமுன் விடநடமாட்டம்
நாலைமுதல் நான் காணில், நாளுக்கொரு ஊசி
நாபிசுற்றிப் போடும்நிலை உனக்கு;கடிவாளம்
அறுத்துவிட்டாய்; கவனம்;இனி, கண்டபடி
கடிப்பேன் மைக் ரைசன்போல்.
காதென்ன, காலென்ன கவலையில்லை காண்.
துவண்ட தோழிதோள் தொட்டதுவும்,
வாரக்கணக்கே வயிற்றோட்டம்போய்
வாடிக்கிடக்கும் மாதக்குழவி கண்போல்,
மெல்ல மின்னி, மீள, இமை,
சுமை தாளாதென தமைமூடிச்
சுட்டுமின்னி.
பக்கத்தே என்னை நக்கலாய்ப் பார்த்துச்
சிரித்தனவென் நேற்றையதாரம், 486 உம்
சேர்ந்திருந்தின்று முதற்தாரம், 386 உம்.
ஆக, யோகர் சுவாமி சொன்னதொரு,
"இ·து எப்போதோ முடிந்த காரியம்."
இனி,
யாரொடு நோவேன்? யார்க்கெடுத்துரைப்பேன்?
ஆண்டை, ஆய்கூடக் கணணிமையத்
தொழில்நுட்ப, -அலுவலகமெப்போதும்-
தோன்றாத் தேவன் அருளுக்காய்,
இரவு பகல் என்றின்றி இரந்து திரிதலல்லால்.
அத் தோழரவர்,
நன்று செய்வனரோ? திருநாளைப்போக்குவரோ?
எறிபத்தநாயனரோ? இல்லை, எரிபந்தமானவரோ?
இன்றங்குளரோ? அல்லை, விடுப்பினால் இலரோ?
கல்லுத்தூணாய் இருப்பாரோ? ஊதின், காற்றேகு
துரும்பென்றாகு வைக்கோற்போரோ?
நரசிம்மம் ஆயெரித்தவிப்பனரோ? பித்தளை
நக்கல் நகை எனைப் பார்த்தெறிந்துதிர்ப்பனரோ?
பிக்கல், பிடுங்கலின்றிப் பிரச்சனை தீர்ப்பனரோ?
இல்லை, விக்கலெடுத்து, இரகுவம்ச இராமன்தன்
"இன்று போய் நாளை வா, ஈழ மன்ன!"
வில்லங்கம் விளம்பியனுப்புவரோ?
ஐயகோ! ஆரறிவார்?
அவர் பின்னே,
(அஞ்)ஞானியாய், (அயர்வுறா)ஞமலியாய்
அலைந்தறிதல் அல்லால், ஆரறிவார்? ஐயகோ!
ஆனால், எதுவெனினுமினி,
இதுசெயல்புத்தி மீளச்சித்திப்பின், மறுவேளை,
பெட்டிக்குள்ளேயே ஒரு சித்திச்சொல்லிட்டு, இப்
பெண்ணைச் சிறைப்பூட்டி வைக்கப்போவதனால்,
ஐயா, பாரதியே! தமிழ்கண்ட தவழ் தென்றலே,
பெரியமனதுபண்ணி, பெருங்கவி பேசாமல்,
விந்தை மனிதர் வரிசை விட்டு,
என்னை மட்டும் விலக்கி வையும்.

97 07 14

0பின்னூடுகை:

Post a Comment

<< Home