அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஒரு கரப்பானின் மரண ஊர்வலம்

எறும்புகள்,
தீக்குண்டம் ஆளிறக்கி
ஆர்ப்பரித்தாடு
ஆதிவாசிகள்.

கலிவரினைக் கட்டிவைத்த
கயிறுகளாம்,
முன்வந்து முனை மடங்கி
வலித்துப் பின்னிழுத்த
ஓடத்தண்டுக் கரப்பான் கால்கள்.

நிலம் பரப்பி வயிறிருக்க,
அதன் நிழல் கீழ் நகரும்
கரப்பான் தூக்கிச்
சேவகக் கட்டெறும்புகள்,
சுடுசிவப்பு விலக்குண்ட
சுறுசுறுப்புக் கறுப்பாக.

அறையோர ஊர்வலம்,
மௌனத்தில்,
ஒரு கரையோர மறைவு மண்புற்று
நோக்கி நகரும்.

உடற்கோது இக்கணமும்
உப்புநீரேறு மீனாய்
உப்பியே கிடக்கும்;
உலர்ந்த உடல் காவி நகர்கையிலும்
உள்ளேறி அரித்துப்போம்
அவசர எறும்புகள்
அதனதன் இருப்பிடம்,
அண்டத்தின் வேறொரு
அகிலத்தே இறங்கு
விண்பயகள் பொதிசுமக்கும்
கவனம் மனம் கொண்டு.

புகையெழுப்பிக்
கடல் விழுந்த விமானம்,
ஒரு
ஆட்கால் அழுத்தி,
நாற்காலி நசுக்கி,
செட்டை அகட்டிச்
செத்துப்போன
செதிற் கரப்பான்.

~~~~~~

இயற்கையிலே,
கரப்பான்கள்,
குஞ்சுக்கு இரை தேடி ஊட்டுமா?
தன்னை முட்டையிட்ட கிழத்துக்கு
முதுகில் உணவு காவுமா?

நினைப்பதை இங்கு,
நேர்மையாச் சொன்னால்,
நிச்சயமில்லை,
என் அறிவுக்கு
இந்நிலையெதுவும்.

ஆனாலும்,
தன்னவனை வழி பார்த்திருந்து
காத்திருக்கும்
இன்னொரு கருங்கரப்பான்
இந்நேரத்துக்கு என்று மட்டும்
என்னுள்
நெருஞ்சி முள்ளாய்ப் படும்.

~~~~~~

இது அறியாது,
அழுக்குத் தின்ற கரப்பான்தன்
உடற்பட்டையுட்புரதம்
அரித்துக் கொண்டோடும்
எறும்புப்படை.

-98/09/16

0பின்னூடுகை:

Post a Comment

<< Home