அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மிச்சிக்கன் ஏரிக்கரை

வழி நீண்டு, வாகனம் மேற்பறந்து,
வந்துண்ட வாட்டம் வற்றமுன்,
ஏரிக்கரை வேண்டுமென்றான்,
என் நண்பன், நவம்.
"நம்மூர்க்கடற்கரை மண்ணங்
கில்லை" என்றேன்.
"கருக்கு நெற்றி கிள்ளி,
பேச்சோடு
பல் சப்பப் புல்லுண்டோ?"
மெத்தவுண்டு; சென்றடைந்தோம்.

மரம்வாழ் மானுடன்
மணிமண்டப மானியம்
கண்ட களை கொண்ட முகம்.
மெல்லிருட்டுத் தூக்கம் தட்டாது
தொட்டு, விட்டுச்சென்ற
பட்டுப் பெண்காற்று.
அண்ணாந்து, தன் தேச ஆகாய
மொட்டுமுல்லை கண்தேட, தூர,
புகை கக்கிச் சிறு கலமொன்று,
ஜாஸ் இசைத்துத் தான் நகரும்.
"பஞ்சமூர்த்தி நல்ல நாதஸ்வரக்காரனடா"
"உம்"
சலங்கையின்றிச் சப்தித்து நம்மருகே
நகர்ந்ததொரு மழை மயிற்கூட்டம்.
"பரிமளா பள்ளிக்கு இண்டைக்கும் வரயில்லை."
"அவள் அப்பர், ஆள் கொஞ்சம் ஆத்திரக்காரரெல்லே?"
"சுகுவும் சிவமும் அதுக்குள்ளை நித்திரையோ?"
இங்கற்ற இருவரும் எங்கோ
இந்நேரம் தொலைந்திருப்பின்,
இங்கிருந்ததாக அறிக அவர் சுற்றம்.
"ஓம் போலை, வா போவம்."
"இன்னமும் அப்பருக்கு இவ்வளவு பயமெண்டோ?"
"அப்பரில்லையெடா; நேரம், இடம் சரியில்லை."

இடை வழிகண்டு, ஏரிகேட்ட
என்வகுப்பு நண்பர்க்கெல்லாம்,
"திருமலை நுரைகடல்
காலம் மாற்றாக் கரையுடைத்து",
என்றனன் நவம், எங்கோ கண் நிலைக்க.

- '97 ஆனி

0பின்னூடுகை:

Post a Comment

<< Home