அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

முகங்கள்

எனக்கேனோ,
முகங்களெல்லாம்
எனது, உனது, அந்நாய் தவிர்த்து
அது கொண்டிழுத்துப்போகும் நங்கையினது,
இங்கே சொல்லாத மற்றெல்லாப்பேரினது,
எல்லாமே,
வெறும் வெளித்தோலுரித்துப்போக
வெறுமை மூலத்தானமிருந்து
வா என்று வரவேற்கும்
வெற்றுத் தோல் வெண்காயம் என்றே படுகிறது.
உனக்கெப்படி இது தோன்றும்?
பின்னென்ன நான் சொல்ல?
சும்மா சோற்றுக்கு உலை வைத்துவிட்டு,
சொகுசாக மெத்தையிடு சோபா கிடந்து,
நேரிழையாள் ஆடை அமைப்பது எப்படி, பின்,
அ·து உடுத்தி, ஆடவர் காண் மேடையிலே, வீதியிலே
ஆடி நடந்து அரங்கேற்றுவது எப்படி
பற்றியரு பேட்டியிடு மஞ்சரியுட் சஞ்சரிக்கும் நேரத்தே
சற்றே திசைவிலக்கிச் சிந்தித்திருக்கப்பாரேன்,
முகங்களெல்லாம் வெண்காயம் ஆனது எப்படி.

உருண்டு, தவழ்குழந்தை உருவெடுத்துப்
பருத்துப் பெருத்து, வெண்ணிறத்தே ஒன்றிருக்க,
மற்றொன்று, பக்கத்தே கூம்பி,
குட்டிக்கையுள்ளேயே பக்குவமாய் எட்டடங்கி,
சிவப்பாய், சிறிது அடி முடி கறுப்பாய்க் கிடக்க,
வேறொன்றோ, தட்டையாய், சிறு நாடிவேர்த்தாடியிடு
ஒட்டிப் பிறந்ததொரு சயாமிய இரட்டையென்று,
வெட்டிப் போடையிலும்
மஞ்சட் தோலுக்கும் உட்தசைக்கும் பேதமற்று.....
...எனக்கேனோ,
எல்லா முகங்களுமே அடிப்படையில்,
காரங்கொள் வெண்காயங்கள் என்றே படுகிறது;
அடி சகி, உனக்கெப்படியோ?

முளையிட்டு வளர்க்கையிலே
பளபளத்துப் புஷ்டித்துப் புஷ்பித்து,
பல குட்டி முகம் உட்கொள் சிறுமுகங்கள் போட்டுப்பின்,
வெளிச்சுருங்கிச் சருகென்று, உள்ளழுகிப் போகும் முகம்,
எல்லாம் பார் வெறும் வெண்காய விளையாட்டு.

இப்போது வெளித்தெரி என்முகம் மூடி,
உள்ளே எத்தனை சிறுமுகம்,
தம்முட் பிளந்திரு இரட்டைமுகம்,
அழகுமுகம், அழுகுமுகம்,
ஒற்றைவேர் மூலத்தே ஒட்டி நின்றாடுதென்று,
எட்டிப் பார்க்கவென்றும் எண்ணியதுண்டோ,
என் துக்கங்களையும் பிய்த்துத் தின்றிருக்க வந்தவளே?
சொல்; இப்போது நேரம் அற்றால், ஆகட்டும்; அவசரமில்லை
அடுத்தமுறை தோலுரித்துக் கூட்டுக்கு, குழம்புக்கு,
காரம்காண் வெண்காயம் வெட்டி இட்டுப்போகையிலேனும்,
சட்டென்று ஒரு நிமிடம், மூளை மூலைக்கெங்கேனும்
சுண்டிப்பார் என் இற்றைச் சொல் நாணயத்தை.

நேற்றைக்கு வந்ததொரு பழம் நண்பன்தன்
பத்துப்பக்கக் கடிதத்தைப் பிரித்துப் படித்திலேனேனும்,
நன்றி என்றாதல் ஒற்றைச்சொல்லொன்று அஞ்சல் இட்டுப்போக்காத
வெட்கக்கேட்டு முகமும் வெட்கப்படாமல் விசாலித்து உள்ளே;
அழுகல் அப்பிள் ஆறு டொலருக்கு அரை இறாத்தல்
அறியாது எடுத்து வந்துன்னிடம் கொடுத்து வாங்கிக் கொண்ட
அசட்டுமுகம் அணைத்திருக்கும் மறுமுகம் மறைத்து மேலே;
பேரூந்துபோன பின்னலிட்ட பெண்கட்கெல்லாம்
புன்னகைத்து, அவர் பதிற்புன்னகைக்காய்த் தான் எழுந்து
அமர இடம் கொடுத்த என் ஆண்டுக்கன ஆண்முகங்கள்
பட்டியலிட்டு, படையாய்த் தூங்கும்
உன் முகம் ஒட்டி உறவாடும் இக்கணப் புனிதன் முகம் கீழே.

முன் செல் சித்தர், ஏரகத்துச் செட்டிக்கு
எடுத்தழுத எல்லாக் காற்றடி வெண் காயமுகங்களுமே
எனக்கிப்போ(து) உன் மூக்கடி மச்சம்போல் அத்துப்படி,
என் நெற்றிதொட்டு வட்டக்குவியுதட்டுக்
குளிர் முத்தமிட்டுப் போம் பெண்பூவே;
இனியாவது சொல் எனக்கு,
உனக்கெப்படித் தோன்றுதிப்போ(து)
உன்னைச் சுற்றியிரு முகங்களின் அகங்களெல்லாம்?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home