அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மழை நாள்

ஒவ்வொரு மழை நாள் மாலையிலும்
கைகள் பிசைந்திராவிட்டால்,
நெஞ்சின் குறுக்காய்க் கட்டி
கண்கள் அலை பாய,
நான் எங்கோ எதையோ
தொலைத்தவனாய் அலைகிறேன்,
பொருள் தேடி.

மழை இருட்டின் குளிரில் இருந்து
முகம் திரியாத அம்மா குரல் கேட்கும்,
"சாரலில் விளையாடாதே, சுரம் வரும்;"
அல்லது,
அறைப்பலகணிக் கம்பி கைபிடித்திருக்க,
தம்பி சின்னவனாகி
உப்புமூட்டை முதுகில் வைத்து
வீட்டைக் கால் ஓயாமற் சுற்றென்று சொல்வான்.

மழைத்துளிகள் எண்ணிக்கை கனப்பின்,
கணினிச்செறிதகட்டின் பழையபாடல்கள்,
கூர்க்கத்திமுனையாகி
கீலம் பாளமாய் கிழிக்கும்
மனதில் வளைகோடுகள்,
கண்ணை மூடிக் கொண்டு
கத்திரியால் கடதாசி வெட்டலென.
இரத்தம் சொட்டச்சொட்ட,
இரு பத்து வருடம் முன்
என் ஊர்வீட்டிற் தொலைத்த
எதையோ தேடித் திரிவேன்,
இங்கே,
அமெரிக்க மத்தியமேற்கிலொரு
ஒளி மங்கிய குட்டி நீர் ஆய்வுச்சாலையிலே.

கண்ணிற் தெளியாத
ஏதோ என்னைத் துரத்துவதாய்,
இல்லை,
எதையோ நான் துரத்துவதாய்
அல்லலுற்று
இளம் நடை முற்றி,
ஓடுவேன் பெட்டி அறைக்குள்
சுற்றிச்சுற்றி,
எதுவும் என்னைக் கை
பற்றிப் பிடித்து விடாதிருக்க.
அப்போதும் நெஞ்சத்துட்
தொட்டுத்தடவ முடியாததாய்க்
கற் சுவரில் செம்புக்
குற்றி நாணயத்தால்
கிரீச்சிட்டுத் தேயும்
முதுபச்சை இலைக்
களிம்பு நினைவுகள்.

மழை ஓங்கிக் கூரைச் சட்டம் அடித்து,
சத்தமிட்டு ஓங்கரித்துக் கொட்ட
விக்கித்து விறைத்து நிற்பேன்
இருள் வெளி நோக்கி,
வான் திக்கில் விழி நிலைத்து.
சில சிறு சிட்டுக்கள் நனைந்தும் பறக்கும்;
பல, ஓய்ந்து ஓட்டை உடைசல்களில்
ஒளிந்து ஒட்டியும் கொள்ளும்.
சின்னக்குரலில்,
கணினி பின்னால் ஒலிபெருக்கி,
பசுமை நிறைந்த நினைவுகளைப்
பாடிக் கிடக்கும்,
இனிமையுடன் தனிமைப் பயமேற்றி.
தன் வாய்க்குருதியுடன்,
குத்திக் கிழித்த எலும்பு சுவைக்கும்
ஒட்டற் பசி நாயென
பாடல் செவியுள்ளே விட்டுக் கிடப்பேன்
வெகுவாய் ஊற.
நெஞ்சிற் கீறல் நிற்க,
பொடிபட்ட நினைவுத்துகள்கள்
மேலெழுந்து கண்திரவமாய்ப்
பொழிந்து பரவும்.

மழை வந்ததுபோலவே
மங்கி மறைந்துபோகும்;
நிலம் காயும்;
கண்ணீரும் காலமும்
அதுபோலவே,
வந்தவழி வரண்டு போகும்.
மீள இன்றைய உலகம்
என்னைச் சுற்றி
அடைக்கும் மதிற்கோட்டையாய் எழும்.
முள்ளுப்பற்றைகள் முதுகிற் குத்தும்.
தொலைந்திருந்த பொருள்
நானேயன்றி,
நான் எதையும் தொலைக்கவில்லை
என்றும் படும்
எந்தன் நெஞ்சிற்கு.
காரணம் புரியாது.
ஆனாலும்,
அடுத்த மழைமாலைக்கும்
எனக்கு அழுகை வரும்;
இளம் அம்மா, சின்னத்தம்பி
நினைவும் கூடவே
கைகோர்த்து எழும்.

-'98 ஆடி 22, புதன் 15:16 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home