அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

முற்றுப்பெறா முகவரிகள்

முகவரிகள் முற்றுப்பெற்றுப்போவதில்லை
காலத் தளத்தில் என்றும்.
வெற்றுக் கணினி மொழிக் கூற்றுக்கள் போல
ஒன்றை மற்றது சுட்டி சுட்டிச் சுட்டியே முகம் மறைத்து
நேரப்போக்கில் முன்னைய முழு உருமாற்றிப்போகும்
சார் தளத்தில்.
நிரந்தரம் அற்ற எல்லா முக வரிகட்கும்
முகவரிகள் இந்நேரத்திற்கான வெற்று விரற் சுட்டிகளே.
நேற்றைய நான் இன்றைய நான் இல்லை என்றது என் தேடல்.
நாளையப் பார்வையில் இந்தக் கூற்றுதிர்த்த நான் தேடப்படுவேன் புதிய
என்னால்.
இந்நிலையில் முகவரி ஒரு காற்றில் உதிர்ந்த கடந்தகாலப் பழுப்புச்
சருகு.
புதுச்சருகும் நாளை உதிரும்.
இதற்குள் ஏன் ஒரு முகவரி, இன்னொரு புது அறிமுகம்?
வார்த்தைகள் போல வாழ்க்கைபோல
முகவரியும் இற்றைச் செயலில்
இதுதான் என்றிட்டுப் பார்த்துப் போகவேண்டியதுதான்.
பின்னர்,
முற்றுப்பெற்றுப்போகும் கணங்களின் உரிமை முகங்களுக்கு
முற்றுப்பெற்றுப்போகா முகவரி மட்டும் என்ன முகம் கொடுக்கப்போகிறது?
எனினும்,இன்றைய இலையை மட்டும் காண்க.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home