அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

ஒரு நாடோடிப்பாடகனின் இன்றைய நாட்குறிப்பு

கால் ஓயா,
ஒரு
கோழை
நாடோடி வாய்ப்பாடகனின்
கைப்பிறந்த
இன்றைய நாட்குறிப்பு,
இது:-

~~~~~~~~~

அநாமதேயக் கீழைத்தேசமொன்றின்
ஏழைப்புத்திரன் ஒருவன்,
மேற்குத் திசைநகர்ந்து
பெரு ஆற்றுக்கழிமுகத்து வாய்ப்பரப்பில்,
யாழ் மீட்டி, இசை சொட்டி,
யாசித்துக் கிடப்பான்,
வழிப்போக்கர் வீசு
அழுக்கு நாணயங்கள்,
நிலம் விரிந்த
துணி வயிற்றில்.

~~~~~~~~~

அவனது தேசம்,
அங்கே,
தெருத்தெருவாய்
நெடும் தீப்பற்றி எரியும்.
இங்கிரவு,
சிறு இரவற் கோப்பை நிறை
நீர் பருகி,
இறுகி
அணைத்திருப்பான்
இவன்,
திணற்றும் புகை
இன்றைய துயர்.

பெயர்தெரியா இலை
உதிர்த்த பூங்கா
இருக்கையிலே,
வான் பார்த்து
முகம் கிடக்க,
கடக்கும் குளிர் மேகம்
இருட்டில்,
இவன் தேசத்திசை.

~~~~~~~~~

ஓடும் நதி,
கீற்று மூங்கிற்
சிறுகுழற்காற்றூடாய்,
நாட்பொழுதில் யாழ் மீட்டி
ஓய்ந்தவன்மேல்,
ஒரு நாழி,
நாதப் பிறப்பாகி,
மேல் தடவி
முயங்கிப் புணர்ந்திருக்கும்.

இனி வரும் காலைக்கு,
அவனுட் புதுக் கரு விளையும்;
கரட்டு விரல் மடிந்து,
மகர யாழ் மோகித்து வளர்க்கும்
அவன் துயர் தழுவு தந்திக் காவியம்.

அதுவரையில்,
அன்றைய மணற்றிடர்
திரை பின்னிருந்த
அந்தகக்கலைஞனின்
இன்னொரு இன்றையக் குழந்தை
யாசிப்பு யாத்திரைநாளொன்று
நீட்டித் துயில்வான்,
முன்னவன் போல்,
வேற்றொரு திசையிலே
விரிகடல் கடந்து.

~~~~~~~~~

காலத்தின் கறங்கலிலே,
நகர் நகராய்,
நகராமற் தொடரும்,
நீங்கா
அகதி யாழ்ப்பாணன்
யாத்திரைத் துயர்கள்,
கால் துளிர்ப்பிற்
கிளர்ந்தெழுந்த
நிழல் நேசத் தொடர்பாய்.

கால் பரவிப் போகும்
தேசம் திசை எங்கும்,
கானல் வரிப் பாடல்கள்
புதுக் கோடுகள் காணும்;
கோலத்தில்,
வளை வரிகள் குறுக்கோடும்;
புள்ளி மையங்கள்,
மெல்லவாய்
இடம் பெயரும்.

~~~~~~~~~

நாட்போக்கில்,
வான் வீதியிலும்
பல்வேறு நட்சத்திரப்பாதை
அவரவர்க்காய்
ஓடக் காண்பார்கள்,
தீ பரவப் பிரிந்த
பாலை மணற் புத்திரர்கள்.

பாணர்கள்
இசைப்பண் மாறும்;

பாடினிகள்
ஆடுபாவம் கோணலுறும்;

பாலகர்கள்,
தீ எரியும் தேசத்
துயர் தெரியா,
யாத்திரை செல்
தேசக்குடிகளாகி
வந்த திசைச்சுவடு
மணல்மூட
மறந்து போவார்கள்.

~~~~~~~~~
வசிப்பு
யாசிப்புக்காய்,
யாழ் வாசிப்பு
இனியும் தொடரும்;
ஆனால்,
மகரயாழ்,
முகம் மழுங்கி
மூளியாய்ப் போகும்;
தந்தி,
நெம்ப நெம்ப
நேர்நிலை
தொய்யும்;
அவர்களறியா
இன்னொரு கருவியிலே
என்றாகிப் போகும்
பின்னொரு நாள்,
முன்னைய யாழ்.
இனிவரு
பாணர் குழவிகள் கருவியில்,
இசைக்கருக்கள்,
அகதித்தேசத்து
கருக்கு
அவலம் மட்டுமே
பேசித் துயருரும்.

~~~~~~~~~

ஆயினும்,
வெகுதூரத்தே,
அவர் முன்னவர் தேசம்,
யாழ்கள் முறித்துப்போட்டு,
பாணர்கள் தேகம் பற்றி,
தொடர்ந்து நெருப்பு
ஆகுதல், அவித்தல்
நிலைத்துத் தொடரும்.

அந்நிலையில்,
தாய்க்கிழப்பாடினிகள்
தம் வாய் திறக்க,
மரண ஓலம் மட்டும்,
உயரே எழுந்து ஓங்கிப்
பரவிக் கொட்டியது,
உப்புக்கரி
கடற்காற்று வெளியில்
இரத்தச்சிறுதுளிகள்,
நிலம்
சொட்டச் சொட்டப்
பெரிதாக.
~~~~~~~~~


(செம்மணி மண்ணடி மைந்தர்கள் நினைவாக,
செய் கை அற்று பெரு வாய் மட்டும் வளர்ந்துபோன
ஒரு வெற்றுக் கோழையின் கையிருந்து எழுந்தது)

1998 புரட்டாதி 26, சனி 15:13 (மமேநே)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home