அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நாள் வேறு

முள் முட்டித் திரும்பும்;
மோனத்தே முடிவிலாக் குதூகலம்.

ஒரு வார ஊடல் உடைத்துப்
புரண்டு பெண் அணைத்து
போர்வைக்குள் மீள் படுக்கை;
பின், போகம் தீர்ந்து,
போன கதை பேசிச்
சோர்ந்த உடல்கள் எழும்;
பின் சன்னல் திறந்து காற்றுப்
பெரு வெளியில் மனம் சங்கமிப்பு;
வார இதழ் பார்த்து,
குளிர்போகக் குளித்திருப்பு;
மதியம், வெளியிடத்தே
மனைவியுடன் உணவெடுப்பு;
நல்லதொரு திரைப்படமோ, இல்லை
ஏரிக்கரைப் புல் இருப்பிடமோ;
மாலை, பொருள் பண்டம்
கூடிப் பார்த்து வாங்கி வீடு சேர்ப்பு;
நண்பர் சிலர் கூடியிருந்து
நடுவீட்டினிலே வெளிக்கதைப்பேச்சு;
அடுக்களைக்குட் சமையற்கதை
பேசி, புறமும் சொல்லும் பெண்குலம்;
அவர் போக, விளக்கணைத்து
புரண்டு பெண் அணைத்து
போர்வைக்குள் மீள் படுக்கை;
பின், போகம் தீர்ந்து போக,

தள்ளிப்படும் எனச் சொல்லப்படும்;
வெட்கத்தே தான் கீறுண்ட
வேதனையில் ஊடல் எழும்;
காலையிலே இமை ஒட்டி,
தூக்கத்திற் குளித்திருந்து,
வாகனம் துரத்தி,
வீதி விளக்கணையக் காத்திருந்து,
வசைமாரி நாலாயிரம்
நாள் முழுக்கப் பெற்றிருந்து,

கூடல் மிகக் கூடிவரும் மறு வார
மணி முள் முட்டித் திரும்பும் வரை
மோனத்தே முடிவிலாக் கொடூரம்.

கொடூரம்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home