அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நாய்கள்

என் சிறு மகளுக்கொரு சந்தேகம் நேற்று:
"பக்கத்துவீட்டுச் சிறுபையடங்கு பொமரேனியனும்
எங்கள்வீட்டு, குள்ளநரியிற் பெரிது+குதிபரியிற் சிறிது அல்ஷேசனும்
தம்முள் 'வள் வொள்' என்றே குரைத்துக் குலாவுகையில்,
நானும் அவ்வீட்டுறை அன்பரும் வேலிபோடுவதில் மட்டுமேன்
வீணாய் வேற்று மொழிகளிலே வீராப்புக் காட்டுகிறோம்?"
கூடவே,
"நாய்கள் எப்போதும் நமக்கு வாலாட்டும் நன்றி,
ஏனெனக்கு, எதிர்வீட்டு உதவிசெய் நண்பரில் இல்லை,
அவருக்கேன் அத்தகு குணங்கொள் அவர்
அயல் வீட்டுக்காரர் முகம் பெரும் தொல்லை?"
"அதுதானே, பெரும் கெட்ட மனிதசுபாவம்;
ஐந்தறிவுள்ள ஞமலிகட்கிருப்பது,
பட்டறிவுள்ள இம்முட்டாள்கட்கில்லையே?
அன்பெனும் சோதி அகிலம் பரவிட
முன் சொன்ன தமிழ் நல்லோர் முதுவுரை
முற்றிலிலும் மனம் விரவக் கொண்டிடு;
சிந்தனை செழிக்கும்;
உளச்சாந்தியும் சிலிர்த்து நிற்கும் "
இத்தனை சொல்லி பொய்யுடன் சேர்த்தொரு,
பெரும் பஞ்சுமிட்டாய் கொடுத்து,
தின்றிரு என்று சொல்லி, அது தின்று
மறு கேள்வி அதன் மனத்தே எழுதல் முன்
பொய்யாய் புதிதாய் ஏதோ புரிதற்கு வெளிச் சென்றேன்.

பின், என்ன?
தன் சொந்த, பெற்ற,
சிற்றாடை கட்டு குழந்தைக்கு யாரும்,
தம்முட் பிடிபட பெட்டை, ரொட்டி, குட்டி என்பு
ஏதொன்று கிடைப்பின், எப்படி எம் நாய்கள்
பிய்த்தொன்றை பிடுங்கும் மற்றது என்றதும்
பிய்த்ததிற் தன் வாய்வந்த ஒட்டுத்துண்டுவிள்ளல்,
சொந்தக் குருதியுடன் சுவைத்துத் தின்பதும்
சொல்லி வைப்பானா,
எந்த முட்டாள் தகப்பன் என்றாலுங்கூட?
சரி போகட்டும்; சொன்னாலும் அச்செய்தி,
வாலாட்டு நல் நாய் நன்றியெல்லாம்
முன்னொருமுறை அதன் முதுகு
ஒரு கோலாட்டி என் மேனி கொண்டதெல்லாம் கூடவோ?
எம்நாய்கள்போல்,
எதிரோ அயலோ நண்பரும் நானும்தான்
வேற்றுத் தெரு வீதி+வீடு வசி
நாய்கள் நரர்கள் கடித்துக் கொல்லவரின்,
ஒன்று கூடிக் குழுமி நின்று
குதறித் தள்ளுகிறோம்;
வரு வேற்றுமையில் உள் ஒற்றுமைக்
குதூகலம் கொள்ளுகிறோம்.
குதறுவதிலும் குலாவுதலிலும் நாய் என்ன, நாம் என்ன?
எல்லாமே
எறிபடு எச்சில் இலை பிடித்தற்கு
எனக்கென உனக்கென
எல்லாக்
குத்துக்கரணமும் அடித்திருந்து, மீள,
குதறு கணமும் பார்த்திருக்கும்
கஞ்சிக்காய், வஞ்சிக்காய்
கெஞ்சித்து, வஞ்சித்து
பஞ்சை உயிர் மிஞ்சியிரு
பட்டினிப் பட்டாளங்கள்தான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home