அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நகர்வு கொல் இருப்பு

வெளியிற் புரளும் பூமிக்கோளத்தில்
என் இருப்புக் கோண ஆள்கூற்றுக்களை,
துடித்திருக்கும் காலத்துமியின் துளிர்ப்புகளில்
இடம்பெயர்த்து நகர்வேன்.

ஆயினும்,
வாழ்க்கை,
பழைய வளையக்கிணற்றுள்ளேயே
மேலும் கீழும் வாகனச் சக்கரம் உருட்டும்,
உயிர்,
நம்பிக் கை இலாவகத்தின் கையில் அடகு வைத்து.

புதிய புற்தரைகளில்,
முன்னைப்போல்,
இன்னமும்
ஒற்றையாய் இரட்டைச்சுவடுகள்
மிதித்திட்டுச் செல்லும்
பழகிய என் பாதங்கள்,
தம் தினசரிப் பாவமாய்.

~~~~~~~~~~~~~~~

அண்டத்தின் குறுக்கான காலப்பயணத்தில்
என்றோ உமிழ்ந்த ஒளி மட்டும்
வானிற் தெறித்திருக்கும்,
என் விருப்புத் தாரகை.

கோடி ஒளி ஆண்டின் முன்,
உயிர் வற்றி,
உடல்சுட்டு,
உடைந்தெறிந்து
எரிந்தற்றுப் போயிருக்கலாம்,
அது;

அல்லது,

இன்னமும்,
அதன் சுவாசம்,
இனி வரும் கல்பத்துக்கும்
தனை உருக்கி,
எனக்காக எங்கிருந்தோ,
சொரியலாம் ஒளித்துகள்கள்
என் மூச்சு இழைந்திருக்கும் இழையாக.

ஆனால்,
இக்கணத்தே,
மாய யதார்த்தம் என்றுபடும்,
அதன் இருப்பு,
என் உயிர்ப்புக்கு.

~~~~~~~~~~~~~~~

எனது காத்திருப்புக்கள்,
கடந்த கனவுகளின் சட்டங்களிற்
கழுத்து மாட்டிக்
கண்காட்சியாய் இன்னமும்
கண்பிதுக்கி,
கைவிரித்து,
காலகட்டித்
தொங்கும்.

அலைதலும் நிரந்தரமின்மையுமே
நிரந்திர உறைதலென்று
அதிகாலைகள்,
குளிர்நீர்,
முகம் தெளித்துச் சொல்லும்.

வாயில் திறக்க,
வாசற்படிகள் மாறிக்கிடக்கும்;
மனிதர் அடையாளங்களும்,
அவைகூட.

ஆனால்,
இவையூடே,
மற்றதெல்லாம்
மாறவில்லை என்று மாவீரப்பட்டயம் அறைந்திருக்கும்
என் ஒவ்வொரு கணத்து முகத்தினிலும்

~~~~~~~~~~~~~~~

வளைதலும் குனிதலும்
அடங்கலும் ஒடுங்கலும்
மனதில்,
உடலில்,
இச்சையின்றியே
எழுந்தடங்கும்.

எதுவுமே மாறவில்லை;
இயற்கைமட்டும்
வேறொரு முகத்திரை மாற்றி,
உடலுக்கு,
புதுவண்ணம் போட்டு
நாட்டியத்தின் காட்சி மாறியதாய்க்
கட்டியம் கூறும்.
பாத்திரங்கள்,
மனம் மாற்றாது,
முகம் மட்டும்
சிதைத்திருப்பார்,
சிரைத்திருப்பார்.

இத்தகு காலப்பற்களின்
கோரச்சிரிப்புக்கூட,
பயம் கெட்டு,
சலிப்புத் தரும்:
"நன்னலோ,
நசுக்கலோ
விரைவிற்
பண்ணித்தொலை;
அதுபோதும்."

~~~~~~~~~~~~~~~

இவைக்கு முகம் விலக்கி,
"மாயமெய் தகர்த்தெறிந்து,
இன்றாவது என் மடியிறங்காதா
என் வெள்ளி நட்சத்திரம்?"
என்று
என்றும்போல்,
தெளிவில்லா அதன் இருப்பில்
என் இருப்பு இறக்கி வைத்து,
உயிர்ப்புப்பச்சை இலை,
அரித்து, மென்று,
அரக்கி
மழை நத்தையாய்,
தனிமை நகரும்,
இங்கு.

'98 செப்டம்பர் 12, சனி 18:05 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home