அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நேரத்தின் நிலைப்பாடு

நாழிகை நாள் நேரம் எல்லாம் சார் கணியமா சாராக்கணியமா
இன்று எவராவது எனக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
சும்மா குழந்தைப்பிள்ளைக்கு அ, ஆ அரிச்சுவடி சொல்லிக்கொடுப்பதுபோல
அறுபது கணம் ஒரு நிமிடம், முப்பது நாள் முழுதாய் ஒரு மாதம்
என்று
சாட்டுக்குச் சொல்லிக்கொண்டு அடுப்பு அரிசி அவிந்து விட்டதா என
யோசித்திருக்கும் மாய்மாலம் எல்லாம் இனிப் போதும்; இன்றைக்கே,
இரண்டில் ஒன்றாய்,
நாழிகை நாள் நேரம் எல்லாம் சார் கணியமா சாராக்கணியமா
இன்று எவராவது எனக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
நேற்று தொலைத்த நிமிடங்கள் பற்றி என்னது,
இன்னும் எத்தனையோ மொழி நண்பரது, டாலியது
கவிதைகள், கதறல்கள், கைக்கீறல்கள் கண்டிருப்பீர், மனம்
வெந்திருப்பீர்;
ஆனால், விடயம் விளக்கிச் சொல்லச் சிறிது கேட்டால்,
எட்டாம் வகுப்பு விஞ்ஞான ஆசிரியக்கிளி போல, நேரமெல்லாம்
நேராய் சாராக்கணிய ஆள்கூற்றுக்கோட்டில் அப்படியே விழுமென்றால்,
என்ன அர்த்தம்?
நான் முட்டாள் என்பதா முகம் நேரே சொல்லக்கூடாமல்?
உம்மைச் சொல்லி என்ன பயன்?
எனக்கே நேற்றைக்கே வெளிச்சநேரம் மூளைவீட்டு வெளிவிளிம்பில்,
வீட்டுக்குப் பேசிய தொலைபேசி மாதக்கணக்கு கடிதக்கூட்டுக்குள் வந்துவிழ.
அடுத்தமுறையேனும்,
காதலிக்காய் கைபிசைந்து கடிகாரம் கடிந்து கண்டு காத்திருக்கும்
நேரத்தில்,
அவள் வந்து கட்டியணைத்து முத்தமிட்டுக் களித்தபின் கைகாட்டி
போய்விட்ட நேரத்தில்,
மாதத்துச் சம்பளம் வந்துவிட்ட காலத்தில்,
கையப்பம் சுட்டுமிடம் இட்டு வெளிவந்து
மளிகை, வாயு, மின், தொலைபேசி எல்லாம்
வாயில் வைத்து அது தின்று எரித்து விட்ட கோலத்தில்,
சில்லறையாய்ச் சில நிமிடம் சிறுகச் சேர்த்து
காலம் கை மணிக்கூட்டுடன் சரிபார்த்து,
எட்டாம் வகுப்பு விஞ்ஞான வாத்தியாரின்
அந்நேர உம் மூளைக்கெட்டா அஞ்ஞானச்சேட்டைகளை
கொஞ்சம் என் ஞாபகமாய் சிந்தித்துப் பாருங்கள்,
நாழிகை நாள் நேரம் எல்லாம் சார் கணியமா சாராக்கணியமா
என்றவது எவராவது எனக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும்
என்றாகிப்போனதால்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home