அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நேசித்திருத்தல்

மாடம் செறி அழகு குமரி இலை தொலைத்து,
பூர்ணிமை வைகாசி வசந்தப் பூக்கொழுத்து,
மெதுவிறங்கு விமானமென நிலம் உதிர்க்கும்
பெரு மர அடி சிலிர்த்து இருப்பது போல்,

அரையிரவில்,
முற்ற, மொட்டு மல்லிப்பெரு வெளியில்,
முழுநிலவிற் தோய்ந்திருந்து, இழைந்து,
தலையணையில் நாள் தளர்உடல் சரித்து,
தொலைதூரவானொலியில்,
வளியோடும் வழியாக துகளாய் ஒலி வலித்துவரும்
மொழிதெரியாத்
தந்தி, தாளம், காற்று,நாதம் புணர் இசையூடே,
குறைவிழிப்பில், எழுந்து, மிதந்து,
குளிர்மேகமேகிப் பறத்திடல் போல்,

மெதுதூறல் மழையூடே, அறை ஜன்னல் கண்ணூடி,
வெகுதூரம் கடலூடே, புது மணம் காண் சோடியென,
தாம் முன் ஊடி, பின் கூடி,பரவசமாகி விழுந்துளிகள்,
ஆடு தென்னைதன் பரதக்காற் கீற்று இடை,
ஆர்ப்பரி அலை பின்னெழு எழில் மலை மேல்,
கரும் பூத உருக்கொள் மேககூட்டஞ் சிதை
கீற்றிடு கிளை தழை வளை பெரு மின்னல்
அசைவோட்டம், ஆட்டம் பாட்டம்
அமைதி கொண்டு இரவுத் தூக்கமுடன்
பாம்பிணையெனப் பிணைந்திருக்க இரசிப்பதுபோல்,

-இது போலும்,
சில வேளை, என் உணர்வூடே செழித்திருக்கலாம்,
--ஒரு வெம்மை தாளாக்கோடை மழையென்றெனக்காய்
வெருள் கருமைக்கண் காட்டி, வெட்டிப் போகும் சிறு பெண்ணே,--
உன்னை இவன் நேசித்திருப்பதும்.

- அரதற்பழசு(84 வைகாசி)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home