அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சலவைக்காரனுக்காய்க் காத்திருப்பவர்கள்

நம்பினால் நம்புங்கள்;
ஆனால்,
பௌதீகக்கணியமாய்க்
குவிந்துள்ள அழுக்குமூட்டைகள்போல்
உண்மை;

"சலவைக்காரனை,
என்னைப்போலத்தான்
எவருமே கண்டதில்லை
ஊருக்குள்."

ஆனால்,
கழுதைகளைக் கண்டிருக்கிறேன்.
எல்லோரைப் போலவும்தான்
எனக்கும் அவை சொன்னதுண்டு;

"சலவைக்காரனைச் சுமப்பவர்
நாம்;
கூலிகள் இப்போது பெற்றுக் கொள்வேம்;
சலவைக்குத் துணிகள் பிற்பாடு."

மன்னிக்கவேண்டும்;
எனக்குக்
கழுதைகள் மொழி
துப்பரவாய்ப் புரிவதில்லை.
அதனால்,
மேற்சொன்னது,
கழுதைகளின் வாடிக்கைக்காரர்களின்
இரண்டாம் நபர்
மொழிபெயர்ப்பு.

நெசவாளர்கள்,
நிசிவேளையிலும்
தறி இழுத்து
நூல் பிடித்துத்
தள்ளுவார்கள்
தத்தம் கை முழம் முழமாய்ப்
புதுத்துணிகள்.
வண்ணங்கள் அங்கெத்தனை!
வன்னங்கள் அங்கெத்தனை!
வேறு வேறு நெசவாளர்கட்டு
வேறு வேறு வாடிக்கையாளர்கள்,
வேறு வேறு வாடிக்கையாளருக்கு
வேறு வேறு கழுதைகள் போல;

வாடிக்கையாளர்கள்
புதுத்துணிகள் வாங்குவார்கள்,
கழுதைகள் என்றாவது,
சலவைக்காரனைக் காட்டுமென்று,
பெற்றுக்கொள்ளும் கைக்கூலிக்கு,
துணி அழுக்குப் போக்கக் கேட்குமென்று.

ஆனால்,

"சலவைக்காரனை,
என்னைப்போலத்தான்
எவருமே கண்டதில்லை
ஊருக்குள்."


"இன்று
அடுத்த ஊரிற் கண்டேன்;
நாளை வருவார்,
இங்கு "
என்று நாள் கடத்தும்
ஒரு கழுதை.

"இல்லை,
இது பொய்;
நேற்றைக்கு இங்கு வந்தார்;
நெசவாளர் சிலரைக்
கண்டார்"
-இது மறு கழுதை.

சலவைக்காரர் ஒருவரா,
இல்லை,
ஒன்றுக்கு மேற்பட்டவரா
-ஒருத்தருக்கும் தெரியாது,
அவர்/அவர்கள்,
அங்க அடையாளங்கள்,
அணி மணிகள்,
ஆயுதங்கள்
தொழில் அற்புதங்கள்,
தோன்றா அற்பங்கள்
போலவே,
அவையும்
கழுதைகள் சொல் சங்கேதத்துள்ளே
மங்கலாய்,
மாம்பழத்துச்சதைசெறிந்த
ஊற்றுச்
சாறாய்க் கிடந்ததென்றார்,
என்னூரார்.

ஆனாலும்,
சொட்டும் சாற்று
ஒரு சிறுதுளியின் நுனி
நா விட்டுக் கொண்டாலே
சலவைக்காரன் பேரால்,
அவரவர் கழுதைகட்காய்
அடிபட்டு புரண்டு எழுவார்
உடலிருந்து களைந்தெறிவார்,
அவரவர் வீட்டு மூலையிலே
ஆளுக்கொரு
புழுதி படிந்த
இன்னுமொரு அழுக்குத்துணி

ஊரில்,
உயிருள்ள
எவருக்குமே,
அழுக்குமூட்டை,
அவரவர் வீட்டில்,
மூலையில் முளைவிட்ட
கணத்தின் கணத்தாக்கு
மூளையிற் பட்டதாய் நினைவில்லை.
வீடுகளுக்கு மூலையிருப்பதே அறியார்;
வீடெல்லாம் அழுக்கு மூட்டையிலே
ஆகி எழுந்து தாங்கி நிற்பதாய்
ஒரு தங்கித் தேங்கிப்போன
சிறு குட்டை எண்ணம்,
ஆழ ஆணி அடித்து,
அவர் மனத்து.

ஆண்டாண்டு காலமாக
வீட்டு வெளி குறைத்து
விரித்து
அடுக்குவதற்கென்றே
ஆக்கப்பட்டனபோல்,
பெருக்கற் தொடரில்
விரிந்துபோம்
அழுக்குமூட்டைகள்.

கழுதைகள்,
காலையில் எங்கிருந்து வருகின்றன,
வெயில் சாய,
மறைவாய் எங்கே தூங்கப் போகிறன..
எவரும் அறியார்;
அறியவும் விழையார்.

எனக்கு ஒரு சந்தேகம்;

"நெசவுக்காரர்களின்
மிக நேர்த்தியான
நெய்கைதான்,
சலவைக்காரன் கதை."

நெசவுக்காரருக்கான
கழுதைகளின் மரியாதை போலவே,
நெசவுக்காரர் வீடுகளின் ஏன்
அழுக்குச்சுமைகள் சேர்வதில்லை
என்பதும்
புரியாத மர்மம்,
என் வரையில்.

ஆதலினால்,
தினசரி
வெற்றுமுதுகு
வேலையற்ற கழுதைகள்
நம்பி அழுக்குச் சேர்க்க,
இனி
மற்றவரைப் போல்
சத்தியமாய் நான் தயாரில்லை.

கழுதைகள் மிரள்கிறன;
நெசவுக்காரர்கள் நெருமுகிறார்கள்;
நெளிகிறார்கள்.

சொந்தச் சட்டைகளைத்
துவைக்க முயல்வதற்குச் சிரித்து,
கதை பேசும் கழுதைகளின்
காணாத சவலைக்காரனுக்காய்
காத்திருப்பவர்கள் மத்தியிலே,
என் அழுக்கு மூட்டைகளை
ஒவ்வொன்றாய்
ஆற்றில் எறிந்து,
செயலுக்குச் சரியெனப்பட்ட
சொந்தச்
சலவைத்தூள் தூவி நான்.

'98 DEC. 04, Friday 05:30 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home