அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

வேதனை

தறி கெட்டழிந்து வீடு
திரும்பிவந்த மக்களுக்காய்
பெற்றவர்கள்
விட்டிருக்கும் கண்ணீர்
எனக்கும் புரியும்.

விட்டகணை இலக்கொருமுறை
சுற்றி வந்து
காலடியிற் சத்து விட்டுச்
சத்தமின்றி வீழ்கையிலே
வேடன் மனமுற்றிருக்கும்
வேதனையும்
எனக்கும் புரியும்.

கைக்கெட்டிக் கிடைத்தன விட்டு
மிச்சமின்றி புனல் ஒட்டி
மிதந்துபோனவை இட்டு
புலவன் உற்ற உளக்கொதிப்பும்
எனக்கும் புரியும்.

கொட்டுமழை, கொடுவெயில்,
குத்தும்பனி, குளிர்காற்று
கண்டிடாது தினம்
ஒற்றைப்பிறவியாய்
மாலை நெடுநடை,
மரநிழல், மதிர்சுவர், ஏரி
என்று ஏதுமே விட்டிடாது இட்டு,
சொல், கட்டிக் கோர்த்து
விட்ட வரிக்கவிகளில்,
பிறர் மனமுகம் தொட்டு விடாக் குழவிகள்
தமிழ்ச்சொல்வதனம் சுருங்குதல்
எண்ணிப் பெற்ற மனம்
பதைத்து, பரிதவித்து
பற்றிக் கிடக்கும் நெருப்பு
தரும் உணர்வினால்,
முன் சொன்ன
அத்தனையும் அப்பட்டமாய்
எப்படித் தகிக்கும்
எல்லோருக்குமுள்ளேயென்று
எனக்கும் புரியும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home