அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

என் சாளரத்தின் வெளியே...

சாளரத்தின் வெளியே...
அரைக்குறைக்கட்டிடத்தின்மேல்
மழை கொட்டித் தேங்கி,
நீர்க் குட்டையாய்த் திமிறிக்
கரிக்குருவிகள் குளிப்புச்சிலிர்ப்பில்
புவியீர்த்துக் கீழ்ச் சொட்டும்,
துளிகள்.

என் சாளரத்தின் வெளியே...
அணில்கள்,
அழுக்கு விதை தின்று,
கால்நகம் பிராண்டி,
வாலால் தேய்த்தழுத்தி,
என் முகம் நீட்டிப் பதிக்கும்
ஒரு கண்ணாடி முத்தம்
அதன் முகத்திலேயே
சுத்தமாய்த் திரும்பித் தெறிக்கும்.
உணர்வு செத்த விபச்சாரி உடலாய்,
ஒளிமுறிவுக்குணகம் அற்று விறைத்திருக்கும்
அறைச் சாளரக் கண்ணாடி
அழுக்குத் தேங்கி.

என் கண்ணாடிச்சாளரத்தின் வெளியே...
காகங்களுடன் கரிக்குருவிகளும்
காய்த்துக் காய்ந்து விழும் இலைகளுடன்
காய்ந்தவைபோல்,
உவத்தவைபோல்,
இரவிற் கூடுதற்காய் ஊடுதல்போல்,
சுற்றிச் சுற்றி,
புள்நாட்டியம் ஆடும்,
குட்டை நீரில்,
முடியாக் கட்டிட மொட்டை விளிம்பில்,
மேலே, முகிலுக்குக் கீழே
முகத்திற்குத் தெரிந்த
மோனவெளி முழுவதுமே,
வெட்கமின்றி,
விடலை விரகம்,
கண் ஏறிச் சொக்கி.

என் அறைக் கண்ணாடிச்சாளரத்தின் வெளியே...
மனிதர்கள்,
தமது அறைக் கண்ணாடிச்சாளரங்களின் உள்ளே...
'தமது அறைக் கண்ணாடிச்சாளரங்களின் வெளியே...'
என்பது பற்றி ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பார்கள்,
எனக்கு,
உங்களுக்கு,
தமக்கு,
தம் விருப்பப்பட்டவர் எல்லோர்க்கும்.
அதில், எனது,
'என் அறைக் கண்ணாடிச்சாளரத்தின்
வெளியே...'
என்பது பற்றியும்
எங்கோ இடையில்
ஒரு வரி
ஏனோ
எழுதப்பட்டிருக்கும்.

ஆனால்,
அழுக்காய் வெளிவிம்பங்களைக் காணமட்டுமே
எமக்கு ஆக்ஞ்சை தரப்பட்டிருக்கிறது.
அணில்களின் புசுபசு வால் தடவல் உணர்தலுக்கு,
அறையுள்ளே மானுடன் எனக்குத் தடையுண்டு.
கண் தோன்றாது கீழே நகர், வீதி 'டிராம்' ஊர்தி
ஒலி கேட்பதற்கு
அறையுள்ளே மானுடர் எமக்கு தடையுண்டு.
காலைப் பனித்துளியுடன் கூடி விழும் விருட்சப்பூக்களின் மகரந்த
முகர்தலுக்கு
அறையுள்ளே மானுடன் எனக்கு தடையுண்டு.
மூலை உச்சப் பலகணி மூக்கை உரசும் இளம் இலை
தொங்கும் பனி சுவைக்க
அறையுள்ளே மானுடர் எமக்கு தடையுண்டு.

பலகணி உடைத்தெறிந்து,
வெளியெல்லாம் உள்விழுங்க,
உள்ளெல்லாம் வெளிப்பரப்ப,
சட்டம், கட்டாயச் சிறைப்பறவைகட்டு
உரிமை மறுத்து அறைச் சுவரில்
கட்டளைகள் பட்டியல் இட்டிருக்கும்.

தேடிக்கொண்டிருக்கிறேன்,
நாள் மறந்து
அறைக் கதிரைச் சுகத்துக்காய்த்
தொலைத்த
அறைக்கதவுத் திறவுகோலை;
அது கிடைக்காவிட்டால்,
என்னை வெளித் தூக்கியெறியும்,
இன்னொரு மறுப்புக் கட்டளையையேனும்.

-'99 ஜனவரி 07

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter