அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

துள்ளலும் துவையலும்

நண்பரே,
சற்றே நில்லும்;
அமரும் சிலநேரம் என் பக்கம் ஓய்ந்திருந்து;
ஆமாம், அப்படித்தான்;
இன்னும் கொஞ்சம் உடல் இளக்கி,
மெதுவாய் உள் இழுத்து மூச்சு
அதைவிடு மெதுவாய் வெளிவிட்டு;
சரி, நல்லது;
இப்போது, கேளும் என் குரல்;
சொல்லும் உம் பதில்.

ஏன் நாம் துள்ளவதை விட்டுத்
துணி துவைக்கப் போகக்கூடாது.
வெறுமனே வேலை வெட்டியின்றி
உடலுக்காய் மட்டும் ஊர்சுற்றி
எருமையுந்தான் துள்ளிப் போகிறது;
அது கண்டு நாம் தள்ளிப் போகிறோம்.
ஆக, துள்ளல் விட்டு,
எம் பணிவிடை செய்தலே
தம் கடன் என மனை கிடக்கும்
பெண்டிர் பிள்ளைகட்குதவியென்று,
இன்று ஒருநாள் என்றாலும்,
விதி வீதி விலக்கி, வேலையற்ற
வெறும் துள்ளல் வீட்டு வாயில் விட்டு,
அவர் உடுதுணியெல்லாம்
துவைத்துப் பார்த்தால்
என்ன என்று தோன்றாதோ உங்களுக்கு?
உடலுக்கு உறுதியென்றால்,
கால்தூக்கி வீதியெல்லாம்
துள்ளலும் ஒன்றுதான்;
கைதூக்கித் துணியெல்லாம்
துவைத்தலும் ஒன்றுதான்.
வேலையற்று வீதிவெளி வளிக்கு
வியர்வை சிந்துதற்கு, வீட்டுக்கு,
துணி தோய்த்தல், விறகு கொத்தல்,
ஒற்றைக்கு இரட்டையல்ல,
மேற்கொண்டு, மனைவி மக்கள்
மன மகிழ்ச்சிகொள் முப்படைப்
பயன் திருப்தி என்று படுகிறது
என் மனக்களத்திற்கு;
நாளைக்கும் துள்ளி ஓடவென்றால்,
ஐயா, என்னை மட்டும் வையாதீர்;
தூரத் தள்ளி வையும் மெய்யிற்கும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home